புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் முப்பது வருடங்களுக்கும் மேலாக பணிபுரியும் பணியாளர்களின் நீண்ட மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி, ஆறு நாட்களுக்கு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. நீண்டகாலமாக சேவையாற்றிய ஐந்து பணியாளர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் அடங்கிய பத்து பேர் கொண்ட குழுவினர் செவ்வாய்க்கிழமை (07) இலங்கைக்கு புறப்பட்டனர்.
ஆறு நாட்கள், ஐந்து இரவுகள் கொண்ட இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, அவர்கள் கொழும்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பெந்தொட்ட ஆகிய இடங்களுக்குச் செல்லவுள்ளனர். அவர்கள் கொழும்பில் இருக்கும் போது வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன், கண்டியில் உள்ள புனித தலதா மாளிகைக்கும் பயணிக்கவுள்ளனர்.
உயர் ஸ்தானிகராலயத்தில் 37 வருடங்கள் பணியாற்றிய சிரேஷ்ட முதன்மைச் செயலாளர் தீபக் நதானி, 30 வருடங்கள் பணியாற்றிய சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி ரேணு சர்மா, 41 வருடங்கள் பணியாற்றிய வரவேற்பாளர் கே.சி. சர்மா, 30 வருடங்கள் பணியாற்றிய அலுவலக உதவியாளர் வீரேந்தர் குமார், 35 வருடங்கள் பணியாற்றிய சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி பிஜேந்திர பால் மற்றும் அவர்களது துணைவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
நீண்டகாலமாக சேவையாற்றிய ஊழியர்களுக்கு சுற்றுலா வாய்ப்பை வழங்குவதற்கான யோசனை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவினால் முன்வைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னர் கடந்த சனிக்கிழமை (04) புதுடில்லியில் உள்ள மஹா போதி விகாரையில் வைத்து மதகுருமார் அவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியதுடன், அவர்களுக்கான விமான டிக்கெட்டுக்கள் மற்றும் ஹோட்டல் முன்பதிவு ஆவணங்களை உயர்ஸ்தானிகர் அவர்களிடம் அங்கு வைத்து கையளித்தார்.
இந்தக் குழுவினரின் விஜயத்திற்காக இலங்கையின் மூன்று தனியார் நிறுவனங்கள் அனுசரணை வழங்கியுள்ளன.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புதுடில்லி
2021 டிசம்பர் 09