இலங்கையை ஆசியான் துறைசார் உரையாடல் பங்காளராக விரைவில் உள்ளடக்குமாறு வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க அழைப்பு விடுத்துள்ளார்

இலங்கையை ஆசியான் துறைசார் உரையாடல் பங்காளராக விரைவில் உள்ளடக்குமாறு வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க அழைப்பு விடுத்துள்ளார்

Pic1

ஆசியான் மற்றும் அதன் உறுப்பு நாடுகளுடனான ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்காக, இலங்கையை ஆசியான் துறைசார் உரையாடல் பங்காளராக சேர்க்க ஆசியான் முன்கூட்டியே முடிவு செய்ய வேண்டும் என்று வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்க வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8, 2019) அழைப்பு விடுத்தார். இது மார்ச் 2019 இல் ஆசியானுக்கு மேற்கொள்ளப்பட்ட இலங்கையின் துறைசார் உரையாடல் பங்காண்மைக்கான சமர்ப்பிப்பைத் தொடர்ந்து இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் நடைபெற்ற ஆசியான் தின நினைவு நிகழ்வில் உரையாற்றிய வெளிவிவகார செயலாளர் இந்த கோரிக்கையை விடுத்ததுடன், ஒரு சிறந்த சந்தர்ப்பத்தில் இலங்கை அரசாங்கத்தின் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தோனேசிய தூதுவர் குஸ்டி நுரா அர்தியாசாவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் மலேசியா, மியன்மார், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள் / உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதரக உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், வர்த்தக சமூகம் மற்றும் நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டனர். இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தாய்லாந்தில் உள்ள ஆசியான் பிராந்திய மன்றத்தில் இருந்து நாடு திரும்பியுள்ளமை மற்றும் ஜனாதிபதி கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை ஆகியன ஆசியான் பிராந்தியத்துடனான உறவுகளை பேணுவது இலங்கைக்கு முக்கியமானது என்பதற்கு சான்றுகளாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் வரலாற்று நிகழ்வுகள் மற்றும் ஆசியான் நாடுகளுடனான பௌத்தம், கடல்சார் தொடர்புகள், பொருளாதார நடவடிக்கைகள், மக்களுக்கு இடையிலான தொடர்பு மற்றும் பிற வழிகள் போன்றவற்றின் வாயிலான இலங்கையின் ஈடுபாடுகள் ஆகியவற்றை குறிப்பிட்டு,  ஆரம்ப காலத்திலிருந்தே இலங்கை ஆசியான் பிராந்தியத்துடன் ஒருங்கிணைக்கப்படுவதற்கான ஆர்வத்தினை காட்டி வந்துள்ளது என்பதற்கு சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ஆதாரங்கள் உள்ளதாக வெளிவிவகார செயலாளர் ஆர்யசிங்க குறிப்பிட்டார். 1947 இல் புது டில்லியில் நடந்த ஆசிய உறவுகள் மாநாட்டில் ஆசிய உறவுகள் அமைப்பை நிறுவுவதற்கான தீர்மானத்தை கூட்டாக ஏற்றுக்கொள்வதன் மூலம் பிராந்தியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளை பிராந்திய பொறிமுறையின் மூலம் ஒன்றிணைப்பதற்கான இலங்கையின் விருப்பம் முதன் முதலில் வெளிப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, 1954 இல் நடந்த கொழும்பு அதிகார மாநாட்டின் மூலமாகவும், 1961 இல் அப்போதைய எதிர்க்கட்சி உறுப்பினர் ஜே. ஆர். ஜெயவர்தன அவர்களால் நகர்த்தப்பட்ட பிரத்தியேக நபர்களின் மசோதா மூலமாகவும் ஆசியான் உருவான 1967 காலப்பகுதியில் ஆர்வம் காட்டப்பட்டதுடன், அதன் பின்னர் பல சந்தர்ப்பங்களில் இலங்கை இந்த நோக்கினை வெளிப்படுத்தியது.

ஒரு துறைசார் உரையாடல் பங்காளியாக இலங்கை 'உங்கள் பிராந்தியத்துடனும் உங்கள் மக்களுடனும் நாங்கள் கொண்டிருந்த வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க பங்காண்மையைத் தொடர' தேவையான வழிமுறையை வழங்கும் என்றும், இலங்கையின் ஒற்றுமை மற்றும் ஆசியானுடனான பங்காண்மை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தும் மற்றும் உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கையின் விண்ணப்பத்தைத் தொடர அந்தந்த ஆசியான் நாடுகளுடன் இணைந்து பணியாற்ற இலங்கை எதிர்பார்த்துள்ளது என்றும் வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டார்.

நிகழ்வின் போது, ஆசியானின் தற்போதைய தலைவரான தாய்லாந்தின் தூதுவர் சூலாமணி சார்ட்சுவான் ஆசியானின் குறிக்கோளை எடுத்துரைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் உலகின் நான்காவது பெரிய பொருளாதார பிராந்தியமாக மாறும் என்று சிலர் கணித்துள்ள ஆசியானை ஒரு விதி அடிப்படையிலான மக்கள் மைய அமைப்பாக நிர்வகிக்கும் முக்கிய காரணிகளை வலியுறுத்தினார்.

2007 ஆம் ஆண்டில் இலங்கை ஆசியான் பிராந்திய மன்றத்தில் சேர்ந்ததுடன், அதற்கு முன்னர் அதே ஆண்டில் ஆசியானின் நல்லுறவுக்கான உடன்படிக்கைக்கு உள் நுழைந்திருந்தது. ஜகார்த்தாவில் உள்ள தூதுவர் முதன்முதலில் ஜூலை 2016 இல் ஆசியானுக்கு அங்கீகாரம் பெற்றார்.

 

 

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2019 ஆகஸ்ட் 08

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close