ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை இணைந்த ஆணைக்குழுவின் கீழான நல்லாட்சி, சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான செயற்குழுவின் நான்காவது கூட்டத்தொடர் 2019 ஆகஸ்ட் 30 ஆந் திகதி கொழும்பில் நடைபெற்றது.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு இடையிலான வழக்கமான இருதரப்பு பரிமாற்றங்கள், ஐரோப்பிய ஒன்றிய ஜி.எஸ்.பி + திட்டத்தினை மீள அனுமதித்தல், மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகியன தொடர்பில் இலங்கை அங்கீகரித்த சர்வதேச சாசனங்களை செயற்படுத்துதல் ஆகியவற்றின் பின்னணியில் இந்த கூட்டத்தொடர் இடம்பெற்றது.
நாட்டில் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஏற்பட்ட முன்னேற்றத்தை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றதுடன், எதிர்காலத்தில் இந்த சாதனைகளைத் தொடரவும் ஒருங்கிணைக்கவும் அழைப்பு விடுத்தது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை முன்னேற்றுதல், எந்தவொரு விடயத்திலும் பாகுபாடு காட்டாதிருத்தல், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உரிமைகள் தொடர்பில் உரையாடுதல், காணிகளை மீள வழங்குவதை இறுதி செய்தல் போன்றன கலந்துரையாடப்பட்டன. சித்திரவதைகளை பூஜ்ஜிய நிலையில் சகித்துக்கொள்வதனை நடைமுறைப்படுத்துவதற்கான முன்னேற்றங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டன.
அனைத்து சூழ்நிலைகளிலும் மரணதண்டனையைப் பயன்படுத்துவதற்கான தனது எதிர்ப்பை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியதுடன், மரணதண்டனையை ஒழிக்கும் நோக்கில் மரணதண்டனை மீதான அதன் தடையை தொடர்ச்சியாக பேணிக்கொள்ளுமாறு இலங்கையை ஊக்குவித்தது. ஊழல்களை எதிர்த்துப் போராடுவதற்கான நிறுவனங்கள், கொள்கைகள் மற்றும் சட்டங்களை வலுப்படுத்துவதிலான இலங்கையின் முயற்சிகள் வரவேற்கப்பட்டன.
சிறுபான்மையினர் தொடர்பான விடயங்கள், வெறுக்கத்தக்க பேச்சுக்கு தீர்வு காண்பது, மற்றும் தீவிரமயமாக்கல் மற்றும் வன்முறைத் தீவிரவாதம் குறித்து இணைந்த செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டது. ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில், தாக்குதல்களுக்குப் பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான ஒத்துழைப்பையும் உரையாடலையும் வலுப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் ஒப்புக் கொண்டன. சர்வதேச தரநிலைகள் மற்றும் மனித உரிமைகளுக்கு அமைவான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் தேவைப்பாடு வலியுறுத்தப்பட்டது.
உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் சர்வதேச மனித உரிமை சாதனங்களை திறம்பட செயற்படுத்துவதில் ஒத்துழைப்பதற்கும் தனது உறுதிப்பாட்டை செயற்குழு மீண்டும் உறுதிப்படுத்தியது. செயற்குழுவின் முடிவுகளும் பரிந்துரைகளும் கொழும்பில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய - இலங்கை இணைந்த ஆணைக்குழுவிற்கு அறிக்கையிடப்படும்.
இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பொதுநலவாயப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் செல்வி. தம்மிகா சேமசிங்க இலங்கையின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார். ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கை சேவையின் பிராந்திய விவகாரங்கள் மற்றும் தெற்காசியப் பிரிவின் தலைவர் செல்வி. கரோலின் வினோட் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கினார்.
31 ஆகஸ்ட் 2019
கொழும்பு