இலங்கையின் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையின் 73வது அமர்வில் நிகழ்த்தப்பட்ட உரை - 2018 செப்டெம்பர் 25, நியூயோர்க்

இலங்கையின் அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையின் 73வது அமர்வில் நிகழ்த்தப்பட்ட உரை – 2018 செப்டெம்பர் 25, நியூயோர்க்

3-1

உங்கள் அனைவருக்கும் உன்னதமான மூன்று ரத்தினங்களின் ஆசீர்வாதம் உரித்தாவதாக!

கௌரவ தலைவர் அவர்களே,

கௌரவ செயலாளர் நாயகம் அவர்களே,

கௌரவ அரச தலைவர்களே,

கௌரவ பேராளர்களே,

நண்பர்களே,

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி தொடர்ச்சியான நான்காவது முறையாக ஐக்கிய நாடுகள் பொதுப் பேரவையின் 73வது அமர்வில் பங்குபற்றுவதனையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன். ஐக்கிய நாடுகளின் ஒரு அங்கத்துவ நாடென்ற வகையில் இலங்கை அதன் அனைத்து பட்டயங்கள், சாசனங்கள் மற்றும் உடன்படிக்கைகளுக்கு கட்டுப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையாக ஈடுபட்டுள்ளது.

அரச தலைவர் என்ற வகையில், இலங்கையினாலும், எனது அரசாங்கத்தினாலும் கடந்த மூன்றரை ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளை குறிப்பிடுவது தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். 2015 ஜனவரியில் நான் தற்பொழுது கொண்டிருக்கும் நிறைவேற்று பதவியான அரசின் தலைவராக மக்களால் தெரிவு செய்யப்பட்ட போது, அது மன்னர் அல்லது பேரரசர் ஒருவரின் அதிகாரங்களுடன் ஒப்பிடக்கூடிய மிகையான அதிகாரங்களையுடையதாக காணப்பட்டது. குறித்த மிகையான பேரரசருக்கு இணையான அதிகாரங்களை கைவிட்டு, தெரிவு செய்யப்பட்ட தலைவரின் முக்கியமான கடமை என்ற வகையில் அதனை இலங்கை பாராளுமன்றத்திற்கு பரிமாற்றுவதற்கு எனக்கு இயலுமாக இருந்தமையை நான் பணிவுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

கடந்த மூன்றரை ஆண்டுகளில், எனது நாட்டில் ஜனநாயகம் வலுவூட்டப்பட்டுள்ளது. மேலும், மனித உரிமைகள், மக்களினதும், ஊடகத்தினதும் சுதந்திரம் மற்றும் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை போன்றன வலுவூட்டப்பட்டுள்ளன. ஆதலால், இன்று காணப்படுகின்ற இலங்கை, மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் காணப்பட்ட இலங்கை அல்ல. தற்போதைய இலங்கை மிகவும் உள்ளடக்கமானதும், மனிதாபிமானமிக்கதுமான ஒரு சமுதாயமாக இருக்கின்றது என்பதனை என்னால் தெளிவாக கூறிக்கொள்ள முடியும்.

ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடு என்ற வகையில், மனித இனத்தினால் முகங்கொடுக்கப்பட்ட சமகால அரசியல் அபிவிருத்திகள், பொருளாதார வேறுபாடுகள் மற்றும் பொதுவான சவால்கள் குறித்து கரிசணை கொள்வது எமது கடமையும், பொறுப்பும் ஆகும். சர்வதேச அரசியல் அபிவிருத்திகள் மற்றும் போக்குகள் குறித்து குறிப்பிடும் போது, உலகலாவிய ரீதியில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக, சர்வதேச பிரச்சினையாக மாறியுள்ள அகதிகள் தொடர்பில் நாங்கள் குறிப்பாக எமது கவனத்தினை செலுத்துதல் வேண்டும். ஆதலால், ஐக்கிய நாடுகள் தாபனம், அதன் அங்கத்துவ நாடுகள் மற்றும் அகதிகளின் பிரச்சினைகளை கையாளும் ஏனைய சர்வதேச அமைப்புக்களின் முயற்சிகள் பரந்துபட்டதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் அமைதல் வேண்டும்.

