பெல்ஜியம் மற்றும் லக்சம்பேர்க்கிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம், லக்சம்பேர்க்கின் வெளிவிவகார மற்றும் ஐரோப்பிய விவகார அமைச்சின் செயலாளர் நாயகம் ஜீன் ஓலிங்கரை 2023 ஜனவரி 03ஆந் திகதி லக்சம்பேர்க்கில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்த தூதுவர் ஆசிர்வதம், நாட்டில் நீடித்த பொருளாதார மீட்சி மற்றும் துரிதமான சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்தும் தெரிவித்தார். முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவாக மீள்வதற்கான இலங்கையின் தீர்மானத்தை பொதுச்செயலாளர் ஓலிங்கர் பாராட்டியதுடன், இலங்கையில் நடைபெற்று வரும் பொருளாதார மீட்சி உந்துதலுக்கு பங்களிப்பதற்காக லக்சம்பேர்க்கில் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கான சந்தை வாய்ப்புக்களை ஆராயுமாறு இலங்கைக்குப் பரிந்துரைத்தார்.
இலங்கைக்கும் லக்சம்பேர்க்கிற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டதுடன், இரு நாடுகளினதும் பரஸ்பர நன்மைக்காக நிலுவையில் உள்ள இருதரப்பு ஏற்பாடுகளை விரைவுபடுத்த ஒப்புக்கொண்டனர்.
இலங்கையின் 75வது சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவு ஆகிய இரட்டை நிகழ்வுகளை நினைவுகூரும் வகையிலான லக்சம்பேர்க்கில் தூதரகத்தின் தீர்மானத்தைப் பாராட்டினார். இவ்வாறான சந்தர்ப்பம் லக்சம்பேர்க்கில் இலங்கை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
இலங்கைத் தூதரகம்
பிரஸ்ஸல்ஸ்
2023 பிப்ரவரி 06