பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவா, 2023 , அக்டோபர் 10 அன்று, மணிலாவிலுள்ள மலாக்கான் அரண்மனையில், பிலிப்பைன்ஸ் குடியரசின் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் ஆர். மார்கோஸ் ஜூனியரிடம் தனது நற்சான்றிதழ்களை வழங்கினார். இதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் தேசிய மாவீரர், கலாநிதி ஜோஸ் ரிசாலின் நினைவாக ரிசால் நினைவுச் சின்னத்தில் பாரம்பரிய மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டவுடன், தூதுவர் தல்பஹேவா ஜனாதிபதி மார்கோஸுடன் பிரத்தியேகமான உரையாடாடலொன்றில் ஈடுபட்டார். அவர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்துக்களையும், மனமார்ந்த பாராட்டுக்களையும், ஜனாதிபதி மார்கோஸ், அரசாங்கம் மற்றும் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு தெரிவித்தார்.
கலந்துரையாடலின் போது, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸுக்கு இடையிலான அன்பான மற்றும் நட்புறவை மேலும் பலப்படுத்தி, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு தாம் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக தூதுவர் தல்பஹேவா தெரிவித்தார். பிலிப்பைன்ஸில் உள்ள இலங்கை நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை கொண்டு வருவதற்கு தீவிரமாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மார்கோஸ் ஜூனியர் இந்த முயற்சியை வரவேற்றதுடன், பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை போன்ற நாடுகள் அரசியல் துறையில் மட்டுமல்லாது, பொருளாதாரத் துறையிலும் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இலங்கை தூதரகம்
மணிலா
2023, அக்டோபர் 13