சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டங்கள்

சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் தைப் பொங்கல் கொண்டாட்டங்கள்

சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயமும், சிங்கப்பூரில் உள்ள இலங்கை  சமூகமும் இணைந்து, 2023 ஜனவரி 19ஆந் திகதி, வியாழக்கிழமை உயர்ஸ்தானிகராலய வளாகத்தில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தைப் பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.

தமிழ் சமூகத்தினரிடையே 'கோலங்கள்' என்று பிரபலமாக அழைக்கப்படும் அலங்கார உருவங்கள், நிகழ்விற்கு பாரம்பரிய கலாச்சார தோற்றத்தை சேர்க்கும் வகையில் தரையில் வரையப்பட்டன.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் கோயிலின் துணைத் தலைவர் கே. செல்வகிருஷ்ணன், தலைவர் ஜெயசீலன் கார்த்திஜேசு, சிங்கப்பூர் - இலங்கைத் தமிழர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். கோபன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் கோவிலின் தலைமை அர்ச்சகர் சபேசன் குருக்கள் விஷேட பூஜை மற்றும் இந்து சமய வழிபாடுகளை நடாத்தினார்.

கலந்துகொண்டவர்களை வரவேற்றுப் பேசிய உயர்ஸ்தானிகர் பிரேமவர்தன, தைப் பொங்கல் விழாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, உலகெங்கிலும் உள்ள தமிழ் சமூகத்தால் கொண்டாடப்படும் மிகவும் பொக்கிஷமான சமய மற்றும் கலாச்சார விழாவாக இதனை அறிமுகப்படுத்தினார். முதல் அறுவடையை நன்றியின் அடையாளமாக வழங்குவதன் மூலம் இந்தப் பண்டிகை சூரியனுக்கு அஞ்சலி செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார். தைப் பொங்கல் பண்டிகை தேசிய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ளது என்றும், நடப்பு 'மகா' பருவத்தின் மகத்தான அறுவடையைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு 'தைப் பொங்கல்' மேலதிக முக்கியத்துவத்துடன் கூடிய கொண்டாட்டமாக அமைவதால், ஒட்டுமொத்த தேசமும் பயனடையும் என அவர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் ஊட்டச்சத்தையும் உறுதிசெய்து, நமது முன்னோர்களால் நிறுவப்பட்ட இலங்கையை கிழக்கின் தானியக் களஞ்சியமாக புதுப்பித்து, தன்னிறைவு பெற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளைக் குறிக்க இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை பொருத்தமானது என்பதை எடுத்துக்காட்டும் வகையிலான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தியை உயர்ஸ்தானிகர் மேற்கோள் காட்டினார்.

சிங்கப்பூர் - இலங்கை உறவானது, பகிரப்பட்ட கலாச்சார விழுமியங்கள் மற்றும் வலுவான மனிதர்களுடன் மக்கள் தொடர்புகளால் ஆதரிக்கப்படுவதாக உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார். கோவிட்-19 தொற்றுநோய் முழுவதும், டெமாசெக் சர்வதேச அறக்கட்டளை, ஏனைய தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூர் சமூகம் ஆகியவற்றின் மூலம் இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஆதரவாக வழங்கிய விலைமதிப்பற்ற உதவிகளை அவர் நினைவு கூர்ந்தார்.

இலங்கையின் வட மாகாண ஆளுநரின் சமீபத்திய சிங்கப்பூர் விஜயத்தின் போது அவருடன் பூர்வாங்கக் கலந்துரையாடல் நடாத்தப்பட்ட சில விஷேட திட்டங்களைத் தொடங்குவதற்கு உதவுவதற்காக சிங்கப்பூரில் உள்ள தமிழ் சமூகத்துடன் கைகோர்க்க உயர்ஸ்தானிகராலயம் எதிர்பார்ப்பதாக உயர்ஸ்தானிகர் பிரேமவர்தன மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூரின் அபிவிருத்திக்காக இலங்கைத் தமிழ் சமூகம் ஆற்றிய பரந்த பங்களிப்புக்களை அங்கீகரித்த உயர்ஸ்தானிகர், அந்தச் சமூகம் நாட்டின் பன்முகத்தன்மை மற்றும் அதன் திறமை ஆகியவற்றின் பெருமைக்குரிய பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் உள்ள செண்பக விநாயகர் கோவில் 1850 களில் கட்டப்பட்டதுடன், இதற்காக இலங்கைத் தமிழர்கள் கோயிலின் முதல் கட்டமைப்புக்களைக் கட்டுவதற்கு முன்னோடியாகக் கருதப்படுகின்றார்கள். கோவிலின் பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் சிங்கப்பூர் இலங்கைத் தமிழர் சங்கம் ஆற்றிய முக்கிய பங்கை உயர்ஸ்தானிகர் பாராட்டினார்.

விநாயகப் பெருமானுக்கும் ஏனைய கடவுள்களுக்கும் பொங்கல் வைத்து வழிபாடுகள் நிறைவுற்றன.

நிகழ்வின் நிறைவில் பொங்கல் மற்றும் சிலோன் தேநீர் உள்ளிட்ட பாரம்பரிய இனிப்பு வகைகள் பரிமாறப்பட்டன.

 

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

சிங்கப்பூர்

2023 ஜனவரி 24

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close