அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் காடழிப்பு மற்றும் புதைபடிவ எரிபொருட்களின்  பயன்பாட்டைத் தடுப்பதற்கான உலகளாவிய நடவடிக்கையின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  எடுத்துரைப்பு

 அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் காடழிப்பு மற்றும் புதைபடிவ எரிபொருட்களின்  பயன்பாட்டைத் தடுப்பதற்கான உலகளாவிய நடவடிக்கையின் முக்கியத்துவத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  எடுத்துரைப்பு

அபுதாபியில் நடைபெறும் 5வது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 2021 டிசம்பர் 3  முதல் 5 வரை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

டிசம்பர் 04ஆந் திகதி அபுதாபியில் நடைபெற்ற தொடக்க விழாவில் இந்து சமுத்திர மாநாடு - 2021 இன் தலைவராக ஜனாதிபதி ராஜபக்ஷ தொடக்க உரையை நிகழ்த்தினார். 'சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்' என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, பாதுகாப்பான நாளைய உலகத்திற்காக காடழிப்பைக் கட்டுப்படுத்துவதற்கும், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும்,  வரையறுக்கப்பட்ட வளங்கள் அதிகமாகச் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் உலகளாவிய நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தற்போதைய உலகளாவிய தொற்றுநோயின் சவால்களை எதிர்கொள்வதற்காக நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் அவசரத் தேவையை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணை ஜனாதிபதியும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல்  மக்தூம், டிசம்பர் 04 ஆந் திகதி துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 இல் இலங்கைக் கூடத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவைச் சந்தித்தார். 2021 டிசம்பர் 02ஆந் திகதி கொண்டாடப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியத்தின் தேசிய தினத்தின் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாண்புமிகு ஷேக் மொஹமட் அவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இக்கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையில் பல தசாப்தங்களாக நீடித்து வரும் நீண்டகால நட்புறவுகளை நினைவு கூர்ந்த மாண்புமிகு ஷேக் மொஹமட், உயர்மட்ட விஜயங்களின் பரிமாற்றத்தின் மூலம் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள வர்த்தகங்கள் மற்றும் நிறுவனங்களை இலங்கையில் குறிப்பாக கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.

துபாயில் நடைபெற்ற எக்ஸ்போ 2020 இல் தலைமைத்துவக் கூடத்தில் துபாயின் துணை ஆட்சியாளரும், துணைப் பிரதமரும், நிதி  அமைச்சருமான மாண்புமிகு ஷேக் மக்தூம் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூமுடன் ஜனாதிபதி ராஜபக்ஷ அதே நாளில் சந்திப்பொன்றில் ஈடுபட்டார். இந்த இருதரப்புக் கலந்துரையாடலில் அரசியல் உறவுகள், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாப்பட்டது.

தனது பரபரப்பான கால அட்டவணையின் காரணமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அபுதாபியின் பட்டத்து இளவரசரும்  ஆயுதப்படைகளின் துணைத் தளபதியுமான மாண்புமிகு ஷேக் மொஹமட் பின் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானை மெய்நிகர் ரீதியாக சந்தித்தார். மெய்நிகர் சந்திப்பின் போது, ஜனாதிபதியை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வரவேற்ற அபுதாபியின் பட்டத்து இளவரசர், எதிர்காலத்தில் நேரில் சந்திப்பதற்கான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐக்கிய அரபு இராச்சியம் நிறுவப்பட்டதன் பொன்விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ராஜபக்ஷ பட்டத்து இளவரசருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த விஜயத்தின் போது வழங்கப்பட்ட அன்பான விருந்தோம்பலுக்காக பட்டத்து இளவரசருக்கு நன்றிகளைத் தெரிவித்த ஜனாதிபதி, வேலைவாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் சுமார் 300,000 இலங்கையர்களுக்கு இரண்டாவது வீடாக ஐக்கிய அரபு இராச்சியத்தை அமைத்துக் கொடுத்தமைக்காக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

டிசம்பர் 05ஆந் திகதி துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜனாதிபதி ராஜபக்ஷ புறப்படும்போது, இருதரப்பு உறவுகளை  வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்திய சர்வதேச வர்த்தக அமைச்சர் கலாநிதி. தானி அல் சியோடி, ஐக்கிய  அரபு இராச்சியத்தில் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கான தனது ஆதரவை ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் சென்றிருந்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் ஐக்கிய அரபு  இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மல்ராஜ் சில்வா ஆகியோர் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஈடுபாடுகளில் கலந்துகொண்டனர்.

 இலங்கைத் தூதரகம்,

அபுதாபி

2021 டிசம்பர் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close