பொது இராஜதந்திரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பிரிவைச் சேர்ந்த லெபனானில் உள்ள இலங்கை இராணுவத்தின் அமைதி காக்கும் படையினர் மற்றும் லெபனானில் உள்ள இலங்கையின் புலம்பெயர் சமூகத்தின் ஒருங்கிணைப்புடன், லெபனானில் உள்ள இலங்கைத் தூதரகம் மகிழ்ச்சியான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை 2021 டிசம்பர் 19ஆந் திகதி தூதரக வளாகத்தில் கொண்டாடியது.
இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பாரம்பரிய மங்கள விளக்கேற்றப்பட்டதன் பின்னர் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகின. கரிட்டாஸ் - லெபனான் அருட்தந்தை பினோய் வர்கீஸ் மண்டபதில் கிறிஸ்மஸ் பிரார்த்தனைகளை நடாத்தினார்.
மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் ஷானி கல்யானரத்ன கருணாரத்ன ஒன்றுகூடியிருந்தவர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். லெபனானில் பணிபுரியும் இலங்கையர்கள் தமது வருமானத்தை சட்டப்பூர்வமாக வங்கிகள் மூலம் இலங்கைக்கு அனுப்புவதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
கிறிஸ்மஸ் கரோல் கீதங்கள் ரத்னதீபா பாடகர்களால் இசைக்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பிரிவினரின் கலிப்சோ இசைக்குழுவினால் இசை வழங்கப்பட்டது.
பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் இலங்கையின் பாரம்பரிய மதிய உணவு வழங்கப்பட்டதுடன், தூதரக ஊழியர்களால் கொள்வனவு செய்யப்பட்ட கிறிஸ்துமஸ் பரிசுகளும் விநியோகிக்கப்பட்டன.
இலங்கைத் தூதரகம்,
லெபனான்
2021 டிசம்பர் 22