மண்டலம் மற்றும் பாதை ஒத்துழைப்பு தொடர்பான ஆசிய - பசுபிக் உயர் மட்ட மாநாட்டில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பங்கேற்பு

மண்டலம் மற்றும் பாதை ஒத்துழைப்பு தொடர்பான ஆசிய – பசுபிக் உயர் மட்ட மாநாட்டில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன பங்கேற்பு

மண்டலம் மற்றும் பாதை ஒத்துழைப்பு தொடர்பான ஆசிய - பசுபிக் உயர் மட்ட மாநாட்டில் மெய்நிகர் ரீதியாக 2021 ஜூன் 23ஆந் திகதி உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, தடுப்பூசிகளை உலகளாவிய பொது சுகாதார நலன்களாக அங்கீகரித்தல் உட்பட, கோவிட்-19 சவால்களை எதிர்கொள்வதில் அரசுகள் மற்றும் ஏனைய பங்காளர்களிடையே இருக்க வேண்டிய மேம்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். புதுப்பிக்கத்தக்க சக்தியை தேசிய முன்னுரிமையாகக் கொண்டு, நிலையான அபிவிருத்தி தொடர்பான இலங்கையின் கொள்கை மற்றும் எதிர்பார்ப்பையும் அவர் எடுத்துரைத்தார்.

வைரஸை எதிர்ப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள், தொற்றுநோயிலிருந்து விரைவாக மீண்டெழுதல் மற்றும்  மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தி ஆகியவை எதிர்காலத்தில் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை வலியுறுத்திய வெளிநாட்டு அமைச்சர், இலங்கையில் முக்கியமான அபிவிருத்தித் துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார். இந்த சூழலில் அபிவிருத்தியடைந்து வரும் கொழும்புத் துறைமுக நகரம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள துறைமுக உட்கட்டமைப்பு மற்றும் முக்கிய தொழில்துறை வலயங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டார்.

பிராந்தியத்தில் செழிப்பை அடைவதற்கான இணைப்பின் முக்கியத்துவத்தையும், பசுமை அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை அனைத்து அரசுகளினதும் தேசியத் திட்டமிடல் மற்றும் நிரலாக்கத்துடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் வெளிநாட்டு அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

ஆசிய - பசுபிக் பிராந்தியம் மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய  அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்த மாநாட்டிற்கு சீனாவின் வெளியுறவு அமைச்சர் தலைமை தாங்கினார். வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களும் அமைச்சர் குணவர்தனவுடன் இந்த மாநாட்டில் இணைந்திருந்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஜூன் 24

.........................................................

 மண்டலம் மற்றும் பாதை ஒத்துழைப்பு தொடர்பான ஆசிய - பசுபிக் உயர் மட்ட மாநாட்டில் வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. தினேஷ் குணவர்தன அவர்களின் அறிக்கை - 2021 ஜூன் 23

மாநில உறுப்பினர் மற்றும் மக்கள் சீனக் குடியரசின் வெளிநாட்டு அமைச்சர் அதிமேதகு வாங் யி அவர்களே,

பங்கேற்கும் நாடுகளின் மரியாதைக்குரிய வெளிநாட்டு அமைச்சர்களே மற்றும் பிரமுகர்களே,

மண்டலம் மற்றும் பாதை ஒத்துழைப்பு குறித்த ஆசிய - பசுபிக் உயர் மட்ட மாநாட்டில் இன்று உரையாற்றுவதையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வையின் கீழ், நாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய பங்காளர்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தி, அதிகரிப்பதன் மூலம் சமூகப் பொருளாதார அபிவிருத்தியின் புதிய அத்தியாயத்தை இலங்கை மேற்கொள்கின்றது. தொடர்ச்சியான தொற்றுநோயால் மனிதகுலம் எதிர்கொள்ளும் முன்னோடியில்லாத சவால்களைக் கருத்தில் கொண்டு இத்தகைய ஒத்துழைப்பு இன்று பெருகிய முறையில் வெளிப்படுகின்றது.

கோவிட்-19 தொற்றுநோயானது, மக்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரங்களுக்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பாதுகாப்பாகவும், நிலையானதாகவும் இந்தத் தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கான சிறந்த வழிகளை பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியன வழங்குகின்றது, ஆதலால் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்காக நாடுகளிடையே தகவல்களைப் பகிர்ந்து கொள்வது அவசியமாகும்.

இந்த சூழலில், எங்களது நண்பரும் கூட்டாளருமான சீனா சரியான நேரத்தில் இந்த சந்திப்பிற்கு அழைத்திருப்பதாக நான் கருதுகின்றேன்.

மேன்மை தங்கியவர்களே,

மேலும், கோவிட்-19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு, ஏனைய வைத்தியங்களுக்கிடையில் தடுப்பூசி மட்டுமே நிலையான தீர்வாகும். துரதிர்ஷ்டவசமாக, தீவிரமான விநியோகங்கள் மற்றும் வளக் கட்டுப்பாடுகள் ஆகியன அபிவிருத்தியடைந்து வரும் பல நாடுகளின் தடுப்பூசி இயக்கிகளைப் பாதித்துள்ளன.

