இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும், ஆப்கானிஸ்தானும் இன்று (07/04) கைச்சாத்திட்டன.
இரு தெற்காசிய நாடுகளுக்கிடையிலான வழக்கமான ஈடுபாடு மற்றும் கூட்டாண்மைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன கைச்சாத்திட்டதுடன், கொழும்பிலுள்ள ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதரி ஆப்கான் அரசாங்கத்தின் சார்பில் கைச்சாத்திட்டார்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு வெளிநாட்டு அமைச்சுக்களினதும் ஆக்கபூர்வமான வசதியளித்தல்களின் மூலம் இலங்கை - ஆப்கானிஸ்தான் இருதரப்புப் பங்காண்மையானது மேலும் வளர்ச்சியடையும் ஆதலால், இருதரப்பு உறவுகளின் முழுமையான வரம்புகளை வருடாந்த அடிப்படையில் மீளாய்வு செய்ய முடியும் என இரு நாடுகளும் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தின.
அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம், சுகாதாரம், சமூகம், மக்களுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உட்பட பொதுவான நலன்களின் ஏனைய பகுதிகளை இது உள்ளடக்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் மூலம், அரசியல் ஆலோசனைகள் அல்லது வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகளின் இருதரப்பு ஆவணங்களை தெற்காசியப் பிராந்தியத்தின் அனைத்து நாடுகளுடனும் நிறுவுவதை இலங்கை நிறைவு செய்கின்றது. கைச்சாத்திடப்பட்ட இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான 63 ஆண்டுகால முறையான இராஜதந்திர உறவுகளின் வரலாற்றில் ஒரு முக்கியமான இருதரப்பு ஆவணமாகும்.
இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் அரசியல் ஆலோசனைகளின் அங்குரார்ப்பண அமர்வை பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நேரத்தில் நடாத்துவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். பொருளாதார மற்றும் வர்த்தக விடயங்களிலான நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும், அண்டை நாடுகள் மற்றும் சார்க் உறுப்பினர்களுடனான தொடர்பு ஆகியன இலங்கையின் முன்னணிப் பொருளாதார இராஜதந்திர இலக்காக உள்ளது.
தேயிலை, இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், உலர் பழங்கள், விதைகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட இருதரப்பு வர்த்தகத்திற்கான உயர் சாத்தியம் மிகுந்த பகுதிகளை இரு தரப்பினரும் அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், நேரடி விமான இணைப்பானது இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலா, கலாச்சார மற்றும் சமூக ஈடுபாடுகளில் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்தும் என்பதை சுட்டிக் காட்டினர்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் கொழும்பில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஏப்ரல் 07
...................................
இலங்கை வெளிநாட்டு அமைச்சு மற்றும் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றுக்கு இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் கைச்சாத்திட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டு அமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களின் ஊடக அறிக்கை
ஆயுபோவன்!
மாண்புமிகு அஷ்ரப் ஹைதரி, இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர்
கௌரவ. தாரக்க பாலசூரிய, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர்,
வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே,
மரியாதைக்குரிய சீமாட்டிகளே மற்றும் கனவான்களே
எமது இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையில் அரசியல் ஆலோசனைப் பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கியமான இருதரப்பு ஆவணங்களில் ஒன்றை நாங்கள் நிறைவு செய்துள்ளோம்.
இலங்கை - ஆப்கானிஸ்தான் இருதரப்பு உறவுகளை வருடாந்த அடிப்படையில் மீளாய்வு செய்வதற்காக இரு வெளிநாட்டு அமைச்சுக்களுக்கும் கோரிக்கை விடுப்பதன் காரணமாக, வலுவான இலங்கை - ஆப்கானிஸ்தான் இருதரப்புக் கூட்டாண்மைக்கானதொரு அடித்தளத்திற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கின்றது. அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம், சுகாதாரம், சமூகம், மக்களுக்கிடையிலான தொடர்புகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உட்பட பொதுவான நலன்களின் ஏனைய பகுதிகளை இது உள்ளடக்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதன் மூலம், தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளினதும் வெளிநாட்டு அமைச்சுகளுக்கிடையில் அரசியல் ஆலோசனைகள் அல்லது வெளிநாட்டு அலுவலக ஆலோசனைகளின் இருதரப்பு ஆவணங்களை நிறுவுவதனை இலங்கை நிறைவு செய்கின்றது. ஆப்கானிஸ்தான் சார்க் நாடாக இருந்த போதிலும், அதனுடனான இதுபோன்ற முறையான இருதரப்பு ஆவணம் இப்போது வரை எங்களிடம் இல்லை.
எமது இரு நாடுகளும் 63 ஆண்டுகால முறையான இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்துள்ளன. இந்த நிரந்தர ஆலோசனைப் பொறிமுறையின் மூலம் எமது இருதரப்பு உறவில் ஒரு புதிய கட்டத்தை இன்று நாங்கள் எட்டியுள்ளோம்.
தெற்காசியப் பிராந்தியத்துடன் சமாதானத்தை விரும்பும் நட்பு நாடாக, தனது நீண்டகால நடுநிலையான அணிசேராக் கொள்கைகளை நிலைநிறுத்தி, நிலையான அபிவிருத்தி, அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றிலான அர்ப்பணிப்புக்களுடன் ஈடுபடுவதற்கான தனது அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான சந்தரப்பத்தை இது இலங்கைக்கு வழங்கும்.
