சார்க் நிதி அமைச்சர்களின் பதினாறாவது முறைசாரா கூட்டமானது

சார்க் நிதி அமைச்சர்களின் பதினாறாவது முறைசாரா கூட்டமானது

சார்க் நிதி அமைச்சர்களின் பதினாறாவது முறைசாரா கூட்டமானது, 2021 மே 03 முதல் 05 வரை மெய்நிகர் ரீதியாக நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54வது வருடாந்தக் கூட்டத்தின் ஒரு பகுதியாக, 2021 மே 05ஆந் திகதி மெய்நிகர் ரீதியாக பிற்பகல் 1:30 மணி முதல் மாலை 3:30 மணி வரை (மணிலா நேரம்) நடைபெற்றது. அனைத்து சார்க் உறுப்பு நாடுகளினதும் மாண்புமிகு நிதி அமைச்சர்கள் / தூதுக்குழுவின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் நேபாளத்தின் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு. பிஷ்ணு பிரசாத் பவுடல் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சார்க்கிற்கு தொடர்ந்தும் நல்கிய ஆதரவுகளுக்காக தலைவர் தனது ஆரம்ப அறிக்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மெய்நிகர் ரீதியான கூட்டத்திற்காக சார்க் செயலகம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன இரண்டாவது முறையாக மேற்கொண்ட சிறந்த ஏற்பாடுகளையும் அவர் பாராட்டினார். கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட மிகப்பெரிய சவால்களை சுட்டிக்காட்டிய அவர், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஒற்றுமையும் கூட்டு முயற்சிகளும் முன்னுரிமைகளாக இருக்க வேண்டும் என்றும், பொருளாதாரத்தின் முக்கியமான பகுதிகளில் அதன் எதிர்மறையான தாக்கங்களையும் குறிப்பிட்டார்.

கூட்டத்தின் கருப்பொருளான 'கோவிட்-19 இலிருந்து பொருளாதார மீட்பு: அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நெகிழ்ச்சியான அபிவிருத்தியை நோக்கி' என்ற கருத்தின் பின்னணியிலான ஒரு அறிக்கையை சார்க் பொதுச்செயலாளர் மாண்புமிகு திரு. எசல ஆர். வீரக்கோன் வெளியிட்டதுடன், சார்க் மற்றும் அதன் உறுப்பு நாடுகளின் பொருளாதாரங்கள் மீதான தொற்றுநோயின் பாதகமான தாக்கங்களையும், தடுப்பூசியை உலகமயமாக்குதல் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளின் தேவையையும் எடுத்துரைத்தார். நெருக்கடியான இந்த நேரத்தில் கூட்டு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் அவர் கோடிட்டுக் காட்டினார். அனைத்து நாடுகளும் தமது தன்னார்வமயமான பங்களிப்புக்களை வழங்கியுள்ள கௌரவ இந்தியப் பிரதமரின் சார்க் கோவிட்-19 அவசர நிதியை உருவாக்குவதற்கான முன்மொழிவுக்காக, தொற்றுநோயின் பாதகமான விளைவுகளை நிவர்த்தி செய்வதற்கும், மற்றும் குறிப்பாக சார்க் தலைவரின் உடன்பாட்டினைப் பெற்றுக் கொள்வதற்கும் உறுப்பினர்கள் முன்னெடுத்த உடனடி மற்றும் விரைவான பிரதிபலிப்புக்களை சுட்டிக்காட்டினார். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வித் துறையிலான அதிக முதலீடுகள் மற்றும் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற அபிவிருத்திப் பங்காளிகளுடனான அதிக ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டங்கள் போன்றன இந்த சவாலான நேரத்தில் தொடரப்படல் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சார்க் இடையேயான ஒத்துழைப்பின் நிலை மற்றும் பிராந்தியத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி ஏற்கனவே மேற்கொண்டுள்ள முயற்சிகள் மற்றும் நிதிக் கடமைகள் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் (செயற்பாடுகள் I) துணைத் தலைவர் திரு. ஷிக்சின் சென் கூட்டத்தில் விளக்கினார். குறிப்பாக கோவிட்-19 மற்றும் அதன் எதிர்மறையான தாக்கங்களை கருத்தில் கொண்டு பிராந்தியத்தில் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக சார்க் உடன் தொடர்ந்து ஒத்துழைப்பதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தாம் அடைந்து கொண்ட பொருளாதார முன்னேற்றத்தின் தற்போதைய நிலையுடன் தொற்றுநோயின் தாக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கும் தணிப்பதற்கும் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர்கள் / தூதுக்குழுவின் தலைவர்கள் கூட்டத்தில் விளக்கமளித்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கி தமது பொருளாதார வளர்ச்சிக்காக அளித்த பங்களிப்புக்களைப் பாராட்டி, பிராந்திய மக்களின் நலனுக்காக முழுமையான திறனை அடைவதற்காக சார்க் மேலும் முன்னேற்றங்களை மேற்கொள்ளும் என நம்பிக்கை வெளியிட்டனர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பொருளாதார ஆய்வு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புத் திணைக்களத்தின் தலைமைப் பொருளாதார நிபுணர் மற்றும் பணிப்பாளர் நாயகம் திரு. யசுயுகி சவாடா, இந்தக் கூட்டத்தின் முக்கியமான கருப்பொருளான 'கோவிட்-19 இலிருந்து பொருளாதார மீட்பு: அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் நெகிழ்ச்சியான அபிவிருத்தியை நோக்கி' என்பது குறித்த விளக்கக்காட்சியை வழங்கினார். தொற்றுநோயின் தற்போதைய நிலைமை, பொருளாதாரத்தில் அதன் சாத்தியமான தாக்கங்கள் மற்றும் பிராந்தியத்தில் நிலையான, பசுமை வளர்ச்சிக்குத் தேவையான சவால்கள் மற்றும் நடவடிக்கைகள் இந்த விளக்கக்காட்சியில் எடுத்துக்காட்டப்பட்டது.

காத்மாண்டு

2021 மே 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close