ஜோர்தான் ஹஷெமைட்இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.ஏ.டி.எஸ். பிரியங்கிகா விஜேகுணசேகர 2023 ஜனவரி 23ஆந் திகதி ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
ஜோர்தானில் உள்ள தூதரகத்தை வந்தடைந்ததும், தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கிகா விஜேகுணசேகர, ஊழியர்களால் வரவேற்கப்பட்டார். தூதுவர் மற்றும் ஏனைய ஊழியர்களினால் சம்பிரதாய விளக்கேற்றலுடன் ஆரம்பமான எளிமையான வைபவத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றதுடன், இலங்கையின் பாரம்பரிய உணவு வகைகளும் வழங்கப்பட்டன.
ஊழியர்களிடம் உரையாற்றிய நியமனம் செய்யப்பட்ட தூதுவர் பிரியங்கிகா விஜேகுணசேகர, ஊழியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவடைந்து ஒத்துழைப்பின் புதிய காட்சிகளாக விரிவடையும் என நம்பிக்கை தெரிவித்தார். ஜோர்தானில் இலங்கையின் விம்பத்தையும், நலன்களையும் மேம்படுத்தும் நோக்கில் இலங்கை சமூகத்துடன் எப்போதும் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் தூதுவராக நியமிக்கப்பட்டவர் எடுத்துரைத்தார்.
கென்யா, லெபனான் மற்றும் டொராண்டோவில் உள்ள இலங்கை தூதரகங்களிலும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள், வெளிநாட்டு நிர்வாகம், தெற்காசியா மற்றும் சார்க் பிரிவுகளிலும் பணியாற்றியுள்ள நியமனம் செய்யப்பட்ட தூதுவர் பிரியங்கிகா விஜேகுணசேகர இலங்கை வெளிநாட்டு சேவையில் 20 வருடங்கள் பணியாற்றியவராவார்.
அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகமயமாக்கல் மற்றும் இலங்கையின் களனி பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் ஆகியவற்றில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
இலங்கைத் தூதரகம்,
ஜோர்தான்
2023 ஜனவரி 25