துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் அங்காரா ஆளுநருடன் சந்திப்பு

துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் அங்காரா ஆளுநருடன் சந்திப்பு

துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் எஸ். ஹசந்தி உருகொடவத்த திஸாநாயக்க அண்மையில் அங்காராவின் ஆளுநர் வாசிப் சாஹினைச் சந்தித்ததுடன் துருக்கிக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பயனுள்ள கலந்துரையாடலை மேற்கொண்டார்.

ஓட்டோமான் பேரரசின் போது, 1864ஆம் ஆண்டு இலங்கைக்கான கௌரவத் தூதுவரை காலியில் வதியும் வகையில் நியமித்தமை முதல் தொடங்கிய இலங்கையின் நீண்டகால இருதரப்பு முறையான உறவுகளை தூதுவர் திஸாநாயக்க நினைவு கூர்ந்தார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்ட 75வது ஆண்டு விழா, இலங்கையின் 75வது சுதந்திர தினம் மற்றும் துருக்கியின் குடியரசு தினத்தின் 100வது ஆண்டு நிறைவை இரு நாடுகளும் கொண்டாட உள்ளதால், துருக்கி மற்றும் இலங்கைக்கான 2023ம் ஆண்டின் முக்கியத்துவத்தை தூதுவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் இலங்கைக்கும் துருக்கிக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் துருக்கிக்கான இலங்கையின் முக்கியத்துவம் குறித்து ஆளுநர் வசிப் சாஹின் வலியுறுத்தினார்.

இந்த சூழலில், வரலாற்று உறவுகளை கருத்தில் கொள்வது முக்கியம் என்றாலும், பொருளாதார ஒத்துழைப்பிற்கு அப்பால் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் என்று ஆளுநரும் தூதுவரும் ஒப்புக்கொண்டனர்.

இச்சந்திப்பின் போது, தூதுவர் திஸாநாயக்க மற்றும் அங்காரா ஆளுநர் வசிப் சாஹின் ஆகியோர், இலங்கையுடனான இருதரப்பு வர்த்தகத்தில் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்ற துருக்கியின் இலக்கை எட்டுவதற்கு பங்களிக்கும் தேயிலையின் அளவு உட்பட இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்து கலந்துரையாடினர். அதிக வரிகள் காரணமாக இலங்கையின் பெறுமதி கூட்டப்பட்ட பிரத்தியேக தேயிலைகளை அனுபவிக்கும் வாய்ப்பை துருக்கி இழப்பதாக தூதுவர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தூதரகம் ஏற்கனவே துருக்கிய எயார்லைன்ஸுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

மேலும் தூதுவர் 2004 சுனாமியின் பின்னர் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை  வழங்கியதன் மூலம் துருக்கியின் தாராள மனப்பான்மையை பாராட்டினார் மற்றும் 2022 இல் சமீபத்தில் மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்கினார். குறிப்பாக இலங்கையர்களுக்கான ஹோட்டல் மற்றும் கட்டுமானத் துறையில் துருக்கியில் அதிகரித்து வரும் வாய்ப்புக்களும் பாராட்டப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 75 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளைக் கொண்டாடும் விதமாக அங்காரா மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையே சகோதர நகர ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் தூதுவர் முன்மொழிந்ததுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அதைத் தொடருவதற்கு ஆளுநர் விருப்பம் தெரிவித்தார்.

அங்காராவிலான பதவிக் காலத்தின் போது தூதுவரின் அனைத்து முயற்சிகளுக்கும் தனது உதவியையும் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக ஆளுநர் உறுதியளித்தார்.

இலங்கைத் தூதரகம்,

அங்காரா

2023 ஜனவரி 17

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close