மேன்மை தங்கியவரே,
மரியாதைக்குரிய சீமாட்டிகளே மற்றும் கனவான்களே,
இலங்கை எப்போதுமே ஆப்கானிஸ்தானை எமது அண்டை நாட்டு நண்பராகவே கருதுகின்றது. எமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பல நூற்றாண்டுகள் பழைமையானதாவதுடன், எமது பொதுவான நாகரிகப் பாரம்பரியம் மற்றும் தனித்துவமான தெற்காசிய அடையாளங்களால் பிணைக்கப்பட்டுள்ளன. மறுநாள் நான் தூதுவர் ஹைதரியைச் சந்தித்தபோது, இயற்கை மற்றும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்ட பேரழிவுகளின் மத்தியிலும் கூட, ஆப்கானிஸ்தானில் இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் உயர் பௌத்த பாரம்பரியத்தைப் பற்றி அவர் எனக்கு தெரிவித்தார். நாங்கள் இருவரும் பல அரங்குகளிலான பொதுவான தன்மைகளைப் பகிர்ந்து கொள்வதுடன், எமது கலாச்சாரங்கள் பல தத்துவங்களால் வளர்க்கப்பட்டுள்ளன.
மேன்மை தங்கியவரே,
மரியாதைக்குரிய சீமாட்டிகளே மற்றும் கனவான்களே,
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை'யில், ஆப்கானிஸ்தானுடனான நெருக்கமான பன்முக உறவுகள் ஒரு முக்கிய முன்னுரிமையைப் பெற்றுள்ளன. பிராந்தியத்திலுள்ள அண்டை நாடுகளாக, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் இன்னும் பயன்படுத்தப்படாத சாத்தியமான பகுதிகள் இருப்பதுடன், எமது இரு வர்த்தக சமூகங்களுக்கிடையிலான செயற்பாட்டு ரீதியான ஈடுபாடுகளைக் காண்பதற்கு நாங்கள் விரும்புகின்றோம்.
தேயிலை, சுவையூட்டிகள், தொழில்நுட்பப் பொருட்கள் ஆகியவற்றை ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நாங்கள் விரும்புவதுடன், அவர்களது புனரமைப்பு நடவடிக்கைகளில் சேவை தொடர்பான நிபுணத்துவத்தையும் வழங்குவதற்கு விரும்புகின்றோம். அதற்குப் பிரகாரமாக, தமது தயாரிப்புக்களை ஆப்கானிஸ்தான் வர்த்தக சமூகம் இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும்.
தற்போது கணிசமான எண்ணிக்கையிலான வெளிநாட்டிலுள்ள இலங்கை வல்லுநர்கள் தமது சேவைகளை ஆப்கானிஸ்தான் முகவர்களுக்கு வழங்குகின்றனர். எமது பிரஜைகளுக்குப் பொருத்தமான பாதுகாப்பையும் நலனையும் வழங்கிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மனிதவளத் துறையில் ஒரு முறையான பொறிமுறையை நிறுவுவதற்கு நாம் பரிசீலனைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். இலங்கை வல்லுநர்களைத் தவிர, கல்வியியலாளர்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்தும் பணியாற்றி வருகின்றனர்.
எமது பொருளாதார, வர்த்தக மற்றும் இணைப்புத் திறன்களைக் குறைக்கும் வகையில் கோவிட்-19 தொற்றுநோயினால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியில், குறிப்பாக எமது ஈடுபாடுகளைப் புதுப்பிப்பதில் மீண்டும் கவனம் செலுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான நேரடி விமான சேவைகள் தொடர்பான ஒப்பந்தம் நிறைவு செய்யப்படுவதற்கு தயாராக உள்ளமையையும், இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வக் கடவுச்சீட்டுக்களையுடையவர்களுக்கு வீசா விலக்குகளை அளிப்பது குறித்த பேச்சுவார்த்தை செயன்முறை நிறைவடையும் தருவாயில் இருப்பதையும் அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
மேன்மை தங்கியவரே,
பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை எப்போதும் உறுதிபூண்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தற்போதைய சமாதான முன்னெடுப்புக்கள் வெற்றியடைவதற்கு நாங்கள் முழு மனதுடன் வாழ்த்துவதுடன், அது நிலையான அபிவிருத்தியின் பலன்களை எய்துவதற்கு வழிவகுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. பயங்கரவாதத்தையும் பொதுமக்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறைச் செயலையும் நாங்கள் சமமாக கண்டிக்கின்றோம்.
பிராந்தியத்தில், இலங்கை குறிப்பாக சார்க்கில் ஆப்கானிஸ்தானுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கு எதிர்பார்ப்பதுடன், பிராந்திய ஈடுபாட்டை வலுப்படுத்துவதில் ஆப்கானிஸ்தான் முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகின்றது.
எமது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் உறுதியான அர்ப்பணிப்புக்காக இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர் அஷ்ரப் ஹைதரிக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதற்கு நான் இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றேன்.
நன்றி