திரு. மொறகொடகே கிறிஸ்டோபர் வோல்டர் பின்டோவின் மறைவு

திரு. மொறகொடகே கிறிஸ்டோபர் வோல்டர் பின்டோவின் மறைவு

திரு. கிறிஸ் பின்டோ என அழைக்கப்படும் திரு. மொறகொடகே கிறிஸ்டோபர் வோல்டர் பின்டோ அவர்கள் 2022 ஜூலை 21ஆந் திகதி நெதர்லாந்தின் ஹேக் நகரில் காலமானதை ஆழ்ந்த வருத்தத்துடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவிக்கின்றது. 1967 இல் அமைச்சின் சட்டப் பிரிவை நிறுவிய திரு. பின்டோ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முதலாவது சட்ட ஆலோசகர் ஆவார்.

திரு. பின்டோ உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சட்ட அறிஞராவார். இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை மற்றும் இலங்கை சட்டக் கல்லூரி ஆகியவற்றில் சட்டம் படித்த அவர், இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியாக தேர்ச்சி பெற்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மக்டலீன் கல்லூரியில் சர்வதேச சட்டத்தில் நிபுணத்துவம் பெற்றார்.

அவர் வகித்த சில முக்கிய பதவிகள் பின்வருமாறு:

  • 1967-76 சட்ட ஆலோசகர் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சட்டப் பிரிவின் தலைவர்
  • 1976-80 ஜேர்மன் கூட்டாட்சிக் குடியரசு மற்றும் ஒஸ்ட்ரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர்
  • 1968-69 வியன்னாவில் உள்ள உடன்படிக்கைச் சட்டம் தொடர்பான ஐ.நா. மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதி
  • 1967-80 ஐ.நா. பொதுச் சபையின் ஆறாவது (சட்ட) குழுவில் இலங்கையின் பிரதிநிதி
  • 1968-82 ஐ.நா. கடல் படுக்கைக் குழுவிற்கும், கடல் சட்டம் தொடர்பான மூன்றாவது ஐ.நா. மாநாட்டிற்கும் இலங்கையின் பிரதிநிதி மற்றும் 1980-81 இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கான தலைவர்
  • 1971-75 தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புக்கான சர்வதேச ஆட்சி பற்றிய மாநாட்டின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர்
  • 1973-81 ஐ.நா. சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர் மற்றும் 1980 ஆணைக்குழுவின் தலைவர்.
  • 1982 - 2011 ஈரான் - அமெரிக்க உரிமைக்கோரல் தீர்ப்பாயத்தின் பொதுச்செயலாளர்
  • ஹேக்கில் உள்ள நிரந்தர நடுவர் நீதிமன்றத்திற்கு இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நடுவர் பட்டியலிலும், சர்வதேசத்தால் பராமரிக்கப்படும் சமரசம் செய்பவர்களின் பட்டியலிலும் நியமிக்கப்பட்ட ஒரு நடுவர்

முதலீட்டுத் தகராறுகளைத் தீர்ப்பதற்கான மையம் (உலக வங்கி) மற்றும் இணைப்பு VII இன் படி பராமரிக்கப்படும் நடுவர்களின் பட்டியல் மற்றும் இணைப்பு V இன் படி பராமரிக்கப்படும் கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. சாசனத்தின் சமரசம் செய்பவர்களின் பட்டியல்

  • சி.ஐ.இ.டி.ஏ.சி. (சீனா சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக நடுவர் ஆணைக்குழு) நடுவர் குழுவின் உறுப்பினர்
  • நிரந்தர நடுவர் நீதிமன்றத்தின் அனுசரணையில் சர்வதேச நடுவராகவும், கடல் சட்டம் தொடர்பான ஐ.நா. சாசனத்தின் இணைப்பு VII இன் கீழ் இரு ஆசிய நாடுகளுக்கு இடையிலான நடுவர் மன்றத்தில் தலைவராகவும் பணியாற்றினார்.
  • டி ட்ரொய்ட் இன்டர்நெஷனல் இன்ஸ்டிடியூட் உறுப்பினர் (1989 முதல்)
  • சர்வதேச சட்ட சங்கத்தின் உறுப்பினர் (1994 முதல்)
  • சர்வதேச சமுத்திர நிறுவனத்தின் அறங்காவலர் குழு உறுப்பினர் (ஹலிஃபெக்ஸ், கனடா / மோல்டா)
  • கடல் சட்டம் குறித்த பொதுப் படிப்பை பல ஆண்டுகளாக இயக்கிய, சுவீடனில் உள்ள மால்மோவில் உள்ள  உலக கடல்சார் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் பேராசிரியர்
  • ஆசியாவில் சர்வதேச சட்டத்தின் அபிவிருத்திக்கான அறக்கட்டளையின் இணை நிறுவனர்.
  • சர்வதேச சட்டத்தின் ஆசிய ஆண்டு புத்தகத்தின் நிறுவன இணை ஆசிரியர்.
  • சர்வதேச சட்டத்தின் ஆசிய ஆண்டு புத்தகம், சர்வதேச சட்டத்தின் ஆசிய இதழ், சர்வதேச மற்றும் ஒப்பீட்டு சட்டத்தின் கொரிய இதழ் மற்றும் சர்வதேச சட்டத்தின் இலங்கை இதழ் ஆகியவற்றின் ஆலோசனைக்  குழுவின் உறுப்பினர்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், தலைவராகவும் செயற்பட்ட  திரு. பின்டோவின் மறைவு ஒரு தேசமாக இலங்கைக்கும், சர்வதேச சட்டத்துறைக்கும் பேரிழப்பாகும்.

திரு. பின்டோவின் ஆன்மா சாந்தியடையட்டும்!!!

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close