இலங்கையும், நியூசிலாந்தும் வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தன

இலங்கையும், நியூசிலாந்தும் வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தன

இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான முதல் சுற்று வெளிநாட்டு அமைச்சு ஆலோசனைகள் 2021 ஏப்ரல் 08ஆந் திகதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, வெளிநாட்டு அமைச்சின் கிழக்கு ஆசியப் பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் ரோஹன அம்பகொல்ல மற்றும் நியூசிலாந்தின் வெளிநாட்டு மற்றும் வர்த்தக அமைச்சின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிரிவின் பிரதேச முகாமையாளர் அண்ட்ரூ நீட்ஸ் ஆகியோர் தலைமை தாங்கினர்.

பரஸ்பரம் ஆர்வமுள்ள பரந்த அளவிலான விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன. வர்த்தகம், அபிவிருத்தி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, மக்களுக்கிடையிலான பரிமாற்றம், கல்வி முதல் விளையாட்டு மற்றும் சுற்றுலா வரையிலான பல துறைகளிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது உள்ளடங்கலான பல விடயங்களை இது உள்ளடக்கியிருந்தது. வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், ஈடுபாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருதரப்புப் பரிமாற்றங்களை அதிகரிப்பதற்குமாக, ஆக்கபூர்வமான பொறிமுறையொன்றை நிறுவுவதற்கான இருதரப்பு ஏற்பாடுகளை நிறைவு செய்வதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. சர்வதேச அரங்கில் பகிரப்பட்ட ஆர்வமுள்ள விடயங்களில் பங்கான்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு முக்கியமான மைல்கல்லாக, இலங்கை மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றுக்கு இடையே கணிசமான தொடர்புகளை விரிவுபடுத்துவதில் நீண்ட தூரம் பயணிப்பதற்கு ஏதுவாக்கும் வகையில், இந்த ஆண்டின் இறுதியில் நியூசிலாந்தின் உயர் ஸ்தானிகராலயம் கொழும்பில் திறந்து வைக்கப்படவிருப்பதை இலங்கை வரவேற்றது.

வெளிநாட்டு அமைச்சு மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நியூசிலாந்திற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ள கன்பெர்ராவில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் இராஜதந்திர அதிகாரிகள் இந்த மெய்நிகர் சந்திப்பில் இலங்கை சார்பாக பங்கேற்ற அதே வேளை, வெளிநாட்டு மற்றும் வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான நியூசிலாந்தின் தூதரகப் பொறுப்பாளர் ஆகியோர் நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

இலங்கைக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1955ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதுடன், வெளிநாட்டு அமைச்சின் ஆலோசனைகளின் தொடக்கமானது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்புப் பங்கான்மையை மீளாய்வு செய்து விரிவுபடுத்துவதற்கான சிறந்த தளத்தை வழங்கியுள்ளது.

 

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 ஏப்ரல் 09

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close