மேதகு தலைவர்களே,
கௌரவப் பிரதிநிதிகளே,
பெண்களே மற்றும் ஆடவர்களே,
ஐக்கிய நாடுகள் சபையால் அழகிய நகரமான நீஸில் ஏற்பாடு செய்யப்பட்ட இம்முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து இலங்கை பெருமை கொள்கிறது. பல்தரப்பு கடல் நிர்வாகமனது, முக்கியமானதொரு திருப்புமுனையில் நிற்கும் இத்தருணத்தில், இவ்வுயர்மட்ட பெருங்கடல் மாநாட்டைக் கூட்டுவதில் தலைமை தாங்கியமைக்காக, இலங்கை அரசு, பிரான்ஸ் மற்றும் கொஸ்டா ரிகாவிற்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இன்று, உலகளாவிய சமூகம் நமது பெருங்கடல்களுக்கு நிலைபேறானதும், சகல விடயங்களையும் உள்ளடக்கியதுமான பாதையொன்றை வகுப்பதற்கான முயற்சியை முன்னெடுக்கும் நிலையில், நிலைபேறானதொரு அபிவிருத்திக்காக பெருங்கடல்கள், கடல்கள் மற்றும் கடல் வளங்களைப் பாதுகாத்து, வளங்குன்றாத முறையில் பயன்படுத்துவது குறித்து, நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) 14 இல் விதந்துரைக்கப்பட்டுள்ளவாறு, பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் இலங்கையானது தனது முழுமையான ஆதரவை வழங்கி நிற்கிறது.
தீவு நாடொன்றாகிய எமக்கு கடலானது உயிர்நாடியாக விளங்குகிறது. கடல்சார் வளங்களை வளங்குன்றாத முறையில் பயன்படுத்துதல், பொறுப்பான கடல் நிர்வாகம் மற்றும் மனிதகுலத்தின் பொதுவான பாரம்பரியத்தின் பகுதியொன்றாக கடல் பல்லுயிர்வகைமையைப் பாதுகாத்தல் குறித்து நாம் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். எமது மக்கட்தொகையில் 32% க்கும் அதிகமானோர் கடலோரத்தில் வாழ்கின்றனர்; மேலும் நமது சுற்றுலா மற்றும் மீன்வளப் பொருளாதாரத்தில் 80% ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் கட்டமைப்புகளைச் சார்ந்துள்ளது.
பேரிடர் அபாயத்தைக் குறைப்பதற்கும், கடல் உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பதற்கும், கடல்சார் மதிப்புச் சங்கிலிகளை மேம்படுத்துவதற்கும், நிலம், கடற்கரை மற்றும் கடல் நிர்வாகத்தை இணைக்கும் துணிச்சலானதும், ஒருங்கிணைந்ததுமான "அடி முதல் நுனி வரையிலான" அணுகுமுறையே எமது தெரிவாகும்.
இருதரப்பு மற்றும் பல்தரப்பு பங்குதாரர்களுடனான வலுவான கூட்டாண்மைகள் மூலம் கடல்சார் ஆரோக்கியம் மற்றும் கடல்சார் நிர்வாகத்தை முன்னேற்றுவதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் பொருளாதார வளர்ச்சியை சமநிலைப்படுத்த, எமது கடல் முதலீட்டுத் திட்டம் மற்றும் காலநிலை நிதி உத்தி போன்ற மூலோபாய கட்டமைப்புகளால் ஆதரிக்கப்படும் நிலைபேறான கடல்சார் முதலீடுகளை நாம் தீவிரமாக ஊக்குவிக்கிறோம். மேம்பட்ட கப்பல் கண்காணிப்பு, சட்டவிரோத மீன்பிடித்தலுக்கு எதிரான சட்டச் சீர்திருத்தங்கள் மற்றும் பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆதரவுடன் நிறுவப்பட்ட கடல்சார் பாதுகாப்புக்கான பிராந்திய மையம் போன்ற முன்முயற்சிகள் மூலம் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை மேம்படுத்துவது முன்னுரிமையாக உள்ளது. சதுப்புநில மறுசீரமைப்புக்கான சர்வதேச அங்கீகாரம் மற்றும் கடல் புல் மற்றும் பிற முக்கியமான கடல் சுற்றுச்சூழல் கட்டமைப்புகளின் பாதுகாப்பை ஆதரிக்கும் எமது முயற்சிகளில், பாதுகாப்பு தொடர்பில் நமது தலைமை பிரதிபலிக்கிறது. இச்சூழலில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாடு (UNCLOS), பாரிஸ் ஒப்பந்தம், உலகளாவிய பல்லுயிர்க் கட்டமைப்பு மற்றும் கோபன்ஹேகன் பிரகடனம் ஆகியவற்றின் கீழ் உலகளாவிய கடல் நிர்வாகத்திற்கான அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இக்கட்டமைப்புகள் நிலைபேறான கடல்சார் அபிவிருத்தி, காலநிலை மீள்தகவு மற்றும் கடல் நீதிக்கான நமது தேசிய தொலைநோக்கை வழிநடத்துகின்றன.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் சங்கத்தின் (IORA) தற்போதைய தலைவராக, இலங்கை கடல் நிர்வாகத்திற்கான பிராந்தியக் கூட்டுறவு அணுகுமுறையை ஆதரிக்கிறது.