இலங்கை தனது வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பில் மிதமான கொள்கைகளை பின்பற்றும் ஒரு நாடாகும். நாங்கள் அணிசேரா இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஆவோம். மிகவும் வெற்றிகரமானவற்றில் ஒன்றாக கருதப்படும் 1976ஆம் ஆண்டின் அணிசேரா உச்சிமாநாடு இலங்கையில் இடம்பெற்றது. அணிசேரா கொள்கையின் கட்டமைப்பிற்குள், நாங்கள் உலகின் அனைத்து நாடுகளையும் எமது நண்பர்களாகவே கருதுகின்றோம். சமகால உலகுடன் இலங்கை எந்தவொரு விரோதத்தையும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றேன்.

சர்வதேச அரசியல் பிரச்சினைகளை கலந்தாலோசிக்கும் பொழுது, நாங்கள் பலஸ்தீன மக்களின் பிரச்சினைகளை குறிப்பாக குறிப்பிடுதல் வேண்டும். இந்த பிரச்சினைகளை ஐக்கிய நாடுகள் தாபனமும், உலகின் அதிகார பீடங்களும் பாரிய புரிந்துணர்வுடன் அணுகுதல் வேண்டும் என நான் நம்புகின்றேன். பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இலங்கையின் வெற்றிகரமான அரசாங்கங்கள் ஆதரவு நல்கியுள்ளன. பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக ஆலோசிக்கையில், ஐக்கிய நாடுகள் தாபனமும், அதன் உறுப்பு நாடுகளும் மிகவும் மனிதாபிமானமிக்க அணுகுமுறையொன்றை கடைப்பிடித்தல் வேண்டும் என்பதுடன், அவர்கள் முகங்கொடுத்துள்ள மனிதாபிமானமற்ற நிலைமைகளை கருத்தில் கொண்டு, இந்த விடயத்தினை பரந்துபட்ட முறைமையில் அணுகுதல் வேண்டும்.

உலகை பாதிக்கும் அடிப்படை பிரச்சினைகளில் ஒன்றாக வறுமை விளங்குகின்றது என்பதனை நாம் அனைவரும் அறிவோம். வறுமை தொடர்பான பிரச்சினைகளை குறிப்பிடுவதற்கு ஐக்கிய நாடுகள் தாபனம் அதிகமாக செயற்பட முடியும் என நான் கருதுகின்றேன். இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் உலகளாவிய ரீதியில் பசியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது எம் அனைவருக்கும் தெரியும். காலநிலை மாற்றம், வருமான வேறுபாடுகள் மற்றும் தமது பிரஜைகள் தொடர்பிலான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் அரசாங்கங்கள் கொண்டுள்ள குறைபாடுகள் போன்றன வறுமைக்கான அடிப்படைக் காரணிகளுள் சிலவாகும். பொருளாதாரத்தில் காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள எதிர்மறையான தாக்கங்கள் இந்த பிரச்சினையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. ஆதலால், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவிகளை நல்கி, ஆதரவளிப்பது மிகவும் முக்கியமானதாகும். உலகை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் வறுமையே மத்திய வகிபாகத்தினை கொண்டுள்ளது என்பதனை நான் குறிப்பிடுதல் வேண்டும்; அத்துடன் ஆயுதக்கடத்தல், சட்டவிரோத போதை மருந்து வகைகள் மற்றும் போதைவஸ்த்துக்கள் போன்றனவும் மனிதநேயத்திற்கான சவால்களாக தோன்றியுள்ளன.

இந்த சூழலில், ஐக்கிய நாடுகள் தாபனத்திற்கும் ஐக்கிய அமெரிக்க தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கும் இடையில் 'உலக போதை பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக உலகிற்கான அழைப்பு' என்ற விடயத்தில் நேற்று உடன்பாடு எட்டப்பட்டமை தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். முக்கியமானதொரு விடயம் என்ற அடிப்படையில், அனைத்து நாடுகளும் ஐக்கிய நாடுகளின் உதவியுடன் சட்டவிரோத போதை மருந்துகளுக்கு எதிராக போராடுவதற்கு அதிகமாக செயற்படுதல் அவசியமாகும்.

