50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை மற்றும் சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு

50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் இலங்கை மற்றும் சிங்கப்பூரில் கூட்டு முத்திரை வெளியீடு

1970ஆம் ஆண்டில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக கூட்டு முத்திரை வெளியீட்டு விழா ஜூலை 27ஆந் திகதி இலங்கை வெளிநாட்டு அமைச்சில் நடைபெற்றது. இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இணையவழி ரீதியாக இணைந்து கொண்ட சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பங்களிப்புடன் இந்த மைல்கல் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் சம்பிரதாயபூர்வமாக இரண்டு முத்திரைகள் வெளியிடப்பட்டதுடன், அவை கடல் சூழலைப் பாதுகாப்பதில் இரு நாடுகளினதும் பகிரப்பட்ட ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் குறிப்பாக 'கடல் பாதுகாப்பு' என்ற கருப்பொருளை சித்தரிக்கும் விதமாகவும், இலங்கையின் சதுப்புநிலங்கள் மற்றும் சிங்கப்பூரின் பவள சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பதை வெளிப்படுத்தும் முகமாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, சமூகம் மற்றும் சமூக மட்டங்களில் ஆழமாக வேரூன்றிய தொடர்புகளால் வளர்க்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை எடுத்துரைத்தார். இருவரும் வெவ்வேறு அமைச்சுப் பொறுப்புக்களை வகித்த போது, உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை சமாளிப்பது தொடர்பாக அமைச்சர் பாலகிருஷ்ணனுடன் இடம்பெற்ற சந்திப்பு மற்றும்  கலந்துரையாடல்களை அவர் நினைவு கூர்ந்தார். இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவுத் தபால் முத்திரைகளை வெளியிடுவதானது, இரு நாடுகளுக்கும் இடையிலான பெருமளவிலான அரவணைப்பையும் நட்பையும் சந்தேகத்திற்கு இடமின்றி வெளிப்படுத்துவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சிங்கப்பூர் - இலங்கை உறவுகளின் அன்பான மற்றும் நீண்டகால இயல்பு குறித்து சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கலாநிதி. விவியன் பாலகிருஷ்ணன் தனது கருத்துக்களில் குறிப்பிட்டார். தற்போதைய கோவிட்-19 காலகட்டம் உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் அர்த்தமுள்ள ஒத்துழைப்பு குறித்தும் அவர் கருத்துக்களை வெளியிட்டார்.

சிங்கப்பூரில் பணியாற்றிய முன்னாள் இலங்கை உயர் ஸ்தானிகர்களான சித்ராங்கனி வாகீஸ்வர, நிமல் வீரரத்ன, பேரியல் அஷ்ரப் மற்றும் இலங்கையிலுள்ள சிங்கப்பூரின் கௌரவ தூதுவர் கலாநிதி. ஜயந்த தர்மதாச, இலங்கையில் உள்ள சிங்கப்பூரின் வணிக சமூகம், வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர், வெளிநாட்டு அமைச்சு மற்றும் தபால் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் சிங்கப்பூர் ஷாங்க்ரி லாவில் நிகழ்வொன்று நடைபெற்றதுடன், அந்நிகழ்வில் சிங்கப்பூருக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்தன மற்றும் சிங்கப்பூருக்கான வதியாத உயர் ஸ்தானிகர் சந்திரா தாஸ் ஆகியோர் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் தெற்காசியாவிற்கான பணிப்பாளர் நாயகமும், சஹாரா ஆபிரிக்கப் பணியகத்தின் பிரதி அதிகாரியுமான திரு. கில்பர்ட் ஓ அவர்களின் முன்னிலையில் இரண்டு முத்திரைகளையும் வெளியிட்டனர். வெளியுறவு அமைச்சு, இன்போகொம் ஊடக அபிவிருத்தி அதிகாரசபை, சிங்போஸ்ட் மற்றும் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் சிங்கப்பூரின் இன்போகொம் ஊடக அபிவிருத்தி அதிகாரசபையின் தபால் மற்றும் வாடிக்கையாளர் கொள்கையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி. ரூத் வோங் மற்றும் ஃபிலேட்லி அன்ட் ஸ்டேம்ப்ஸின் துணைத் தலைவர் திருமதி. பெக்கி டியோ ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான 50 ஆண்டுகால நட்புறவைக் குறிக்கும் நினைவு முத்திரைகளை வெற்றிகரமாக வெளியிடுவதற்குப் பங்காற்றியமைக்காக, சிங்கப்பூர் அரசாங்கம், சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு, சிங்கப்பூரின் இன்போகொம் ஊடக அபிவிருத்தி அதிகாரசபை, சிங்போஸ்ட், இலங்கையின் தபால் திணைக்களம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் ஆகியவற்றுக்கு வெளிநாட்டு அமைச்சு தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.

 

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2021 ஜூலை 27

 

 

Please follow and like us:

Close