கொழும்பில் நடைபெற்ற 23வது அமைச்சர்கள் சபையில் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைவராக இலங்கை பொறுப்பேற்பு

 கொழும்பில் நடைபெற்ற 23வது அமைச்சர்கள் சபையில் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைவராக இலங்கை பொறுப்பேற்பு

2023 ஒக்டோபர் 11ஆந் திகதி கொழும்பில் நிறைவடைந்த 23வது இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் சபையில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொண்டது. இந்தக் கூட்டத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கினார். 1997 இல் நிறுவப்பட்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினரான இலங்கை, இதற்கு முன்னர் 2003 முதல் 2004 வரை அதன் தலைவராகப் பணியாற்றியது. 23வது இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் சபை இந்து சமுத்திரத்தை மெய்நிகர் உண்மை ரீதியாக மாநாட்டு அறைக்குள் கொண்டு  வந்த வண்ணமயமான தொடக்க விழாவுடன் தொடங்கப்பட்டது.

அமைச்சர்கள் குழு என்பது இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் மிக உயர்ந்த அமைப்பாவதுடன், அமைச்சர்கள் குழுவிற்கு முன்னதாக, சிரேஷ்ட அதிகாரிகளின் குழுவாக கூடும் சிரேஷ்ட அதிகாரிகளால் அமைச்சர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். அதன்படி, 23வது இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் சபைக்கு முன்னதாக, வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையில் 2023 அக்டோபர் 09-10 திகதிகளில் நடைபெற்ற  சிரேஷ்ட அதிகாரிகளின் 25வது குழு நடைபெற்றதுடன், சிரேஷ்ட அதிகாரிகள் தமது இரண்டு நாள் கூட்டத்தில் மேற்கொண்ட ஆலோசனைகள் மற்றும் பணிகள் குறித்து அமைச்சர்கள் குழுவிற்கு வெளியுறவுச் செயலாளர் அறிக்கையிட்டார்.

கொழும்பில் நடைபெற்ற இரண்டு இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் கூட்டங்களில் அனைத்து 23 உறுப்பு நாடுகளும் மற்றும் 11 உரையாடல் பங்காளிகளும் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. இதில் பங்களாதேஷ், இந்தியா, மொரிஷியஸ், மலேசியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் தான்சானியாவின் நீலப் பொருளாதார அமைச்சர் மற்றும் அவுஸ்திரேலியா, கொமொரோஸ், பிரான்ஸ், இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகஸ்கார், மாலைதீவு, மொசாம்பிக், ஓமான், சீஷெல்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராசடசியம் மற்றும் யெமன் (உறுப்பு நாடுகள்) மற்றும் சீனா, எகிப்து, சவுதி அரேபியா, ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, ரஷ்யக் கூட்டமைப்பு, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும்  ஐக்கிய அமெரிக்கா (உரையாடல் பங்காளிகள்) ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளடங்குவர்.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் புதிய உரையாடல் பங்காளியான சவுதி அரேபியா கொழும்பில் நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின்  கூட்டங்களில் முதன்முறையாக கலந்து கொண்டது.

கொழும்பில் கூடியிருக்கும் அமைச்சர்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உரையாடல் பங்காளிகளை வரவேற்று உரையாற்றிய  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அவர்கள் பிரசன்னம் பிராந்தியத்தை வரையறுக்கும் ஒத்துழைப்பிற்கு சான்றாவதாகக் குறிப்பிட்டதுடன், இந்து சமுத்திர சமூகத்தைப் பிணைக்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பை இலங்கை பாராட்டுவதாகக் குறிப்பிட்டார். விருந்தோம்பலின் சிறந்த பாரம்பரியத்தில், இலங்கை அதன் அனைத்து விருந்தினர்களுக்கும் அதன் கதவுகளையும் இதயத்தையும் திறப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் மற்றும் மீட்சி ஆகியன பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் உள்ள தனது நண்பர்களின் அசைக்க முடியாத ஆதரவு  மற்றும் ஒத்துழைப்பு மற்றும் இலங்கையர்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியமற்றது என அமைச்சர் சப்ரி மேலும் குறிப்பிட்டார்.

சர்வதேச விவகாரங்களில் இலங்கை ஆற்றிய முக்கிய பங்கை குறிப்பிட்ட அமைச்சர் சப்ரி, 1976ல் இலங்கை தலைமை தாங்கிய அணிசேரா  இயக்கத்தை ஸ்தாபிக்க வழிவகுத்த பாண்டுங் மாநாட்டின் ஒரு பகுதியாக இலங்கை இருந்ததை நினைவு கூர்ந்தார். இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் சமாதானம், ஸ்திரத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கிய தன்மையை மையமாகக் கொண்டுள்ளது.

அரசியல் எல்லைகள் மற்றும் சித்தாந்தங்களைக் கடந்து, இந்து சமுத்திரத்தை ஒத்துழைப்பு, புரிதல் மற்றும் அமைதியின் அடையாளமாக மாற்ற  முயலும் வகையில், 1971ஆம் ஆண்டு இந்து சமுத்திரப் பகுதியையும் அதன் வான்பரப்பையும் சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தும் வரலாற்றுத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில் அறிமுகப்படுத்தியதில் பங்கேற்று இலங்கை உலக அரங்கில் ஏற்படுத்திய அழியாத அடையாளத்தையும் அமைச்சர் சப்ரி நினைவு கூர்ந்தார். பல்வேறு தொடர்ச்சியான சவால்களைத் தீர்ப்பதற்கு சர்வதேச சமூகம் பணியாற்றுவதற்கான வழிமுறையாக, பலதரப்பு மற்றும் இராஜதந்திரத்தின் மீது இலங்கை வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு, மீன்பிடி முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல்  மற்றும் பசுமைப் பொருளாதாரம் உள்ளிட்ட சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட ஆறு முன்னுரிமைப் பகுதிகளில் ஒத்துழைப்பதற்கான வழிகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர்.

அமைச்சர்கள் தமது கூட்டத்தின் முடிவில் கொழும்பு அறிக்கையை முடிவு ஆவணமாக ஏற்றுக்கொண்டனர். அந்த அறிக்கையில், சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் இலக்குகள் மற்றும் நோக்கங்களுக்கான தமது உறுதிப்பாட்டை அமைச்சர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், துடிப்பான மற்றும் நோக்கம் சார்ந்த சங்கத்தை வழிநடத்த, 'பிராந்திய கட்டிடக்கலையை வலுப்படுத்துதல்: இந்து சமுத்திர அடையாளத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளின் கீழ் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் பயனளிக்கும் தனது ஆணையை நிறைவேற்றும் வகையில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைவராக பதவியேற்றுள்ள இலங்கைக்கான தமது ஆதரவை உறுதியளித்தனர். இந்து சமுத்திர விளிம்பு சங்கம் 2030 ஐ நோக்கியும் அதற்கு அப்பாலும் முன்னோக்கிச் செல்லும் வழியைப் பிரதிபலிக்கும் வகையில் 2024 இல் கொழும்பில் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைவர்களின்  உச்சி மாநாட்டை நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய வாய்ப்பையும் அமைச்சர்கள் பாராட்டினர்.

இலங்கைக்கு விஜயம் செய்த அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கூட்டாக சந்தித்ததுடன்,இலங்கையில் தங்கியிருந்த போது  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் மேற்கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 அக்டோபர் 11

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close