இந்தியாவில் உள்ள பிரதான மதங்களுடனான உரையாடலைத் தொடரும் வகையில், புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜமியத் உலமா- இ-ஹிந்துக்கு புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை கையளிப்பு

இந்தியாவில் உள்ள பிரதான மதங்களுடனான உரையாடலைத் தொடரும் வகையில், புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜமியத் உலமா- இ-ஹிந்துக்கு புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை கையளிப்பு

இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மதங்களுடனும் உரையாடலை மேம்படுத்துவதற்கான  தனது முயற்சிகளைத் தொடர்ந்து, புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இன்று (28) புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை ஜமியத் உலமா-இ-ஹிந்த் (இந்திய முஸ்லிம் இறையியலாளர்கள் சபை) க்கு வழங்கியது.

இலங்கையின் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் வெளியிடப்பட்ட திருக்குர்ஆனின்  சிங்கள மொழிபெயர்ப்பு, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால் இன்று பிற்பகல் ஜமியத்துல் உலமா-இ-ஹிந்தின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி நியாஸ் அஹமட் பாரூக்கி அவர்களிடம் வழங்கப்பட்டது.

திருக்குர்ஆனின் பிரதி, வெளிப்படையான காட்சிப் பெட்டிக்குள் பொருத்தப்பட்டு, சபையின் 500  ஆண்டுகள் பழமையான பள்ளிவாயலியில் அடுத்த வெள்ளிக்கிழமை வரை காட்சிப்படுத்தப்பட்டு, அதன்பின்னர் நிரந்தரக் கண்காட்சிக்காக அதன் அருங்காட்சியகத்திற்கு மாற்றப்படும்.

இந்நிகழ்வின் போது, இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் ஜமியத் உலமா-இ-ஹிந்த் செயலாளர் நாயகம் நியாஸ் அஹமட் ஃபாரூக்கி ஆகியோர் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இஸ்லாமிய உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர். ஜமியத்  உலமா-இ-ஹிந்தின் பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் இந்த விளக்கக்காட்சியில் கலந்துகொண்டனர்.

திருக்குர்ஆனின் சிங்கள மொழியாக்கம் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகர் மற்றும் தூதுக்குழுவினர் பேரவையின் அருங்காட்சியகம் மற்றும் சுமார் 12,000 இஸ்லாம் மற்றும் அது தொடர்பான நூல்கள் வைக்கப்பட்டுள்ள நூலகத்தைப் பார்வையிட்டனர்.

1919 இல் நிறுவப்பட்ட ஜமியத் உலமா-இ-ஹிந்த், தியோபந்தி சிந்தனைப் பாடசாலையைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞர்களின் முன்னணி  அமைப்புக்களில் ஒன்றாகும். இது இந்தியா முழுவதும் 12 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஒரு முக்கிய இஸ்லாமிய நிறுவனத்திற்கு புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை உயர்ஸ்தானிகராலயம் வழங்கியது இது இரண்டாவது முறையாகும். கடந்த நவம்பரில்,  உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் தலைமை இமாம் மற்றும் தில்லி ஜமா மஸ்ஜிதின் ஷாஹி இமாம் சையத் அஹ்மத் புகாரி அவர்களுக்கு புனித குர்ஆனின் சிங்கள மொழிபெயர்ப்பை வழங்கினார். புகழ்பெற்ற முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்ட வரலாற்று; பள்ளிவாயலில் புனித குர்ஆனினின் அந்தப் பிரதி இப்போது நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

'இந்தியாவில் உள்ள இலங்கை இராஜதந்திரத் தூதரகங்களுக்கான ஒருங்கிணைந்த நாட்டு மூலோபாயம்' என்ற உயர்ஸ்தானிகர் மொரகொடவின் கொள்கை வரைபடத்தின்படி, புதுதில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இந்தியாவில் உள்ள அனைத்து முக்கிய மதங்களுடனும்  உரையாடலை ஊக்குவித்து வருகின்றது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்

புதுதில்லி

2022 மார்ச் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close