இத்தாலியில் உள்ள இலங்கைத் தூதரகம், தீவு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் இலங்கை சமூகத்திற்கு கொன்சியூலர் சேவைகளை வழங்குவதற்காக 2023 ஜனவரி 21 மற்றும் 22ஆந் திகதிகளில் சிசிலி தீவில் உள்ள கட்டானியாவில் நடமாடும் கொன்சியூலர் சேவையை வெற்றிகரமாக நடாத்தியது.
புதிய கடவுச்சீட்டுக்கள், கடவுச்சீட்டு ஒப்புதல்கள், பிறப்புப் பதிவுகள், குடியுரிமைச் சான்றிதழ்கள், அற்றோனி தத்துவப்பதிதிர சான்றொப்பம், இலங்கை ஆவணங்களின் மொழிபெயர்ப்பு போன்ற கொன்சியூலர் சேவைகளைப் பெறுவதற்காக சுமார் 550 இலங்கையர்கள் கலந்துகொண்டனர்.
நடமாடும் கொன்சியூலர் சேவையின் போது, இத்தாலியிலுள்ள இலங்கைத் தூதுவர் ஜகத் வெள்ளவத்த, பிரதித் தூதுவர் மற்றும் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஆலோசகர் ஆகியோருடன், சிசிலி, கட்டானியா, மெசினா மற்றும் பலேர்மோ ஆகிய மூன்று முக்கிய நகரங்களின் இத்தாலிய உள்ளூர் அதிகாரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார்.
கட்டானியா மாநகராட்சியின் பிரதி ஆணையாளர் பெர்னார்டோ காம்போ, மெசினா கோசிமா டி ஸ்டானி, பொலிஸ் துறையின் தலைவர் (குவெஸ்டோர்) கேப்ரியெல்லா ஐப்போலோ மற்றும் மெசினா மேயர் ஃபெடரிகோ பசில் ஆகியோரை தூதுவர் ஜனவரி 20ஆந் திகதி சந்தித்தார். கட்டானியா மரியா கார்ன்மெலா லிப்ரிஸி மாகாணத்தின் அரசியற் தலைவர் மற்றும் கட்டானியா விட்டோ கால்வினோவின் பொலிஸ் துறையின் தலைவர் (குவெஸ்டுரா) ஆகியோரை தூதுவர் ஜனவரி 20ஆந் திகதி சந்தித்தார். இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் தீவின் சமூக, தொழிலாளர் மற்றும் கலாச்சாரக் கட்டமைப்பில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக இத்தாலிய அதிகாரிகள் கூட்டங்களின் போது தெரிவித்தனர். சிசிலியில் உள்ள இலங்கையர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்குடன் தொழிலாளர் மற்றும் தொழில் பயிற்சித் துறையில் இரு தரப்புக்கும் இடையிலான ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை தூதுவர் வலியுறுத்தினார்.
2023 ஜனவரி 23ஆந் திகதி, இலங்கைத் தூதுக்குழுவினர் பலேர்மோவுக்குச் சென்றதுடன், இது தீவின் தலைநகருக்கான இலங்கைத் தூதுவரின் முதல் விஜயமாகும். தூதுவர் பலேர்மோவின் மேயர் பேராசிரியர் ரொபர்டோ லாகல்லா, பொலிஸ் துறையின் தலைவர் (குவெஸ்டுரா) லியோபோல்டோ லாரிச்சியா மற்றும் பலேர்மோவின் அரசியற் தலைவர் மரியா தெரேசா குசினோட்டா ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களில், சட்டவிரோத இலங்கைக் குடியேற்றவாசிகளின் பிரச்சினைகள் மற்றும் இலங்கை சமூகத்தின் நலன் குறித்து தூதுவர் கலந்துரையாடினார். மேலும், சகோதர நகர வேலைத்திட்டங்கள், சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தொழிற்பயிற்சி நிகழ்ச்சிகளை நடாத்துதல் ஆகியவற்றை தூதுவர் வெள்ளவத்த முன்மொழிந்தார். பலேர்மோவில் புதிய தலைமுறையினருக்கு இலங்கைக் கலாசாரம் குறித்து ஆய்வு செய்வதற்கான கலாச்சார நிலையம் ஒன்றை அமைப்பது தொடர்பாக பலேர்மோ நகரசபைக்கும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கான சாத்தியத்தை தூதுவர் முன்மொழிந்தார்.
சிசிலியில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்கான பொதுவான திட்டங்களைக் கண்டறியும் நோக்கத்துடன் நடாத்தப்பட்ட ஆக்கபூர்வமான உரையாடல்கள் மற்றும் கருத்துப் பரிமாற்றங்களுக்கு இத்தாலிய அதிகாரிகளுக்கு தூதுவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கைத் தூதரகம்,
ரோம்
2023 பிப்ரவரி 02