4வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி 2021 இல் 25 இலங்கை நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களை காட்சிப்படுத்தல்

 4வது சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி 2021 இல் 25 இலங்கை நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களை காட்சிப்படுத்தல்

தற்போது ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் 4வது சர்வதேச இறக்குமதிக் கண்காட்சி 2021 இல் 25 இலங்கை நிறுவனங்கள் தமது தயாரிப்புக்களை காட்சிப்படுத்துகின்றன. எக்ஸ்போவின் முறையான உயர் மட்ட தொடக்க நிகழ்வில் ஜனாதிபதி ஷி ஜின்பிங் மெய்நிகர் ரீதியான உரையாற்றினார். உணவு மற்றும் பானங்கள் பிரிவில் பத்தொன்பது நிறுவனங்கள் பங்கேற்பதுடன், ஒரு நிறுவனம் நுகர்வோர் பொருட்கள் பிரிவில் தனது தயாரிப்புக்களை காட்சிப்படுத்தும் அதே வேளை, இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் பிரிவில் ஐந்து நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்கின்றன. இந்த எக்ஸ்போவில் லக்சலா தனது தயாரிப்புக்களை முதல் முறையாக காட்சிப்படுத்துகின்றது.

தூதுவர் கலாநிதி பாலித கொஹொன உணவு மற்றும் பானங்கள் பிரிவையும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணப் பிரிவையும் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

தொடக்க விழாவில் தூதுவர் பேசுகையில், 4வது சீன சர்வதேச இறக்குமதி கண்காட்சியானது, தமது தயாரிப்புக்களை பாரிய மற்றும் இலாபகரமான சீன நுகர்வோர் சந்தையில்  காட்சிப்படுத்துவதற்கானதொரு விதிவிலக்கான வாய்ப்பை இலங்கை நிறுவனங்களுக்கு வழங்குகின்றது எனக் குறிப்பிட்டார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்கு இலங்கைக்கு தெளிவான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் தனியார் துறையினர் கணிசமான பங்களிப்பை வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது, வர்த்தக இருப்பு பாரிய வித்தியாசத்தில் சீனாவுக்கு சாதகமாக உள்ளது. கணிசமான சிரமங்களை, குறிப்பாக, தொற்றுநோய் தொடர்பான கட்டுப்பாடுகளைக் கடந்து, எக்ஸ்போவில் தமது தயாரிப்புக்களை காட்சிப்படுத்திய நிறுவனங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைமையில் 2022 இல் நடைபெறவுள்ள அடுத்த எக்ஸ்போவில் இலங்கை நிறுவனங்களை பங்குபற்றுமாறு அவர் ஊக்குவித்தார்.

சிலோன் டீ, சுவையூட்டிகள், தேங்காய் மற்றும் தென்னை நார் உற்பத்திகள், நீரற்ற இயற்கைப் பழங்கள், இயற்கை பழ உற்பத்திகள், இயற்கைத் தேன், தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் ஆரோக்கிய உற்பத்திகள், கித்துல் உற்பத்திகள், எள், தக்காளி சோஸ், மிளகாய் சோஸ், மீன் சோஸ், மிளகாய் மற்றும் பூண்டு சோஸ், இனிப்பு மிளகாய் சோஸ், மயோனைஸ், ஒயிஸ்டர் சோஸ், பீ.பீ.க்யூ. சோஸ், பிஸ்கட் மற்றும் ஏனைய தின்பண்டங்கள் ஆகியன உணவு மற்றும் பான பிரிவில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், லயன் ப்ரூவரியின் பானங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஐந்து நிறுவனங்களும் லக்சலாவும் இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணப் பிரிவில் பிரசன்னமாகியிருந்தன.

பல நாடுகள், சீன சந்தையின் மதிப்பை உணர்ந்து, கவர்ச்சிகரமான காட்சிகளை உருவாக்க கணிசமான தொகையையும் ஆற்றலையும் செலவிட்டன. இவற்றுக்கு தானாக மக்கள் கூட்டத்தினர் கவரப்பட்டனர். சிலோன் டீ, இரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தேங்காய் உற்ப்திகள் போன்றவற்றை எதிர்கால சீன சர்வதேச இறக்குமதிக் கண்காட்சிகளில் திறம்பட மேம்படுத்துவதற்கான சாத்தியங்கள் கணிசமானவையாகும்.

இலங்கையின் பங்கேற்பை எளிதாக்கியதற்காக இலங்கையின் வெளிநாட்டு அமைச்சு, ஷங்காயில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றுக்கு தூதுவர் கொஹொன நன்றிகளைத் தெரிவித்தார். எக்ஸ்போவில் இலங்கையின் பிரசன்னத்தை மேம்படுத்துவதற்காக சீஸ்லேட், லக்சலா, இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கிய பங்களிப்பையும் அவர் பாராட்டினார். இந்தக் கண்காட்சி இலங்கைக்கு வெற்றிகரமானதாக அமைவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தூதரகம்,

பெய்ஜிங்

2021 நவம்பர் 09

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close