இலங்கைச் சுற்றுலாவை ஹெசன் கூட்டாட்சி மாநிலத்தின் வடகிழக்கில் துணைத் தூதரகம் ஊக்குவிப்பு

 இலங்கைச் சுற்றுலாவை ஹெசன் கூட்டாட்சி மாநிலத்தின் வடகிழக்கில் துணைத் தூதரகம் ஊக்குவிப்பு

பொருளாதார இராஜதந்திரத்தின் கீழ் ஹெசனின் வடகிழக்கில் திட்டமிட்ட நடவடிக்கைகளின்படி, சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வொன்றை பிராங்பேர்ட் ஆம் மெயினில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் 2021 அக்டோபர் 07ஆந் திகதி ஏற்பாடு செய்தது. இந்நிகழ்வில் விருந்தோம்பல் துறையின் தலைமை நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர்கள், உணவகங்கள், ஊடகங்கள் மற்றும் இலங்கையின் ஜேர்மனிய நண்பர்கள் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். வழமையான இசை நிகழ்ச்சிகள், நாடக நிகழ்ச்சிகள் மற்றும் குறிப்பாக தேசிய கைப்பந்து சுற்றுத்தொடர் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்ற வரலாற்று நகரமான வெட்ஸ்லரில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

பார்வையாளர்கள் மத்தியில் உரையாற்றிய பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத் தூதுவர் மதுரிகா ஜோசப் வெனின்ஜர், அற்புதமான நிலப்பரப்பு, நம்பமுடியாத வனவிலங்குகள், வண்ணமயமான திருவிழாக்கள், ஆயுர்வேத  மரபுகள், மாறுபட்ட கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் ஆற்றல்மிக்க மக்கள் ஆகியவற்றின் காரணமாக, சிறப்பான ஜேர்மானிய சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய இடமாக இலங்கையை சிறப்பித்தார். துணைத் தூதுவர் தனது விளக்கக்காட்சியை பரந்த அளவிலான உண்மையான மற்றும் மாறுபட்ட பயண அனுபவங்களைக் கொண்டு காட்சிப்படுத்தினார்.

விரிவான விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, பார்வையாளர்கள் மிகுந்த உற்சாகத்தையும், மற்றும் திருமண, கலாச்சாரச் சுற்றுலா, சமையல் மற்றும் ஆயுர்வேத சுற்றுலா ஆகியவற்றில் குறிப்பிட்ட ஆர்வத்தையும் வெளிப்படுத்தினர்.  எமது தேசிய விமான நிறுவனமான ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸினூடாக பிராங்பேர்ட்டில் இருந்து கொழும்புக்கான நேரடி விமானங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஜேர்மன் பார்வையாளர்களுக்கு துணைத் தூதுவர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்வின் போது, இலங்கை தொடர்பான ஒலி - ஒளிக் காட்சிகள் மற்றும் ஒலிப்பதிவுகள் திரையிடப்பட்டதுடன், விழிப்புணர்வை மேலும் அதிகரிப்பதற்காக சுற்றுலா சார்ந்த சிற்றேடுகளும் விநியோகிக்கப்பட்டன.

இலங்கைத் தேயிலை சபையின் உயர்தர 'ஏழு பிராந்தியத் தேயிலை' கொண்டு தயாரிக்கப்பட்ட தேநீர் விநியோகிக்கப்பட்டு, நிகழ்வு நிறைவடைந்தது.

நிகழ்வின் முடிவில், பர்க் கன்சல்ட்டின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. அண்ட்ரியாஸ் பர்க்கின் அழைப்பிற்காகவும், நிகழ்வை ஒருங்கிணைத்தமைக்காகவும் துணைத் தூதுவர் அவருக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கையின் துணைத் தூதரகம்,

பிராங்பேர்ட் அம் மெயின்

2021 அக்டோபர் 22

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close