இது சம்பந்தமாக, கோவிட்-19 தடுப்பூசிகளை 'உலகளாவிய பொது சுகாதார நன்மை' ஆக்குவதற்கான அழைப்பை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது.

'கல்யாண மித்ரா' கொள்கைகளின் அடிப்படையில் வளர்க்கப்பட்டு, நல்ல காலங்கள் மற்றும் கெட்ட காலங்கள் ஆகிய அனைத்து பருவங்களிலும் சீனாவுக்கு இடையிலான சிறந்த நட்பு நிலவி வருகின்றது.

அதிமேதகு ஜனாதிபதி ஸி ஜிங்பிங்க் அவர்களின் தலைமையின் கீழ், இலங்கையிலும், உலகெங்கிலும் மற்றும் ஏனைய பிராந்தியத்திலும் கோவிட்-19 தொற்றுநோயை ஒழிக்கும் பணியில் சீனா நல்கி வரும் பெரும் மனிதாபிமான பங்களிப்பு மற்றும் முன்னேற்றத்தை நாங்கள் மதிக்கின்றோம். உலகளாவிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகையில், சவால்களில் முன்னேற்றம் கண்டு, விண்வெளி அரங்கிலும் சீனா தனது பெரும் சக்திகளைக் காட்டியுள்ளது.

மேன்மை தங்கியவர்களே,

எமது பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களில் தற்போதைய உலகளாவிய தொற்றுநோயின் தாக்கம் பேரழிவுகளை ஏற்படுத்துகின்றது. இலங்கையின் பொருளாதாரமும் தொற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சவால்கள் இருந்தபோதிலும், எமது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்காகவும், எமது மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் எமது பலங்களையும் நன்மைகளையும் பயன்படுத்துவதனை இலங்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை நிர்ணயித்த நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளது.

இந்த நோக்கத்தை நோக்கி, எமது பொருளாதார உட்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்காகவும், ஒரு வெற்றிகரமான சூழ்நிலையின் கீழ் இணைப்பை மேம்படுத்துவதற்காகவும், மண்டலம் மற்றும் பாதை ஒத்துழைப்பிலிருந்து பயன்களை அடைந்து கொள்வதற்கு இலங்கை விரும்புகின்றது.

உயர் தர பிராந்திய நிதிச் சேவை நிலையமாக அமையவுள்ள கொழும்பு துறைமுக நகரம், கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள உலகத் தரம் வாய்ந்த துறைமுக உட்கட்டமைப்பு மற்றும் பல இடங்களில் காணப்படுகின்ற முக்கிய தொழில்துறை வலயங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தியுடன், உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்த முயற்சிகளால் பயனடைய முடியும் என இலங்கை நம்பிக்கை கொண்டுள்ளது.

சிங்கப்பூர் ஒரு முக்கிய ஆசிய நிதி மையமாக அபிவிருத்தியடைந்து வருவதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். துபாய் ஒரு முக்கிய மத்திய கிழக்கு நிதி மையமாக அபிவிருத்தியடைந்து வருவதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். நீண்ட காலமாக, இவற்றுக்கு இடையில் மிகவும் வறண்ட நிலைமை நிலவியது. இந்த நீண்ட கால அவகாசம் தற்போது 'கொழும்பு சர்வதேச நிதி மையத்தினால்' செயற்படுத்தப்படவுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் என்ற முறையில், 'கொழும்பு சர்வதேச நிதி நகரத்தில்' வந்து முதலீடு செய்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கோருவதற்கும், அழைப்பதற்கும் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

மேன்மை தங்கியவர்களே,

காலநிலைப் பின்னடைவை உருவாக்குவதற்கான தழுவல் நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டு வருவதுடன், புவி வெப்பமடைதலை எதிர்ப்பதற்கான உலகளாவிய பிரச்சாரத்திலும் ஆர்வமாகப் பங்கேற்று வருகின்றது. இரசாயண உரங்களின் பயன்பாட்டை இலங்கை கைவிடத் தொடங்கியுள்ளதுடன், 70% புதுப்பிக்கத்தக்க சக்தியையும் உற்பத்தி செய்வதற்கு உறுதிபூண்டுள்ளது.

அதன்படி, தொற்று மீட்பு மற்றும் அபிவிருத்தி இயக்கிகளில் பசுமை அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை இலங்கை அங்கீகரிக்கின்றது. இது சம்பந்தமாக, மண்டலம் மற்றும் பாதை பசுமை அபிவிருத்தி முயற்சிகள் மதிப்புமிக்க உத்வேகங்களை அளிக்கின்றன.

எமது அனைத்து மக்களினதும் செழிப்பை அடைந்து கொள்வதற்காக, சீனா மற்றும் அதன் கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது.

எல்லா மனிதர்களும் நலமாகவும், மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கட்டும்! நன்றி

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close