ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் உட்பட பல வதிவிடத் தூதரகங்களுடன் இணைந்து சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'தூதுவரின் தெரிவு: திரைப்பட விழா' வின் ஒரு பகுதியாக, பென்னட் ரத்நாயக்க இயக்கிய 'நெலா' என்ற இலங்கைத் திரைப்படம் 2021 நவம்பர் 28ஆந் திகதி திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் ராஜதந்திரப் படை உறுப்பினர்கள், சவூதி பிரஜைகள், இலங்கை சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் சவூதியைத் தளமாகக் கொண்ட வெளிநாட்டினர் பலர் கலந்துகொண்டனர்.
திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்னர், சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் பி.எம். அம்சா இலங்கையின் திரையுலகம் குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை வழங்கினார். 1925ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது மௌனத் திரைப்படமான 'ராஜகிய விக்ரமய' திரையிடப்பட்ட காலப்பகுதியிலிருந்து திரைப்படத் துறையின் வரலாறு செல்வதாக தூதுவர் குறிப்பிட்டார். சிரேஷ்ட திரைப்பட இயக்குனர்களான கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், திஸ்ஸ அபேசேகர, சந்திரன் ரத்னம், கலாநிதி டி.பி. நிஹால்சிங்க, உதயகாந்த வர்ணசூரிய, எச்.டி. பிரேமரத்ன, அசோக ஹந்தகம, பிரசன்ன விதானகே மற்றும் விமுக்தி ஜயசுந்தர ஆகியோர் தமது பணிகளுக்காக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்று, இலங்கையின் சினிமாத்துறைக்கு புதிய வாழ்க்கையை வழங்கியுள்ளனர். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தேயிலைத் தோட்டக் காலத்தின் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம் என்பதால், இலங்கைத் தேயிலை இன்னும் அதிகபட்ச மனிதத் தலையீட்டுடன் தரத்தை உறுதி செய்யும் வகையில் உற்பத்தி செய்யப்படுவதாக தூதுவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் இருந்து நில் பேட்டே சன்னட, அமெரிக்காவைச் சேர்ந்த ஹெமில்டன், சவூதியில் இருந்து ஸ்கேல்ஸ், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த குர்ருமுல் மற்றும் மெக்சிகன் திரைப்படமான மெஸ்குயிட்ஸ் ஹார்ட் போன்ற பல பாராட்டப்பட்ட திரைப்படங்கள் உட்பட பல்வேறு வகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படுகின்றன.
இலங்கைத் தூதரகம்,
ரியாத்
2021 டிசம்பர் 02