நெதர்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர், தனது சான்றாதாரப் பத்திரங்களை நெதர்லாந்து அரசரிடம் கையளிப்பு

நெதர்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர், தனது சான்றாதாரப் பத்திரங்களை நெதர்லாந்து அரசரிடம் கையளிப்பு

நெதர்லாந்து இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள திருமதி அருணி ரணராஜா, தனது சான்றாதாரப் பத்திரங்களை, 21 ஏப்ரல் 2021 புதன்கிழமையன்று ஹேக் இலுள்ள அரண்மனையில், மாட்சிமை தங்கிய நெதர்லாந்து அரசர் வில்லியம் அலக்ஸாண்டர் அவர்களிடம் கையளித்தார். சான்றாதாரப் பத்திரங்கள் கையளிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து, பார்வையாளர்களுடனும் இருவரிடையேயான தனிப்பட்ட உரையாடல்களும் இடம்பெற்றன.

மாட்சிமை தங்கிய அரசர் வில்லியம் அலக்ஸாண்டர் அவர்கள், தூதுவர் திருமதி ரணராஜா அவர்களை மகிழ்வுடன் வரவேற்று, அவரது பணியில் வெற்றிபெற வாழ்த்தினார். இரு நாடுகளுக்குமிடையிலுள்ள நீண்டகால நட்புறவு மற்றும் கூட்டுறவில் உறுதியாக அமைக்கப்பட்டும் பல நூற்றாண்டு காலங்களாகப் பிணைக்கப்பட்டுமுள்ள வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளின் அடிப்படையில், இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான கூட்டுறவினை மேலும் வளர்ப்பதற்கான தேவையை  அரசர் அச்சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டார். அதேவிதமான உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தூதுவர் ரணராஜா, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஷ ஆகியோரது வாழ்த்துக்களையும் மாட்சிமை தங்கிய அரசரிடம் தெரிவித்தார். அரசர் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்துகொண்டார்.

தூதுவர் ரணராஜா, இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களின் பின்னரான நடப்பு அரசியல் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் குறித்தும், “செழிப்பு மற்றும் மேன்மையின் காட்சி” தேசிய கொள்கைக் கட்டமைப்பு நடைமுறைப்படுத்தல் ஆகியவை தொடர்பாக மாட்சிமை தங்கிய அரசரிடம் தொகுத்துரைத்தார். இலங்கையும் நெதர்லாந்தும்  70 வருடகால இராஜதந்திர உறவுகளின் முக்கியமான மைல்கல்லை அடைந்துள்ள நிலையில், நெதர்லாந்து இராச்சியத்தின், வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட, விவசாயம், நீர் முகாமைத்துவம், மனித வளங்கள் அபிவிருத்தி, கடல்சார் துறை, புறச்செய்விப்பு, சுற்றுலா, விமானப்போக்குவரத்து மற்றும் மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்புகள் ஆகிய சகல துறைகளிலான ஈடுபாடுகளிலும் பன்முகப்படுத்தப்பட்ட உறவுகளை விரிவாக்குவதற்கான இலங்கையின் வலுவான அர்ப்பணிப்பினையும் தூதுவர் எடுத்துரைத்தார்.  நெதர்லாந்து சுற்றுலாத்துறையிலுள்ள பெரும் சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டிய அரசர், இந்த வாய்ப்பினை பெரிதும் பயன்படுத்த இலங்கைக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த சான்றாதார நிகழ்வுகளில், நெதர்லாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நாயகம் திரு பி எச் எ எம் ஹுயிட்ஸ் மற்றும் அரச குடும்பத்தின் தலைவர் திரு சி பிறீட்ஃபெல்ட் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர்.

25 வருட இராஜதந்திர சேவை அனுபவத்தைக் கொண்டுள்ள தூதுவர் அருணி ரணராஜா அவர்கள், பிலிப்பைன்ஸ் குடியரசின் தூதுவராக சேவையாற்றியதுடன், பெல்ஜியம் இராச்சியம் உட்பட, ஐரோப்பிய ஒன்றியம், தாய்லாந்து இராச்சியம், ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இத்தாலி குடியரசு ஆகிய நாடுகளிலும் இராஜதந்திர பதவிகளை வகித்திருக்கிறார்.  தற்போதைய நியமனத்திற்கு முன்னதாக, இவர், கொழும்பு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் தெற்கு ஆசியா மற்றும் சார்க் பிரிவின் இயக்குனர் நாயகமாக பணியாற்றியிருந்தார். தூதுவர் ரணராஜா அவர்கள், உக்ரெய்ன், கீவ் இலுள்ள அரச பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் கற்கை நெறியில் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார். இவர் கண்டி மஹாமாய பெண்கள் கல்லூரியின் பழைய மாணவியாவார்.

இலங்கை தூதரகம்
ஹேக்

25 ஏப்ரல் 2021

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close