யுனெஸ்கோவின் 'தும்பர ரட கலல நெசவு பாரம்பரிய கைவினைத்திறன்' நினைவுப் பொறிப்பு

யுனெஸ்கோவின் ‘தும்பர ரட கலல நெசவு பாரம்பரிய கைவினைத்திறன்’ நினைவுப் பொறிப்பு

இலங்கையின் 'தும்பர ரட கலல' அல்லது தும்பர பாய்கள் என்பது பாரம்பரிய கையால் செய்யப்பட்ட பாய்களாவதுடன், அவை சுவர் தொங்கல்கள், நாடாக்கள் அல்லது குஷன் கவர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. கலாசிரிகம மற்றும் ஆலோககம போன்ற சில கிராமங்களில் 'கின்னர' என்றழைக்கப்படும் சமூகத்தால் பாய்கள் தயாரிக்கப்படுவதுடன், அவர்கள் அரசருக்கும், பதினைந்தாம் மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட ஆளும் உயர் வர்த்தக்கத்தினருக்குமான தமது கடமையான சேவையின் ஒரு பகுதியாக அரச அரண்மனைக்கு அலங்காரப் பாய்களை பாரம்பரியமாக வழங்கினர். இன்று, கைவினைஞர்கள் உள்ளூர் கொள்வனவார்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் பாய்களை நெய்கின்றார்கள்.

தும்பர ரட கலல சமீபத்தில் யுனெஸ்கோவால் மனிதகுலத்தின் அருவமான கலாச்சாரப் பாரம்பரியத்தின் மதிப்புமிக்க பிரதிநிதிப் பட்டியலில் பொறிக்கப்பட்டுள்ளது. 2021 டிசம்பர் 13 முதல் 18 வரை யுனெஸ்கோ தலைமையகத்தில் நடைபெற்ற அருவமான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான 2003 சர்வதேச மாநாட்டை செயற்படுத்தும் உறுப்பு அரசுகளுக்கிடையேயான குழுவின் 16வது அமர்வில் 2021 டிசம்பர் 15ஆந் திகதி யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.

இலங்கை தேசிய நூலகம், இலங்கை ஆவணச் சேவைகள் சபை, சம்பந்தப்பட்ட இரண்டு மாவட்டங்களினதும் பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் இரண்டு கிராமங்களின் பாரம்பரிய கைவினைக் குடும்பங்களுடன் இணைந்து இலங்கையின் புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினால் தயாரிக்கப்பட்ட நியமனத்தை ஆராய்ந்த பின்னர் யுனெஸ்கோ இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்தப் பொறிப்பின் விடயம் அதன் தெரிவுநிலையை மேம்படுத்தி, கைவினைப் பயிற்சியை வளப்படுத்தி, கைவினைக் குடும்பங்களை மேம்படுத்தி, இந்த முக்கியமான உறுப்புக்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகின்றது. அதே நேரத்தில், வணிகமயமாக்கல் மற்றும் அதிகமான சுரண்டல் போன்ற சாத்தியமான ஆபத்துக்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், உறுப்பைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே பாதுகாப்புத் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் மக்கள் சார்பாக, யுனெஸ்கோவிற்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான ஷானிக்கா ஹிரிம்புரேகம, யுனெஸ்கோவின் பிரதிநிதித்துவப் பட்டியலில் 'தும்பர ரட கலல உருவாக்கும் பாரம்பரிய கைவினைத்திறனை' பொறித்தமைக்காக தனது மகத்தான பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தார்.

மேலும், வெற்றிகரமான நியமன ஆவணத்தைத் தயாரிப்பதற்குப் பல வழிகளில் உதவி நல்கிய சிறந்த பணிகளுக்காக புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கைவினைக் குடும்பங்கள், வேட்புமனுத் தயாரிப்புக் குழு உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், மதிப்பீட்டுக் குழுவிற்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கைத் தூதரகம்,

பாரிஸ்

2021 டிசம்பர் 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close