வெளிச்செல்லும் சுற்றுலாவுக்கான தனது முன்னோடித் திட்டத்தில் இலங்கையை சீனா பட்டியலிட்டுள்ளது

 வெளிச்செல்லும் சுற்றுலாவுக்கான தனது முன்னோடித் திட்டத்தில் இலங்கையை சீனா பட்டியலிட்டுள்ளது

2023 பெப்ரவரி 06ஆந் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் வெளிச்செல்லும் சுற்றுலா முன்னோடித் திட்டத்தில் இலங்கையும் இணைக்கப்படும் என சீனாவின் கலாச்சார மற்றும் சுற்றுலா அமைச்சு 2023 ஜனவரி 20ஆந் திகதி அறிவித்தது.

இந்தப் பட்டியலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாடுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளதுடன், இந்தப் பட்டியல் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான பிணைப்பின் பிரதிபலிப்பாகும். அத்தகைய பட்டியலில் இலங்கையும் இடம்பெற வேண்டும் என தூதரகம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து பேரழிவுகரமான வீழ்ச்சியை சந்தித்த இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு இப்போது விரைவாக மீள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. 2019 ஆம் ஆண்டில், 169 மில்லியன் சீனப் பிரஜைகள் சீன நிலப்பகுதிக்கு வெளியே பயணம் செய்துள்ளனர். இன்று சீனர்களிடையே பயணம் செய்ய வேண்டும் என்ற பெரும் ஆர்வம் உள்ளதுடன், ஏராளமானோர் விடுமுறைப் பயணத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்கான அதன் பன்முக முயற்சிகளைத் தொடர்கின்றது. இலத்திரனியல் (தொலைக்காட்சி) மற்றும் அச்சு ஊடகங்கள் (தேசிய நாளிதழ்கள் உட்பட) மற்றும் பரவலாகப் பிரபல்யமான டூயின், டிக்டொக் மற்றும் அலிபாபா ஆகிய சமூக ஊடகத் தளங்களும் இலங்கையை ஊக்குவிப்பதற்கு தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகின்றன. தூதரகம் 12 முன்னணி பயண இயக்குனர்களுடன் தூதரக உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் உலகப் புகழ்பெற்ற பௌத்த தலங்கள், ஏராளமான வனவிலங்குகள், தேயிலையால் மூடப்பட்ட மலைகள், விலைமதிப்பற்ற கற்கள், அழகிய கடற்கரைகள், விருந்தோம்பல் போன்றவற்றை உள்ளடக்கிய இலங்கையின் சுற்றுலாத் தலங்களை சிறப்பித்துக் காட்டும் திரைப்படத்தை படமாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் மேம்பட்ட நிலையில் உள்ளன.

சீன அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை தூதரகத்தின் பொறுப்பாளர் கே.கே. யோகநாதன் வரவேற்றுள்ளார். இலங்கை மிகவும் பிரபலமான வெப்பமண்டல இடமாக இருப்பதால், குறிப்பாக குளிர்கால மாதங்களில் இலங்கையைத் தெரி;வு செய்யுமாறு அவர் சீனப் பயணிகளை ஊக்குவித்தார்.

மீண்டும் எழுச்சி பெறும் சுற்றுலாத் துறையானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு வரவேற்கத்தக்க ஊக்கமாக அமையும் எனத் தெரிவித்த தூதுவர் கலாநிதி கொஹொன, முன்னோடித் திட்டத்தில் இலங்கையை இணைத்தமைக்காக சீன அரசாங்கத்திற்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

தாய்லாந்து, இந்தோனேசியா, கம்போடியா, மாலைதீவு, இலங்கை, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், லாவோஸ், ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து, கென்யா, தென்னாபிரிக்கா, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, ஹங்கேரி, நியூசிலாந்து, பிஜி, கியூபா மற்றும் ஆர்ஜென்டினா ஆகியன சீன அரசாங்கத்தால் பயணம் செய்வதற்காக பட்டியலிடப்பட்டுள்ள நாடுகளாகும்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2023 ஜனவரி 24

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close