ஜப்பான் தூதுவர் வெளிநாட்டு அமைச்சரை விடைபெறும் நிமித்தம் சந்திப்பு

 ஜப்பான் தூதுவர் வெளிநாட்டு அமைச்சரை விடைபெறும் நிமித்தம் சந்திப்பு

வெளிச்செல்லும் ஜப்பான் தூதுவர் அகிரா சுகியாமா வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை இன்று  வெளிநாட்டு அமைச்சில் வைத்து பிரியாவிடை பெறும் நிமித்தம் சந்தித்தார்.

உறுதியான வரலாற்று மரபின் மீது கட்டியெழுப்பப்பட்ட இரு நாடுகளுக்கிடையிலான வலுவான மற்றும் பன்முக உறவுகளை நினைவுகூர்ந்த வெளிநாட்டு அமைச்சர், இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதில் வெளிச்செல்லும் தூதுவரின் உறுதியான ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்காக அவருக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், கடினமான காலங்களில் ஜப்பான் இலங்கையின் உண்மையான  நண்பராக இருந்ததாகக் குறிப்பிட்டதுடன், கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களை சமாளிப்பதற்காக இலங்கைக்கு ஆதரவை வழங்குவதில் தூதுவர் சுகியாமாவின் அர்ப்பணிப்பு முயற்சிகளைப் பாராட்டினார். ஜப்பானிய அபிவிருத்தி உதவியின் கீழ் இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் குறிப்பாக விவசாயம், நீர்ப்பாசனம், குடிநீர், வீதி அபிவிருத்தி போன்ற துறைகளில் ஜப்பானின் பங்களிப்பை இலங்கை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார். ஜப்பானிய உதவி எப்போதும் நாட்டின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைந்ததுடன், அவை ஒருபோதும் முன்நிபந்தனைகளுடன் இணைக்கப்பட்டதாக அமையவில்லை எனக் குறிப்பிட்டார்.

மனித உரிமைகள் தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர், இலங்கையின் அடிப்படை  யதார்த்தங்களைப் புரிந்துகொள்வதிலும் இலங்கை மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் நிலவும் பிரச்சினைகளுக்கு இணக்கமான தீர்வைக் காண்பதிலுமான ஆக்கபூர்வமான ஈடுபாடுகளுக்காக ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றிகளைத் தெரிவித்தார். தூதுவர் சுகியாமா இலங்கையில் பதவி வகித்த காலத்தில் அவரது செயலூக்கமான வகிபாகத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

தூதுவர் சுகியாமா தனது உத்தியோகபூர்வ ஆணையை உயர் திருப்திகரமானதாக வழங்குவதற்காக நிபந்தனையற்ற மற்றும் கட்டுப்பாடற்ற அணுகலை வழங்கியமைக்காக, இலங்கையில் உள்ள அனைத்து பங்குதாரர்களுக்கும், வெளிநாட்டு அமைச்சருக்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றிகளைத் தெரிவித்தார். அடுத்த ஆண்டு, இரு நாடுகளும் இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில், தற்போதுள்ள விரிவான இலங்கை - ஜப்பான் பங்காளித்துவத்தை மேலும்  உயர்த்துவதற்குப் பொருத்தமான சந்தர்ப்பமாக அமையும் என தூதுவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஜப்பான் வெளிநாட்டு அமைச்சில் உயர் பதவியை ஏற்கவுள்ள தூதுவர் சுகியாமாவுக்கு பேராசிரியர் பீரிஸ்  பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

தூதுவர் சுகியாமா 2018 நவம்பர் முதல் மூன்று வருடங்கள் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவராகப்  பணியாற்றியுள்ளார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 நவம்பர் 10

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close