மேதகு தலைவர்களே,
கடற்சுகாதாரம் மற்றும் நிர்வாகத்தில் நாம் எதிர்கொள்ளும் சவால்கள் மகத்தானவை; எல்லைமீறிய கடல் மாசுபாடு மற்றும் அதிகார வரம்புகளைத் தாண்டிய பெருகிவரும் அச்சுறுத்தலொன்றாகும். உலகளாவிய ஒப்பந்தத்திற்கான INC 5.2 பேச்சுவார்த்தைகளில் பிளாஸ்டிக் மாசுபாடு முக்கியமானதொரு முன்னுரிமையாக வெளிப்பட்டுள்ளது. கடற்சூழல் அமைப்புகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க அதன் முழுமையான பாவணைச்சுழற்சியை உள்ளடக்கிய பிணைக்கும் ஒப்பந்தமொன்றை நாம் பெரிதும் ஆதரிக்கிறோம். பெரும்பாலும் நியாயமற்ற சுமைகளுக்கு உள்ளாகும் வளர்ந்து வரும் நாடுகள் நியாயமான நிதி, தொழில்நுட்பம் மற்றும் பொறுப்புக்கூறலைப் பெற வேண்டும்.
ஆழ்கடல் வளங்கள் மீதான ஆர்வம் துரிதமாக அதிகரிக்கப்பதால், கடற்படுக்கை அகழ்வு நிர்வாகமானது, அதிகரிக்கும் சவாலொன்றை முன்வைக்கிறது. வலுவான பாதுகாப்பு வழிமுறைகள் இன்றிய அகழ்வுச் செயற்பாடானது, மென்மையானதும், எளிதில் பாதிப்பிற்குள்ளாக்கக்கூடியதுமான கடற்சூழல் கட்டமைப்புகளுக்கு மீட்சியற்ற தீங்கை விளைவிக்கும். நியாயமானதும், நிலைபேறானதுமான அணுகுமுறை விரும்பத்தக்கது மட்டுமல்ல; கட்டாயமுமாகும். கடல் வளங்களுக்கான நியாயமான அணுகல், கடற்பல்லுயிர்ப் பாதுகாப்பு மற்றும் பல்தரப்புச் செயன்முறைகளின் ஒருமைப்பாடு ஆகியவை பேச்சுவார்த்தைக்கு மட்டுமே உட்பட்டதாக இருக்கக்கூடாது. கடல் நிர்வாகம் மற்றும் கடல்சார் உரிமைகளானவை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தால் இயக்கப்பட வேண்டும்.
கடற்பல்லுயிர் பாதுகாப்பிற்கான உலகளாவிய முயற்சிகளில் இணைந்து, 2025 பெப்ரவரியில் தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் ஒப்பந்தத்தில் (BBNJ) கைச்சாத்திடுவதன் மூலம், இலங்கையானது இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்ட 109வது நாடாகிறது. நாம் தற்போது ஈடுபாடுகளை, செயலூக்கமிக்க நடவடிக்கைகளாக மாற்றுவதற்கான எமது சட்டங்களை உள்நாட்டுரீதியாக ஒப்புதல் மற்றும் ஒத்திசைவு செய்யும் செயன்முறையில் இருக்கிறோம். திறன்சார் இடைவெளிகளை இணைப்பதற்கும், கடல் மரபணு வளங்கள் மற்றும் நன்மை பகிர்வுக்கான நியாயமான அணுகலை உறுதி செய்வதற்கும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்தில் துரித நடவடிக்கையை கட்டாயமாக்குவதற்கும், தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பல்லுயிர் ஒப்பந்தச் (BBNJ) செயன்முறையானது, கடலோர நாடுகள் மற்றும் வளர்ந்துவரும் சிறு தீவு நாடுகளுக்கு, (SIDS) மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
இறுதியாக எமது, முக்கிய கூட்டாளர்களான ஐக்கிய நாடுகளின் அபிவிருத்திக்கான நிகழ்ச்சித்திட்டம் (UNDP), போதைப்பொருள் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC), பசுமை காலநிலை நிதியம் (GCF), உலகளாவிய சுற்றாடல் வசதி (GEF), சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) மற்றும் ஏனைய ஒத்துழைப்பாளர்களின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நாம் அனைவரும் ஒன்றாக, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நிலைபேறானதும், சகல அம்சங்களையும் உள்ளடக்கியதுமானதாக கடற்பொருளாதாரத்தைப் பாதுகாப்போமாக.
நன்றி.


