சினோஃபார்ம் குழுமத்தின் தலைவர் திரு. லியு ஸிங்ஜென் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவக் குழுவை தூதுவர் கலாநிதி. பாலித்த கொஹொன 2021 செப்டம்பர் 07ஆந் திகதி சந்தித்தார். இலங்கைக்கு சினோஃபார்ம் தடுப்பூசிகளை தடையின்றி வழங்குவதைப் பாராட்டி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடமிருந்தான தனிப்பட்ட கடிதத்தை தூதுவர் தலைவரிடம் கையளித்தார்.
சினோஃபார்ம் இலங்கையுடன் தொடர்ந்தும் ஒத்துழைத்து தடுப்பூசிகளை வழங்கும் என தலைவர் குறிப்பிட்டார். பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் இலங்கையின் சாதகமான வர்த்தக அணுகலைப் பயன்படுத்திக் கொள்ள இலங்கையில் தடுப்பூசிகளை நிரப்பும் ஆலையை நிறுவுவதில் அவர் ஆர்வம் காட்டினார். சினோபார்ம் தடுப்பூசி 100 நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், 50க்கும் மேற்பட்ட அரச தலைவர்கள் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளுக்கு இந்தத் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், சினோபார்ம் தடுப்பூசியின் மூலம் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு பாதகமான விளைவுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசிகளை வழங்கியமைக்காக சீன அரசாங்கத்துக்கு அதிமேதகு ஜனாதிபதி மற்றும் இலங்கை மக்கள் சார்பாக தனது பாராட்டுக்களை தூதுவர் கலாநிதி. கொஹொன தெரிவித்தார். இலங்கையில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் சீனாவிற்கு இடையேயான வரலாற்று இருதரப்பு ஒத்துழைப்பை நினைவு கூர்ந்த தூதுவர் கலாநிதி. கொஹொன, இந்தத் தொற்றுநோயை எதிர்கொள்வதற்கு இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இலங்கைத் தூதரகம்
பெய்ஜிங்
2021 செப்டம்பர் 09