ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74 வது அமர்வின் பக்க நிகழ்வாக, 2019 செப்டம்பர் 26 ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெற்ற அணிசேரா இயக்கத்தின் அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தில் உரையாற்றும் போது, உலகளாவிய பலதரப்பு பொறிமுறைகள் சிக்கலில் இருக்கும் நேரத்தில், பண்டுங் கோட்பாடுகளின் பொருத்தப்பாடு குறித்து வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அடிக்கோடிட்டுக் காட்டினார். உலக மக்கள் தொகையில் 55 சதவீதத்தை அணிசேரா இயக்கம் உள்ளடக்கியுள்ளதால், தெற்கு உலகின், குறிப்பாக வளர்ந்து வரும் சிறிய நாடுகளின் கரிசனைகளுக்கு குரல் கொடுப்பது அதன் தார்மீகக் கடமையாகும்.
மோதல்கள், இடம்பெயர்வு, காலநிலை மாற்றம் மற்றும் தொற்று நோய்கள் போன்ற தேசிய எல்லைகளை மீறும் தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் அணிசேரா இயக்கத்தின் முயற்சிகளுக்கான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது. காலநிலை மாற்றம் போன்ற பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பொருளாதார மற்றும் சமூக சவாலாக மட்டுமல்லாமல், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகள் காரணமாக சமூகங்களும் நாடுகளும் பாதிக்கப்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக வெளிப்பட்டுள்ளன. 2019 செப்டம்பர் 23 ஆந் திகதி ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் காலநிலை தொடர்பான நடவடிக்கைகளுக்கான உச்சி மாநாட்டை வரவேற்ற அதே வேளை, இலங்கை போன்ற தீவு நாடுகளில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படுத்தப்படும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து செயலாளர் ஆரியசிங்க தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார். சிலியில் நடைபெறவுள்ள COP25 ஆனது, பரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுவதன் வாயிலாக காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதற்கான முயற்சிகளை அதிகரிக்கும் என்று வெளிவிவகார செயலாளர் நம்பிக்கை தெரிவித்தார்.
அனைத்து வகையான இனவெறி, வெறுப்பு மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இலங்கை முக்கியத்துவம் பெறுகிறது என்றும் இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களால் நிரூபிக்கப்பட்டுள்ள புதிய அச்சுறுத்தல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் வெளிவிவகார செயலாளர் ஆரியசிங்க தெரிவித்தார். இத்தகைய உலகளாவிய அச்சுறுத்தல் அனைத்து நாடுகளினதும் பாதுகாப்பையும் அச்சுறுத்துவதுடன், ஒரு நாட்டினால் தனியாக அதனைக் கையாள முடியாது, மாறாக கூட்டு முயற்சிகள் அவசியம் என்று குறிப்பிட்டதுடன், இந்த உலகளாவிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு ஆக்கபூர்வமான மற்றும் ஒத்திசைவான முறையில் கூட்டாக பங்களிப்பதற்கு அணிசேரா இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தார். கருத்துச் சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ள ஒரு சுதந்திர சமுதாயத்தை இலங்கை நம்புகின்றது, எனினும் வெறுக்கத்தக்க பேச்சு, இணையம் மற்றும் சமூக ஊடகத் தளங்களை துஷ்பிரயோகம் செய்வதற்கான அச்சுறுத்தல் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வெளிவிவகார செயலாளர் குறிப்பிட்டார்.
'சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கும், நாடுகளுக்கிடையே நட்புறவுகள் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்குமானதொரு வழிமுறையாக இறையாண்மை மற்றும் அரசியல் சுதந்திரத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துதல்' என்பது அமைச்சர்கள் மட்டக் கூட்டத்தின் கருப்பொருளாக அமைந்ததுடன், இந்தக் கூட்டத்தின் போது விளைவு ஆவணமொன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை 1955ஆம் ஆண்டின் பண்டுங் மாநாட்டின் இணை அனுசரணையாளராகவும், அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபக உறுப்பினராகவும் உள்ளது. கடந்த ஆறு தசாப்தங்களாக இந்தக் குழு தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருவதுடன், அதன் உறுப்பினர்கள் தொகை தற்போது ஐக்கிய நாடுகள் சபையில் 120 ஆக, அதாவது மூன்றில் இரண்டு பங்கான உறுப்பினர் தொகையையும் தாண்டியதாக அமைந்துள்ளது.