தலைவர் அவர்களே,
இலங்கையில் 4 மாதங்களுக்கு முன்பாக, உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற மிகவும் வெறுக்கத்தக்க பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகள் எமக்கு ஒரு சோதனையாக அமைந்தன. ஆனபோதிலும், இலங்கையின் பாதுகாப்பு படையினர் நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்பதற்காக, தொடர்ந்து எதிர்த்து நின்ற அதே நேரம், இந்த மன்றத்தின் முன் இலங்கை வழங்கிய உறுதிமொழிளுக்கமைவாக அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தியமையை நாம் கண்கூடாகப் பார்த்தோம்.
இவை; பாதுகாப்பு வேகமாக மறுசீரமைக்கப்பட்டு நாட்டின் சமூக பொருளாதார கட்டமைப்பில் ஏற்பட்ட தாக்கத்தைக் குறைத்து, சர்வதேசத்தில் அதற்கிருக்கும் நற்பெயரை நிலைநாட்டியமை முதல், 4 மாதங்களுக்குள் நாட்டின் அவசரகாலச் சட்டத்தை நீக்கியமை, தடுப்புக்காவலில் உள்ளவர்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சந்திப்பதற்கான முழுமையான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை, புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தைப் புதுப்பிப்பதற்காக சகலராலும் அறியப்பட்டதொரு விவாதத்தில் ஈடுபட்டமை மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினருடன் நடு நிலையான உணர்வுடன் முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை தடைசெய்யும் சட்டத்திருத்தத்தை மேற்கொண்டமை வரையானவையாகும். வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் சிறுபான்மை இன, மத சமூகத்தினருக்கு எதிரான எல்லாவிதமான குற்றங்களையும் தடுப்பதற்கு இந்த அரசாங்கம் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், மத அடிப்படைவாதத்திற்கும் தீவிர பயங்கரவாதத்திற்கும் எதிரான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவத் தளபதியின் நியமனம் பற்றியதில் எடுக்கப்பட்ட தீர்மானமானது, இந்த நாட்டின் தலைவரின் இறையாண்மைக்கு உட்பட்டதென்பது குறிப்பிடப்படவேண்டியதாகும். இலங்கையின் தீர்மானங்களிலும் அரசாங்க சேவைகளின் உள்ளக நிருவாகச் செயன்முறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்த முயலும் வெளிநாட்டவரின் முயற்சிகள் தேவையற்றதும் ஏற்றுக்கொள்ளப்படாததுமாகும். குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த நியமனம் பற்றி சில இருதரப்பு பங்காளர்களும் சர்வதேச நிறுவனங்களும் கருத்து தெரிவித்தலானது வருந்தத்தக்கதென்பதுடன், இயற்கை நீதியின் கொள்கைகளுக்குப் புறம்பானதுமாகும்.
நன்றி.