மலேசியாவின் படுபஹாட்டில் நடமாடும் கொன்சியூலர் சேவைகள்

 மலேசியாவின் படுபஹாட்டில் நடமாடும் கொன்சியூலர் சேவைகள்

மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 நவம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை மலேசியாவின் ஜோகூரில் உள்ள படுபஹாட்டில் நடமாடும் கொன்சியூலர் சேவைகளை நடாத்தியது.

கோலாலம்பூரில் இருந்து சுமார் 250 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஜோகூர், மலேசியாவில் பெரும்பான்மையான இலங்கைப் பிரஜைகள் பணியாற்றும் மாநிலமாகும். இந்த இலங்கையர்களில் பலருக்கு கொன்சியூலர் உதவி மற்றும் தூதரகத்தின் வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரிப் பிரிவின் வழிகாட்டுதல் மற்றும் தலையீடு அவசியமாகும். எனவே, இந்த இலங்கைத் தொழிலாளர்கள் சந்திக்கும் சிரமங்கள் / அசௌகரியங்களைப் போக்குவதற்காக, உயர்ஸ்தானிகராலயம் ஜோகூர் மாநிலத்தில் உள்ள பட்டுபஹாட்டில் உள்ள சின் லோங் ஆடைத் தொழிற்சாலை வளாகத்தில் ஒரு நடமாடும் கொன்சியூலர் சேவையை நடாத்தியது.

பல இலங்கையர்கள் கடவுச்சீட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தமது பதிவைப் புதுப்பிப்பதற்கும், ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர்.

மொழித் தடையின் காரணமாக இலங்கைத் தொழிலாளர்கள் உள்ளூர் மருத்துவர்களுடன் தொடர்புகொள்வதில் சிரமங்கள் நிலவுவதால், பலர் சரியான சிகிச்சையின்றி பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, தூதரகம் நடமாடும் கொன்சியூலர் சேவைகளுடன் இணைந்து மருத்துவ முகாமை ஏற்பாடு செய்தது. மலேசியாவில் பணிபுரியும் இலங்கை மருத்துவர் ஒருவர் இந்த முயற்சியில் தூதரகத்துடன் இணைந்து தனது சேவைகளை வழங்கினார். மருத்துவ முகாம் மாபெரும் வெற்றியடைந்ததுடன், ஆலோசனைகள் மட்டுமின்றி, மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டதால், இந்த வசதிக்கு பலரும் நன்றிகளைத் தெரிவித்தனர்.

நடமாடும் கொன்சியூலர் சேவைகள் வழங்கும் வசதிகளை சுமார் 150 இலங்கையர்கள் பயன்படுத்திக்கொண்டனர். நடைமுறை மற்றும் தனிப்பட்ட விடயங்களில் ஆலோசனைகளைப் பெறுவதற்கு இன்னும் பலர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். இதன் போது உயர்ஸ்தானிகர் மற்றும் அதிகாரிகள் சில நிறுவனங்களின் மனிதவள திணைக்களப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடாத்தியதுடன் இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஆதரவான பல விடயங்கள் / சச்சரவுகளைத் தீர்த்துவைக்க முடிந்தது.

மேலும், தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் / சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் போது, 2023ஆம் ஆண்டிற்கான இலங்கையர்களுக்கு குறிப்பாக ஆடை மற்றும் ஆடைத் தொழில் துறையில் அதிகமான வேலை வாய்ப்புக்களை ஒதுக்கீடு செய்வது குறித்த உறுதிமொழியும் இதன்போது கிடைக்கப் பெற்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

கோலாலம்பூர்

2022 நவம்பர் 10

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close