சுற்றுலா ஊக்குவிப்பை துரிதப்படுத்தும் பணிகளில் இலங்கைத் தூதரகங்கள்

 சுற்றுலா ஊக்குவிப்பை துரிதப்படுத்தும் பணிகளில் இலங்கைத் தூதரகங்கள்

இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல் குறித்து வெளிநாட்டில்  உள்ள இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் தலைவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், சுற்றுலா அமைச்சர் கௌரவ. பிரசன்ன ரணதுங்க மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் கௌரவ. தாரக பாலசூரிய ஆகியோர் 2021 டிசம்பர் 01ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து கூட்டாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர். இலங்கையில் உள்ள பரந்த அளவிலான சுற்றுலாத் தலங்கள் மற்றும் உள்வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்னோக்கிய வழிகள் குறித்து இலங்கை சுற்றுலாத்துறையின் தலைவர் திருமதி கிமர்லி பெர்னாண்டோ விரிவான விளக்கமளித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள 66 இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் மூலம் சுகாதாரம், மதம், உணவு, சுற்றுச்சூழல், விளையாட்டு, திரைப்படம் மற்றும் இசை உள்ளிட்ட பல துறைகளில் சுற்றுலாவை தீவிரமாக ஊக்குவிப்பதற்கும், மாதாந்த அடிப்படையில் முன்னேற்றங்கள் குறித்து மீளாய்வு செய்வதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. வெளிநாட்டு அமைச்சு, சுற்றுலா அமைச்சு  மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பில் பங்குபற்றிய அதேவேளை, இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் தலைவர்கள் மெய்நிகர் ரீதியாக இணைய வழியில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 டிசம்பர் 02

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close