14 ஜனவரி 2020 அன்று வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்த சீன வெளிநாட்டமைச்சரும் அரச ஆலோசகருமான வாங் யி அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய அரசாங்கத்திற்கான சீனாவின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் உறுதிப்படுத்தினார்.
அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, கௌரவ வாங் யி அவர்களை வரவேற்றுப்பேசுகையில், இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் வழங்கிவரும் பங்களிப்புக்கும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச மன்றங்களில் அந்நாடு வழங்கும் ஆதரவுக்கும் நன்றிகளை தெரிவித்தார். பாதுகாப்பு, கல்வி மற்றும் சுற்றுலாத்துறைகளில் முக்கியமான உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கும், நேரடியான வெளிநாட்டு முதலீடு மற்றும் கூட்டுறவினை ஊக்கப்படுத்துவதற்குமான இலங்கையின் நோக்கத்தில் சீனாவின் ஈடுபாட்டின் முக்கியத்துவத்தையும் கோடிட்டுக்காட்டினார்.
2013 இல் இரு நாடுகளும் மேற்கொண்ட மூலோபாய கூட்டுறவுப் பங்குடைமையின் கட்டமைப்பின் கீழ் அடைந்த சாதனைகளை மதிப்பீடு செய்து, இலங்கையின் புதிய அரசாங்கத்தின் கீழ் உருவாகியுள்ள உகந்த சூழலை இரு நாடுகளும் சாதகமாக்கிக் கொள்ளவேண்டுமென்ற கருத்தை சீனா வெளிப்படுத்தியது.
அமைச்சர் வாங் யி, தான் ஜனாதிபதியை முன்னதாகவே சந்திக்க எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார். இந்த அரச விஜயமானது, இரு நாடுகளினதும் ஒத்துழைப்பை முன்னோக்கி நகர்த்துவதற்கான நடைமுறை மூலோபாயங்களைக் கண்டுபிடிப்பதற்கான புதிய உத்வேகத்தை வழங்குவதுடன், சீனா குறித்த இலங்கையின் வெளிப்படையான தன்மையை மேலும் விரிவாக்குவதனால் இலங்கைக்கு நன்மையளிக்கக்கூடிய வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா போன்றவற்றையும் ஊக்குவிக்கும்.
இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில், அமைச்சர் வாங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்தார்.
சீன வெளிநாட்டமைச்சருடன், ஆசிய திணைக்களத்திற்கான பணிப்பாளர் நாயகமான தூதுவர் வு ஜியாங் ஹாஓ தலைமையிலான பெய்ஜிங்கின் சிரேஷ்ட அதிகாரிகள் தூதுக்குழுவொன்றும் கலந்துகொண்டது. இப்பேச்சுக்களில், வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.