4வது ஷாங்காய் சீனா சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் 25 இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு

 4வது ஷாங்காய் சீனா சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் 25 இலங்கை நிறுவனங்கள் பங்கேற்பு

4வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி 2021 நவம்பர் 10ஆந் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஏற்பாட்டாளர்களின் கூற்றுப்படி, இந்தக் கண்காட்சியில் பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்காக சுமார் 70.72 பில்லியன் டொலர் பெறுமதியான தற்காலிக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கண்காட்சியின் போது வணிகப் பிரதிநிதிகள் உட்பட மில்லியன் கணக்கானவர்கள் கூடங்களுக்கு  வருகை தந்தனர். தொற்றுநோய் இருந்தபோதிலும், இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இலங்கையின் கண்காட்சிப் பொருட்களைப் பார்வையிட்ட தூதுவர் கலாநிதி பாலித கொஹொன, 25 இலங்கை நிறுவனங்கள் கண்காட்சியில் பங்குகொண்டமை மிகவும் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்டார். சீன வணிகங்களைச் சந்தித்த இந்த நிறுவனங்களுக்கு தமது தயாரிப்புக்களை விளம்பரப்படுத்துவதற்காக நுகர்வோருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இந்தக்  கண்காட்சியில் குறித்த நிறுவனங்கள் பங்கேற்பதற்காக உதவியமைக்காக பெய்ஜிங்கில் உள்ள இலங்கைத் தூதரகம், ஷாங்காயில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம், வெளிநாட்டு அமைச்சு மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்கு அவர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். இலங்கை ஏற்றுமதியாளர்கள் இந்தக் கண்காட்சியை அதிகம் பயன்படுத்திக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் காணப்பட்டன.

இலங்கைக் கூடத்தில்இருந்து இலங்கை தயாரிப்புக்கள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு 330,000 பார்வையாளர்களை ஈர்த்தது.

இரத்தினக்கல் மற்றும் ஆபரணப் பிரிவில் லக்சலாவின் தயாரிப்புக்கள் பல பார்வையாளர்களை ஈர்த்தது. பாகிஸ்தான், இந்தியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்த கண்காட்சியாளர்களால் தூதுவர் கொஹொன அழைக்கப்பட்டார். அவர்கள் இலங்கையின் இரத்தினக் கற்களின் தொகுப்பை தமது பெவிலியன்களில் காட்சிப்படுத்தினர். அடுத்த வருடம் இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் அனுசரணையுடன் அதிகளவான நிறுவனங்கள் பங்குபற்றி இலங்கை இரத்தினக் கற்களை காட்சிப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக  தூதுவர் கொஹொன தெரிவித்தார்.

கலாநிதி கொஹொன சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சி இரத்தினக்கல்; உச்சிமாநாட்டில் முக்கிய குறிப்புப் பேச்சாளராக இருந்தார். இரத்தினக்கல் தொழிலை நவீனமயமாக்கி, நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் அரசாங்கத்தின் திட்டங்களைப் பற்றி  பேசினார்.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் சீனா சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியை பயன்படுத்தி துறைமுக வசதிகள் மற்றும் சேவைகளை கண்காட்சியின் கப்பல் போக்குவரத்துப் பிரிவில் முன்னிலைப்படுத்தியது. மேலும், இது துறைமுகத்தின் தொழில்துறைப் பூங்காவில் முதலீட்டு வாய்ப்புக்களை ஊக்குவித்தது. அதிநவீன வசதிகள் மற்றும் மொத்த சரக்குகளுக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதற்கான திறமையான பணியாளர்களுடன் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் தயாராக இருப்பதாக தலைமை நிறைவேற்று  அதிகாரி தூதுவரிடம் தெரிவித்தார். மேலும் அவர் குறிப்பிடுகையில், துறைமுகத் தொழில் பூங்கா இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அர்ப்பணிக்கப்பட்ட நிலத்தைக் கொண்டுள்ளது. தொழில்கள் மற்றும் தொழில்துறைகளை நிறுவுவதற்காக இது காணப்படுகின்றது. துறைமுகத்தின் தொழில்துறைப் பூங்கா, துறைமுகம், பூங்கா மற்றும் நகரம் போன்ற மூலோபாய 'பி.பி.சி.' யின் வெற்றிகரமான மாதிரியைப் பின்பற்றுகிறது. தமது உற்பத்தி ஆலைக்கு அருகாமையில் துறைமுகத்தை வைத்திருப்பதன் விளைவாக செலவு மற்றும் நேரத்தின் கணிசமான சேமிப்பிலிருந்து முதலீட்டாளர்கள் பயனடைவதற்கு இது உதவும்.

சீனா சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் பங்கேற்பதை வெற்றியடையச் செய்ய அயராத ஆதரவை வழங்கியமைக்காக கலாநிதி. கொஹொன தனது குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்தார். நடைமுறை மற்றும் கணிசமான விளைவுகளைப் பெறுவதற்காக  ஒவ்வொருவரும் மிகவும் ஆக்கப்பூர்வமாக உழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். நாடு அதிகமாக ஏற்றுமதி செய்ய வேண்டும். எமது ஏற்றுமதியை அதிகரிப்பதும், அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதும்தான் இப்போது திறந்திருக்கும் ஒரே வழி. அடுத்த ஆண்டு சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சியில் பங்கேற்பதற்கு இப்போதிலிருந்தே அனைவரும் தயாராக வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

 இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2021 நவம்பர் 15

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close