ஐக்கிய நாடுகளின் செயற்பாட்டு கட்டமைப்பிற்குள், மனித நேயம் மற்றும் ஏனைய உயிரினங்கள், எமது நீரோடைகள் மற்றும் ஆறுகள் மற்றும் முழுமையான பூமி ஆகியவற்றின் நலனுக்காக, முன்னாள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பன் கீ - மூன் அவர்களினால் இறுதியாக்கம் செய்யப்பட்ட காலநிலை மாற்றம் மீதான பரிஸ் உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விளைவுகளை நடைமுறைப்படுத்துவதனை நோக்கி நாங்கள் அனைவரும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் செயற்படுதல் வேண்டும். இந்த பெருமுயற்சிகளுக்காக ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை தனது அதி முக்கியத்துவத்தை வழங்குகின்றது என்பதனை நான் குறிப்பிடுதல் வேண்டும்.

எனது நேசத்திற்குரிய தாய்நாட்டின் சர்வதேச விடயங்கள் தொடர்பில் குறிப்பிடுகையில், நான் முன்னர் குறிப்பிட்டது போல, நாட்டில் ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றை நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் எமது நாட்டில் காணப்பட்ட நிலைமை தொடர்பிலும், அண்ணளவாக முப்பது ஆண்டுகளாக நீடித்த ஆயுதப் போரட்டம் தொடர்பிலும் நாங்கள் பிரதிபலிப்புச் செய்தல் வேண்டும். பயங்கரவாதம் மற்றும் ஆயுதப் போராட்டம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த பத்து ஆண்டுகளில், நாங்கள் பரந்தளவான மறுசீரமைப்புக்களை மேற்கொண்டுள்ளோம். குறிப்பாக எனது அரசாங்கம் போராட்டத்திற்கு பின்னரான பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதனையும், போராட்டம் மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதனையும் குறிக்கோளாகக் கொண்ட பல நிகழ்ச்சிகளை நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தியும் வருகின்றோம். எமது மனித உரிமை கடப்பாடுகளை பூரணப்படுத்தியுள்ளதும், தொடர்ச்சியாக பூரணப்படுத்தி வருவதுமான ஒரு நாடென்ற வகையில், எமது முயற்சிகளில் எமக்கு தொடர்ச்சியாக உதவுமாறு ஐக்கிய நாடுகளையும், அதன் ஏனைய அனைத்து உறுப்பு நாடுகளையும் மரியாதையுடன் கோரிக்கை செய்கின்றோம்.

மிகவும் கருணையற்ற உலகின் பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்றை இலங்கையின் பாதுகாப்புப் படையினர் வெற்றிகொண்டுள்ளனர். அதன் விளைவாக, இலங்கை நீடித்த சமாதானத்தை அனுபவிக்கும் பிரிவினையற்ற நாடாக விளங்குகின்றது. ஆதலால், அச்சமூட்டக்கூடியதொரு பயங்கரவாத அமைப்பை வெற்றிகொள்வதற்காக எமது பாதுகாப்புப் படையினரால் வழங்கப்பட்ட பெரும் மதிப்பு மிக்க சேவையை நான் கட்டாயம் நினைவு கூர வேண்டியதுடன், சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவும், இலங்கையின் ஆட்புல ஒருங்கிணைவை உறுதிப்படுத்துவதற்காகவும் எமது பாதுகாப்பு படையினர் நல்கிய பாரிய தியாகங்களுக்கு நான் இந்த சந்தர்ப்பத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். போராட்டம் நிறைவடைந்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், எனது நாட்டை புதிய எண்ணங்களுடன் கூடிய புதிய முன்னோக்கில் நோக்குமாறு நான் சர்வதேச சமூகத்தினருக்கு அழைப்பு விடுக்கின்றேன். எனது உன்னதமான தாய்நாடு தொடர்பில் தங்கள் அனைவரினதும் கருத்துக்களை மீள் புதுப்பித்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதுடன், கொடிய போராட்டத்தின் பின்னர் சமாதானத்தை பின்பற்றும்; தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும்; தேசிய ஒற்றுமையை கொண்டிருக்கும்; மற்றுமொரு போராட்டம் மீள இடம்பெறுவதனை தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ள மற்றும் முன்னெடுத்து வரும்; மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்து, மேம்படுத்தும் ஒரு நாடென்ற வகையில், பொருளாதார அபிவிருத்தி, செழிப்பு மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் ஆகியவற்றை அடைந்து கொள்வதற்கு எமக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

