பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரயாணிகள் இலங்கைக்கு அன்புடன் வரவேற்பு

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரயாணிகள் இலங்கைக்கு அன்புடன் வரவேற்பு

இலங்கைக்கு பிரயாணம் மேற்கொள்பவர்களுக்கான கட்டாய பீ.சி.ஆர். பரிசோதனைகளை நீக்குவதற்கான வசதி குறித்து மாலைதீவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஏ.எம்.ஜே. சாதிக் எடுத்துரைத்தார்.

இலங்கையின் முன்னணி பயண நிறுவனமான 'டிரவலர் குளோபல்' 2022 மார்ச் மாதம் 01ஆந் திகதி செவ்வாய்கிழமை மாலேயில் மீண்டும் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய இலங்கைத் தூதுவர், முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட பிரயாணிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் பீ.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாய தேவைப்பாட்டை அரசாங்கம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் கைவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இலங்கையை தமது இரண்டாவது தாயகமாகக் கருதும் மாலைதீவு மக்கள் இலகுவாகவும் வசதிகளுடனும் இலங்கைக்கு பயணிப்பதற்கு இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். மாலேயில் இருந்து கொழும்புக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறையும், மற்றும் குறிப்பிட்ட தினங்களில் மூன்று விமானங்களையும் இயக்குகின்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு உறுதுணையாகச் செயற்படுமாறு மாலைதீவு மற்றும் ஏனைய வெளிநாட்டுப் பிரஜைகளை அவர் மேலும் ஊக்குவித்தார்.

டிரவலர் குளோபல் அலுவலகத்தை மீண்டும் திறக்கும் நிகழ்வில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் இலங்கை மற்றும் இந்து சமுத்திரப் பிராந்திய முகாமையாளர் திரு. ஜயந்த அபேசிங்க, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நாட்டு முகாமையாளர் திரு. பௌஸான் ஃபரீட், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் திரு. நௌசர் பௌசி மற்றும் நிறுவனத்தின் மாலைதீவு அனுசரணையாளரும் டொனாட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளருமான யாமீன் ஆடம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுருக்கமான வரவேற்பு உரையை நிகழ்த்திய டிரவலர் குளோபலின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. ரிஸ்மி ரெயால், இலங்கை உட்பட பல முன்னணி சர்வதேச மற்றும் பிராந்திய விமான சேவைகளுக்கான உயர் செயற்றிறன் கொண்ட விற்பனை முகவர் என்ற பெருமையை தமது நிறுவனம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாலைதீவின் முன்னணி விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் பயண முகவர்கள் கலந்து கொண்டனர். பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் மற்றும் டிரவலர் குளோபல் வழங்கும் சிறந்த சேவை மற்றும் வசதிகள் ஆகியவற்றினூடாக மாலைதீவு மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பல வெளிநாட்டுப் பிரஜைகள் இலங்கைக்கு பயணம் செய்ய ஊக்குவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

மாலே

2022 மார்ச் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close