உயர்ஸ்தானிகர் ஸ்ரீமால் விக்ரமசிங்க 2021 ஏப்ரல் 20ஆந் திகதி சீஷெல்ஸ் குடியரசின் ஜனாதிபதியிடம் தனது நற்சான்றிதழ்களை கையளித்தார். சீஷெல்ஸில் உள்ள அரச மாளிகையில் நடைபெற்ற விழாவில் வெளிநாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர், வெளிவிவகார முதன்மைச் செயலாளர், வெளிவிவகார இருதரப்பு விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் மற்றும் தூதரகத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நற்சான்றிதழ்களைக் கையளித்ததைத் தொடர்ந்து, சீஷெல்ஸின் உப ஜனாதிபதி மாண்புமிகு அஹ்மத் அபிஃப், விக்டோரியாவின் நகரபிதா திரு. டேவிட் அன்ட்ரே, மீன்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஜீன் பிராங்கோயிஸ் பெராரி மற்றும் சுகாதார அமைச்சர் மாண்புமிகு பெக்கி விடோட் ஆகியோருடனான சந்திப்பில் உயர் ஸ்தானிகர் விக்ரமசிங்க ஈடுபட்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கும், ஒத்துழைப்பை புதிய உயர்வுகளுக்கு உயர்த்துவதற்குமான தனது ஆர்வத்தை உயர் ஸ்தானிகர் வெளிப்படுத்தினார்.
தனது புதிய பணியில் வெற்றிகளைப் பெற்றுக் கொள்வதற்காக அதி மேதகு ஜனாதிபதி உயர் ஸ்தானிகரை வாழ்த்தியதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை அன்புடன் நினைவு கூர்ந்தார்.
இந்த விழாவில் உத்தியோகபூர்வ புகைப்படம் எடுக்கப்பட்டதுடன், 'தேசிய அணிவகுப்பு மரியாதை' க்கு அமைவான மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது.
கடந்த கால அனுபவங்களையுடைய இலங்கை இராஜதந்திரியான திரு. ஸ்ரீமால் விக்ரமசிங்க, ஒஸ்ட்ரியாவிற்கான இலங்கையின் முன்னாள் துணைத் தூதரகத் தலைவராகவும், 2009 முதல் 2015 வரை வியன்னாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் துணை நிரந்தரப் பிரதிநிதியாகவும் செயற்பட்டார்.
கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியா சர்வதேச ஒலிம்பிக் அகடமியின் நட்புச் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் அவர் முன்னர் செயற்பட்டதுடன், ஐக்கிய இராச்சியத்தில் தனியார் துறையிலும் பணியாற்றியுள்ளார். இலங்கையின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவிகளைப் பெறுவதற்காக ஏராளமான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளில் பங்குபற்றியுள்ளதுடன், ஐரோப்பாவின் மிகப்பெரிய வங்கிகளுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இலங்கை உயர் ஸ்தானிகராலயம்
விக்டோரியா
2021 ஏப்ரல் 25