சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்திப்பு

சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன சந்திப்பு

கோவிட்-19 தொற்றுநோய் உள்ளடங்கலான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, கொழும்பைத் தளமாகக் கொண்ட இத்தாலி, ஜேர்மனி, நெதர்லாந்து, பிரான்ஸ், ருமேனியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்களை வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று (18/11) வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்தார்.

வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவற்றிலான ஒத்துழைப்பை மேலும் முன்னேற்றுவதில் விஷேட கவனம் செலுத்துவதன் மூலமாக இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தமது விருப்பத்தை ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர். 2.3 பில்லியன் யூரோ பெறுமதியான ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து வருவதாகவும், 6,000 க்கும் மேற்பட்ட ஏற்றுமதித் தயாரிப்பு வகைகளுக்கான கட்டணமில்லாத அணுகலை அனுமதிக்கின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி + சலுகையிலிருந்து தொடர்ந்தும் பயனடைந்து வருவதாகவும் தூதுவர்கள் எடுத்துரைத்தனர். இது சம்பந்தமாக, அண்மையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மற்றும் அக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் காலவரையறை ஆகியன குறித்து தூதுவர்கள் விளக்கங்களைக் கோரினர். கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படுத்தப்பட்டுள்ள பணம் மற்றும் சுற்றுலா வருமானங்களிலான கணிசமான குறைப்பின் காரணமாக, பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு நாணய இருப்பு ஆகியவற்றில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களை வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன விளக்கினார். எமது நகர்வின் பாகமாக இறக்குமதிக் கட்டுப்பாடுகள் மதிப்பாய்வு செய்யப்படுவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

குறிப்பாக கல்வி, திறன் அபிவிருத்தி, விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் துறைகள் போன்ற பல அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் தனியார் துறையுடனான முதலீடுகள் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான உதவி உள்ளடங்கலாக, கோவிட-19 தொற்றுநோயிலிருந்து பொருளாதார மற்றும் சமூக மீட்சிக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கு வழங்கிய உதவிகளை அமைச்சர் குணவர்தன பாராட்டினார்.

நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கும், நம்பகமான உள்நாட்டு செயன்முறையின் மூலமாக நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இலங்கை உறுதிபூண்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் உறுதியளித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான பகிரப்பட்ட, திறந்த மற்றும் தொடர்ச்சியான உரையாடலை தூதுவர்கள் பாராட்டினர்.

வெளிவிவகார செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.

 

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2020 நவம்பர் 19

 

The video can be viewed at: https://m.youtube.com/watch?v=YenUxU-voZE

 

 

 

The video can be viewed at: https://m.youtube.com/watch?v=YenUxU-voZE

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close