சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளதாக ஆசிய ஒத்துழைப்பு உரையாடலுக்கான உறுப்பு நாடுகளின் 17வது அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

சுற்றுலாப் பயணிகளின் வருகைக்காக இலங்கை திறக்கப்பட்டுள்ளதாக ஆசிய ஒத்துழைப்பு உரையாடலுக்கான உறுப்பு நாடுகளின் 17வது அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

'புதிய இயல்பான, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சுற்றுலாத்துறை' என்ற தலைப்பில் 2021 ஜனவரி 21ஆந் திகதி நடைபெற்ற ஆசிய ஒத்துழைப்பு உரையாடலின் 17வது அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றிய பல ஆலோசனைகள் மற்றும் தயார்படுத்தல்களின் பின்னர், பிரஜைகளின் பாதுகாப்பு மற்றும் காவலை, மிக முக்கியமாக வருகை தருபவர்களின் பாதுகாப்பை பேணும் வகையில் இலங்கை தனது எல்லைகளைத் திறந்துள்ளதாகத் தெரிவித்தார். அமைச்சர்கள் மட்ட கூட்டத்திற்கு முன்னதாக 2021 ஜனவரி 19ஆந் திகதி சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.

ஆசிய ஒத்துழைப்பு உரையாடலின் அமைச்சர்கள் மட்ட கூட்டத்தை நடாத்தியமைக்காக துருக்கி குடியரசின் அரசாங்கத்தை பாராட்டிய அமைச்சர் குணவர்தன, பிராந்தியத்தில் அனைத்தையும் உள்ளடக்கிய அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் 2030 நிலையான அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலுக்கு இயைபான ஆசிய ஒத்துழைப்பு உரையாடலின் லட்சிய வேலைத்திட்டத்திற்கு இலங்கை உறுதிபூண்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' என்ற கொள்கைக் கட்டமைப்பிற்கு ஏற்ப ஆசியாவை மையமாகக் கொண்ட நட்பு மற்றும் அணிசேரா வெளியுறவுக் கொள்கையில் இலங்கை கவனம் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.

விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புக்கான தூணின் இணைத் தலைமை நகர்வாளராக, விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகியன 2030 நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிப்பதாக அமையும் என்பதையும், மனித நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் தொற்றுநோய் உருவாக்கிய இடையூறுகளை மாற்றியமைக்கும் நோக்கில், 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து உலகம் பல்வேறு அளவுகளில் 'புதிய இயல்பான நிலைமையை' ஏற்றுக்கொண்டுள்ளமையால், இந்தத் தூணின் முக்கியத்துவம் போதுமானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதையும் இலங்கை அறிந்திருப்பதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். இது ஒரு உலகளாவிய பிரச்சினையாதலால், கூட்டாக மீண்டு கொள்வதற்காக அறிவுப் பகிர்வுக்கான தளங்களை உருவாக்குவதன் மூலம் அனைத்து உறுப்பு நாடுகளும் இந்த முக்கியமான தூணில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஆசிய ஒத்துழைப்பு உரையாடலுக்கான உறுப்பு நாடுகளின் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தின் முதலாவது மெய்நிகர் மாநாட்டை ஆசிய ஒத்துழைப்பு உரையாடலுக்கான கூட்டத்தின் ஒரு பகுதியாக 2021 ஜனவரி 20ஆந் திகதி ஏற்பாடு செய்தமைக்கான துருக்கியின் முயற்சியையும் அவர் வரவேற்றார். வர்த்தகத்தை உயர்த்துவதற்கும், விநியோகச் சங்கிலிகளை நகர்த்துவதற்குமானதொரு நோக்கத்துடன், இலங்கை வணிக சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் அதிகாரிகளை உள்ளடக்கிய குழு இந்த மாநாட்டில் பங்கேற்றது.

சுற்றுலாவை மையமாகக் கொண்ட தொற்றுநோய் மற்றும் மீட்பு முயற்சிகளின் பாதகமான விளைவுகளைத் தணிப்பது குறித்த அங்காரா பிரகடனம் இந்தக் கூட்டத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலகளாவிய பயணக் கட்டுப்பாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சேவைத் துறைக்கான விஷேட ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு, சலுகைகளை வழங்குவதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். பயணத் துறையை புதுப்பிக்கும் நோக்கில், எச்சரிக்கையுடன் இருக்கும் அதே சமயத்தில் படிப்படியாக திறப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை இலங்கை முன்னெடுத்தது. இந்தத் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள அனைவரினதும் பாதுகாப்பையும், காவலையும் உறுதி செய்வதற்காக அரசாங்கங்கள் மீது சுமத்தப்படும் சுமைகளை சுற்றுலாத்துறையைச் சார்ந்த பொருளாதாரத்தையுடைய உறுப்பு நாடுகள் புரிந்து கொள்ளும் ஆதலால், கூட்டாக தீர்வுகளைக் கண்டறிந்து கொள்வதில் அனைத்து அரசுகளுடனும் வெளிப்படையாக ஒத்துழைத்து, அவற்றுக்கு ஆதரவுகளை நல்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

பொருளாதார விவகாரப் பிரிவின் மேலதிக செயலாளர் பி.எம். அம்சா சிரேஷ்ட அதிகாரிகள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பல்தரப்பு விவகாரங்களுக்கான பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் ஜான் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் பொருளாதார விவகாரப் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர் இனோக்கா தர்மதாஸ ஆகியோரும் இந்தக் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

 

2021 ஜனவரி 22

Please follow and like us:

Close