இலங்கையின் இரத்தினக் கற்கள் ஆர்மேனியாவிற்குள் நுழையவுள்ளது

இலங்கையின் இரத்தினக் கற்கள் ஆர்மேனியாவிற்குள் நுழையவுள்ளது

இரு நாடுகளினதும் தொழில்துறைப் பங்குதாரர்களிடையே தொடர்புகளை நிறுவும் நோக்கத்துடன், விலைமதிப்பற்ற கற்களைக் கொள்வனவும் செய்யும் ஆர்மேனியக் கொள்வனவாளர்களுக்கும், இலங்கை இரத்தினக்கல் ஏற்றுமதியாளர்களுக்கும் இடையிலான மெய்நிகர்  வணிக சந்திப்பை இலங்கையின் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை மற்றும் ஆர்மேனியாவில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் சர்கிஸ் டார்வர்டியன் ஆகியோருடன் இணைந்து, மொஸ்கோவில் உள்ள இலங்கைத் cதூதரகம் 2021 டிசம்பர் 02ஆந் திகதி ஏற்பாடு செய்தது.

இந்த மெய்நிகர் கலந்துரையாடலில், 8 இலங்கை இரத்தினக்கல் ஏற்றுமதி நிறுவனங்களின் விளக்கக்காட்சிகள் மற்றும் இலங்கையின் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் அயோமா டயஸ் வழங்கிய இலங்கையின் விலைமதிப்பற்ற கல் தொழில்துறையின் நன்மைகள் பற்றிய கண்ணோட்டம் ஆகியன அடங்கியிருந்தன.

ஆர்மேனியக் குடியரசிற்கும் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே,  இலங்கையின் வளமான இரத்தினக் கற்களின் வளம் மற்றும் ஆர்மேனியாவின் செழிப்பான இரத்தினம் மற்றும் ஆபரணத் தொழிலைக் கருத்தில் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை எடுத்துரைத்தார்.

ஆர்மேனியக் குடியரசின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரின் ஆலோசகர் காகிக் மக்ர்ட்சியன், ஆர்மேனியாவின் இரத்தினம்  மற்றும் ஆபரண சங்கத்தின் தலைவர் ஹகோப் டர்பினியன், யெரெவன் மாநில ஆபரண ஆலையின் தலைவர் மற்றும் பல வணிகப் பிரதிநிதிகள் ஆர்மேனியத் தரப்பில் இருந்து இந்த சந்திப்பில் இணைந்திருந்தனர்.

ஆக்கபூர்வமான இந்த சந்திப்பின் நிறைவில், ஒத்துழைப்புக்கான வரைபடத்தை உருவாக்கவும், ஆர்வமுள்ள ஆர்மேனியக்  கொள்வனவாளர்களின் பட்டியல்களைப் பகிர்ந்து கொள்ளவும், பரஸ்பரம் நன்மை பயக்கும் கூட்டாண்மைகளை அமைப்பதற்கான கலந்துரையாடல்களை நெருக்கமாகப் பின்பற்றவும் இரு தரப்பும் தீர்மானித்தன.

 இலங்கைத் தூதரகம்,

மொஸ்கோ

2021 டிசம்பர் 08

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close