இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை தேயிலை சபை, தேசிய கைவினை சபை, இங்கிலாந்தில் உள்ள தொழில்முறை இலங்கையர்களின் சங்கம் (ஏ.பி.எஸ்.எல்), பசிலூர் தேயிலை யு.கே, சர்வதேச சுகாதார விஞ்ஞான நிறுவனம் மற்றும் பெட்ஃபோர்ட்ஷையரில் உள்ள இலங்கை சமூகத்தினருடன் இணைந்து லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் 2022 ஜூலை 23 மற்றும் 24ஆந் திகதிகளில் விருது பெற்ற 'பெட்ஃபோர்ட் நதித் திருவிழா' இல் வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இலங்கையின் கைவினைப்பொருட்கள், சுற்றுலா, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் 'சிலோன் டீ' ஆகியவற்றைக் கொண்டதன் மூலம் பெட்ஃபோர்ட் சமூகத்தினரிடையே இலங்கையை அவர்களின் அடுத்த விடுமுறை இடமாக மேம்படுத்துவதற்கான வாய்ப்பை இந்நிகழ்வு வழங்கியது.
'சோ ஸ்ரீலங்கா' என்ற பதாகைகளை காட்சிப்பட்டதன் மூலமும், சிற்றேடுகள், நினைவுப் பொருட்கள் மற்றும் வரைபடங்களை விநியோகிப்பதன் மூலமும் 'இலங்கை சுற்றுலா' க்கான பரந்த விளம்பரம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஓய்வு, உணவு, கலாச்சாரம், வனவிலங்கு, விளையாட்டு மற்றும் வணிகம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வழங்கும் வாய்ப்புகளை உயர்ஸ்தானிகராலய ஊழியர்கள் ஊக்குவித்தனர்.
இலங்கையின் கைவினைப் பொருட்களை சர்வதேச ரீதியில் ஊக்குவிக்கும் மற்றும் ஆதரிக்கும் முயற்சியாக, தேசிய கைவினைப் பேரவையின் 'லக் ஷில்பா' வர்த்தக நாமத்தின் பல கைவினைப்பொருட்கள் இந்தக் கூடத்தில் விற்பனை செய்யப்பட்டன. 'சிலோன் டீ' சுவைத்தல் மற்றும் வினாடி வினா நிகழ்ச்சி ஆகியன நதித் திருவிழாவில் ஒரு சிறப்பம்சமாக இருந்தது.
இலங்கையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், 2022 ஜூலை 24ஆந் திகதி கூடம் மற்றும் விளையாட்டு அரங்கில் விளையாட்டு மற்றும் வேடிக்கையான நடவடிக்கைகள் இடம்பெறும் சமூக அரங்கில் நடன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 'தெல்மே', 'நாக ரக்ஷா மற்றும் குருலு ரக்ஷா' உள்ளிட்ட கண்டிய மற்றும் கீழ்நாட்டு நடனங்களின் கண்கவர் நிகழ்ச்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
நடவடிக்கைகள், வர்த்தகக் கூடங்கள் மற்றும் பெட்ஃபோர்ட்ஷையர் சமூகத்தின் நிகழ்ச்சிகளைக் காண்பிக்கும் பிரபலமான சமூக மேடை ஆகியவற்றின் மையமாக இருந்த மில் மெடோஸ் பகுதியில் இலங்கைக் கூடம் அமைந்திருந்தது.
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன மற்றும் பெட்போர்ட் நகரபிதா டேவ் ஹோட்சன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பெட்ஃபோர்ட் போரோ கவுன்சிலால் ஏற்பாடு செய்யப்படும் 'பெட்ஃபோர்ட் நதித் திருவிழா' என்பது விளையாட்டு மற்றும் நதி நடவடிக்கைகள், தெப்பம் மற்றும் டிராகன் படகுப் போட்டிகள், நேரடி இசை மற்றும் நிகழ்ச்சிகள், கேளிக்கை, உணவு மற்றும் சந்தைக் கூடங்கள் உள்ளிட்ட பல நிகழ்வுகள் மற்றும் ஈர்ப்புகளைக் கொண்ட வருடாந்தக் கோடை விழாவாகும். இந்த ஆண்டு இந் நிகழ்வு 250,000 பார்வையாளர்களை ஈர்த்தது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
லண்டன்
2022 ஜூலை 27