எமது சொந்தப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தினை எமக்கு வழங்குமாறு நான் கௌரவமாக கேட்டுக்கொள்கின்றேன். ஒரு நாட்டின் சுதந்திரம் தலையாய முக்கியத்துவமானதாகும். ஜனநாயகத்தை வலுப்படுத்தி, மனித அபிவிருத்தியை மேம்படுத்துவது உள்ளடங்கலாக எமது முயற்சிகளுக்கு, எமது இறையாண்மைக்கு மதிப்பளிக்கும் வகையிலான உங்கள் ஆதரவினை நான் எதிர்பார்க்கின்றேன். ஒரு சுதந்திரமான நாடென்ற வகையில், எமக்கு சர்வதேச தலையீடுகளோ அல்லது அச்சுறுத்தல்களோ தேவையில்லை. ஒரு பலமான நாடென்ற வகையில், எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கும், ஒரு சுதந்திரமான நாடாக செயற்படுவதற்கும் தேவையான பரப்பிற்கு எம்மை அனுமதிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். இந்தச் சூழலில், இலங்கையர்கள் என்ற ரீதியில் எமது சொந்த பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்வதற்கு எமக்கு உதவிகளை வழங்கி, ஆதரவளிப்பதற்கான எமது கோரிக்கையை நான் மீண்டுமொருமுறை மீள வலியுறுத்திக் கொள்கின்றேன். எமது நேசத்திற்குரிய தாய்நாட்டில் வாழ்கின்ற சமூகங்களுக்கு மத்தியில் நிலவும் அச்சம் மற்றும் சந்தேகத்தினை போக்கிக் கொள்வதற்கும், பாரிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்குமான எனது அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தங்கள் ஆதரவினை வழங்குமாறு நான் மேலும் கேட்டுக் கொள்கின்றேன்.

நான் முன்னர் குறிப்பிட்டது போல, இலங்கை மற்றும் உலகில் வாழும் வறுமையினால் வாடும் மக்களின் பிரச்சினைகளை குறிப்பிடுவது மிகவும் முக்கியமானதாகும். இளம் சந்ததியினரின் கருத்துக்கள் மற்றும் எண்ணங்களை கருத்தில் கொண்டு, அவர்களின் பிரச்சினைகளுக்கு நாங்கள் அவசியம் தீர்வுகளை கண்டறிதல் வேண்டும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தையும் கவனத்தில் கொண்டு, திரிபீடகத்தின் சம்யுக்த நிகாயவின் சல்ல சுத்தவில் புத்தர் குறிப்பிட்டுள்ள கருத்தாகிய 'அம்பினால் எய்யப்பட்ட ஒரு மனிதன் இரண்டு முறைகளில் பாதிக்கப்படுகிறான்: ஒன்று அம்பினால் ஏற்பட்ட உடல் வலி, மற்றையது, குறித்த நிகழ்வை மீண்டும் நினைக்கையில் தோன்றும் மன உழைச்சல்' என்பதனை இறுதியாக குறிப்பிட விரும்புகின்றேன். அதே போன்றே, இலங்கை மக்களும் நீடித்த போராட்டத்தினால் ஏற்பட்ட உடல் வலி மற்றும் குறித்த எதிர்பாராத அனுபவங்களை மீண்டும் நினைக்கையில் தோன்றும் மன உழைச்சல் ஆகிய இரண்டினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆதலால், வேறு யாருமன்றி இலங்கை மக்களே இந்த வலியிலிருந்து விடுபட வேண்டியவர்களாவர். இறுதியாக, எனது மக்கள் கொண்டிருக்கும் வலியை போக்கிக் கொள்வதற்கான, நீதி, நியாயம், சமத்துவம் மற்றும் பொருளாதார செழிப்புடன் கூடிய மனித சமூகம் ஆகியவற்றை நோக்கிய செயற்பாடுகளுக்காக எனது மக்களுக்கும், நாட்டிற்கும் ஆதரவளிக்குமாறு நான் அனைவரையும் கௌரவமாக கேட்டுக் கொள்கின்றேன்.

நன்றி. உங்கள் அனைவருக்கும் உன்னதமான மூன்று ரத்தினங்களின் ஆசீர்வாதம் உரித்தாகட்டும்.

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close