நீண்டகாலமாக சேவையாற்றும் இந்திய ஊழியர்களை கௌரவித்தல் மற்றும் 150 பேர் கொண்ட வீட்டு அடிப்படையிலான மற்றும் உள்ளூர் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களை உள்ளடக்கிய குடும்ப ஒன்றுகூடலாக, புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடியது. நவம்பர் 05ஆந் திகதி உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத் தோட்டத்தில் பாராட்டு விழா மற்றும் குடும்ப ஒன்றுகூடல் நடைபெற்றது.
உயர்ஸ்தானிகராலயம் நீண்டகாலமாக சேவையாற்றிய தனது ஊழியர்களைப் பாராட்டி தீபாவளியைக் கொண்டாடுவது இது தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டும், நீண்டகாலமாக பணியாற்றிய ஐந்து ஊழியர்களை கௌரவித்து உயர்ஸ்தானிகராலயம் குடும்பத்துடன் ஒன்றுகூடி தீபாவளியைக் கொண்டாடியது.
குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு தீபாவளிப் பரிசுகள் விநியோகம், தீபாவளி விளக்கு ஏற்றுதல் மற்றும் இரவு உணவு ஆகியவையும் இந்த ஆண்டு நிகழ்வில் இடம்பெற்றன. சிறப்பு அம்சமாக, பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய திறமை நிகழ்ச்சியும் நடைபெற்றதுடன், இது கொண்டாட்டங்களுக்கு மேலும் வண்ணம் சேர்த்தது.
உள்நாட்டு மற்றும் உள்ளூர் ஊழியர்களிடையே நட்புறவை மேம்படுத்தும் நோக்கத்துடன், குறிப்பாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக உயர்ஸ்தானிகராலயத்தில் பணியாற்றிய இந்திய ஊழியர்களின் சேவைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் முகமாக, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அவர்களின் வழிகாட்டல் மற்றும் பூரண அனுசரணையின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையொட்டி, உயர்ஸ்தானிகராலயத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றிய ஐந்து இந்திய பணியாளர்கள் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். இலங்கை தனியார் துறையின் ஆதரவுடன், நீண்ட காலமாக சேவையாற்றும் இந்த ஐந்து பணியாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் / குடும்ப உறுப்பினர்கள் ஐந்து இரவுகள் தங்கி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு உயர்ஸ்தானிகர் ஏற்பாடுகளை செய்துள்ளதுடன், இது தொடர்பான அறிவிப்பு குடும்ப ஒன்றுகூடலில் வெளியிடப்பட்டது.
குழந்தைகளுக்கு தீபாவளிப் பரிசுகளை விநியோகித்தல் மற்றும் நீண்டகாலமாக சேவையாற்றிய ஊழியர்களை கௌரவித்தல் ஆகியவற்றின் போது, திருமதி. ஜெனிபர் மொரகொடவும் உயர்ஸ்தானிகருடன் இணைந்து கொண்டார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புதுதில்லி
2022 நவம்பர் 10