இலங்கை - ஐக்கிய இராச்சிய வர்த்தக சம்மேளனம் முதலாவது வருடாந்த பொதுக் கூட்டத்தை நடாத்துகின்றது

இலங்கை – ஐக்கிய இராச்சிய வர்த்தக சம்மேளனம் முதலாவது வருடாந்த பொதுக் கூட்டத்தை நடாத்துகின்றது

இலங்கை - ஐக்கிய இராச்சிய வர்த்தக சம்மேளனம் தனது முதலாவது வருடாந்த பொதுக்  கூட்டத்தை 2023 ஜனவரி 12ஆந் திகதி லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன அவர்களின் தலைமையில் நடாத்தியது.

இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்தி, முதலீடு, சுற்றுலா, சிறிய மற்றும் நடுத்தர  தொழில்களை மேம்படுத்தும் நோக்கில், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையில், இலங்கை - ஐக்கிய இராச்சிய வர்த்தக சம்மேளனம் 2021 ஒக்டோபர் 26ஆந் திகதி முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய இராச்சியப் பிரதமரின் வர்த்தகத் தூதுவர்  ஆகியோர் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. தேயிலை, ஆடை, ஃபின்டெக் மற்றும் தகவல் தொழில்நுட்பம், உணவு மற்றும் பானங்கள், சுற்றுலா மற்றும் சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்காக மன்றம் அதன் உறுப்பினர்களின் முக்கிய குழுக்களைக் கொண்டுள்ளது.

வருடாந்த பொதுக்கூட்டத்தில், 2022 இல் 'இலங்கை தொழில்நுட்ப மன்றம் 2022' மற்றும் பல  வணிக மற்றும் முதலீட்டு மன்றங்கள் போன்ற நிகழ்வுகளின் கூட்டு நடத்தை உட்பட உயர்ஸ்தானிகராலயத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேனவின் வழிகாட்டுதல்கள் மற்றும் வழங்கிய ஆதரவை சபையின் தலைவர் ஷெஹான் சில்வா பாராட்டினார். 2023 இல் திட்டமிடப்பட்டுள்ள செயற்பாடுகளில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை, குறிப்பாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ளவர்களை இலங்கையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என அவர் வெளிப்படுத்தினார்.

தலைமை உரையை ஆற்றிய உயர்ஸ்தானிகர், மன்றம் அதன் முதல் ஆண்டை  நிறைவு  செய்ததற்காகவும், அதன் முதல் ஆண்டில் பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்ததற்காகவும் வாழ்த்தினார். நாடு எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு உதவுவதற்காக மன்றம் திட்டமிட்டுள்ள முன்முயற்சிகளை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார். 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரவுள்ள ஐக்கிய இராச்சியத்தின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தினால் இலங்கை பெறக்கூடிய நன்மைகள் மற்றும் இலங்கை ஏற்றுமதித் துறையின் நலன்களை ஊக்குவிப்பதில் உயர்ஸ்தானிகராலயத்தின் பங்கை அவர் எடுத்துரைத்தார். ஐக்கிய இராச்சியத்தில் இலங்கை சுதந்திரமடைந்ததன் 75ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தொடர் நிகழ்வுகள் குறித்து அவர் மன்றத்தின் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

லண்டன்

2023 ஜனவரி 20

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close