17 நாடுகளின் தூதுவர்கள் தமது நற்சான்றிதழ்களை வழங்கிய பின்னர் அவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

 17 நாடுகளின் தூதுவர்கள் தமது நற்சான்றிதழ்களை வழங்கிய பின்னர் அவர்களுடன் வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

17 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்களை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.  பீரிஸ்  வெளிநாட்டு அமைச்சில் வைத்து டிசம்பர் 22ஆந் திகதி சந்தித்தார். டிசம்பர் 21ஆந் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் 17 தூதுவர்களும் தமது சான்றுகளை வழங்கியதைத் தொடர்ந்து இந்த சந்திப்பு இடம்பெற்றது. இவர்களுள் அநேகமானோர் புது தில்லியைத் தளமாகக் கொண்ட வதிவிடமல்லாத தூதரகத் தலைவர்களாவர்.

தூதரகத் தலைவர்களை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், அவர்கள் அனைவருடனும் இலங்கை அரசாங்கம் வலுவான மற்றும் கணிசமான உறவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழான வெளியுறவுத் திட்டத்தின் போது, ஆபிரிக்க கண்டத்தில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என அரசாங்கம் உணர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார். ஆபிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்காக திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் உள்ள தற்போதைய அரசாங்கம் ஆபிரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கி,  ஆபிரிக்க ஒன்றியத்துடன் உறவுகளை ஒருங்கிணைப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் முன்னேற்றங்கள் தொடர்பில் வெளிநாட்டு அமைச்சர் தூதுவர்களுக்கு விளக்கினார். தற்போதைய அரசாங்கத்தால் திட்டமிட்ட நாட்டின் கட்டமைப்புத் திட்டங்கள், முன்னுரிமைகள் மற்றும் கட்டமைப்புக்கள் கோவிட்-19 இனால் பாதிக்கப்பட்டிருப்பினும் கூட, நாடு கணிசமான வெற்றியை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். 30 வயதிற்குட்பட்ட 90% நபர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதுடன், தற்போது நாட்டில் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார். இலங்கையின் திறமையான சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் விநியோக அமைப்பு தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர், தடுப்பூசிகள் நாட்டின் தொலைதூரப் பகுதிகளை அடைவதற்காக ஆயுதப் படைகளால் வழங்கப்பட்ட ஆதரவு குறித்து குறிப்பிட்டார். நாட்டின் ஏற்றுமதி வருமானத்தை பாதிக்காது, மக்கள் தொடர்ந்தும் தொழில் புரிவதனை உறுதிப்படுத்தும் வகையில், இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சூழலுக்கு ஏற்ப தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உருவாக்கும் ஆடைத்தொழில் போன்ற பொருட்களின் தன்மையை மாற்றிய தனியார் துறையின் பின்னடைவு குறித்து தூதுவர்களுக்கு சுருக்கமாக விளக்கினார். பணம் அனுப்புதல் குறித்து குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், வெளிநாடுகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் தமது சொந்த நாட்டிற்கு திரும்பி வருவதால், பணம் அனுப்பும் நடைமுறை பாதிக்கப்பட்டுள்ளதாக ஒப்புக் கொண்டார். பல நாடுகளுடனான அரசாங்கங்களுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக அவர்  மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை 30 வருடகால மோதலினால் அழிக்கப்பட்டதாக விளக்கிய வெளிநாட்டு அமைச்சர், அத்தகைய அளவிலான மோதல்கள் எச்சங்களை விட்டுச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டார். ஏனைய நாடுகள் மீட்சியடைய பல தசாப்தங்கள் எடுத்ததாகவும், எஞ்சிய பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக இலங்கை ஒவ்வொரு முயற்சியையும் முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மோதல்களினால் எஞ்சிய பிரச்சினைகளை சமாளிப்பதில் பணியாற்றும் காணாமல் போனோர் அலுவலகம், விசாரணை ஆணைக்குழுக்கள், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு போன்ற இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வழிமுறைகள் குறித்து குறிப்பிட்டார். அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்திற்கான இலங்கையின் உறுதிப்பாடு தொடர்பில் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், மனித உரிமைகள் ஆணைக்குழுவானது உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பெண் நீதியரசரால் தலைமை தாங்கப்படுவதாகவும், தீர்மானங்களை மேற்கொள்வதில் அதிகமான பெண் பிரதிநிதித்துவத்தை நோக்கி இலங்கை பணியாற்றுவதாகவும்  தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை எப்பொழுதும் ஈடுபட்டுள்ளதுடன், தொடர்ந்தும் சுமுகமாக ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், நாட்டின் உள்ளக விவகாரங்களிலான அதன் அதிகமான தலையீடுகளை எதிர்த்ததாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு எதிராகப் பயன்படுத்துவதற்காக தரவுகளை சேகரிக்க வேண்டும் என்பதே ஐ.நா. வின் ஒரே நோக்கமாதலால், அதனால் 'விசேட வழிமுறை' அமைக்கப்படுவதை அமைச்சர் எதிர்த்தார். இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்கான எந்தவொரு தரவும் ஆதாரமாக அமையவில்லை என  அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களின் புரிந்துணர்வு மற்றும் சர்வதேச மேடைகளில்  இலங்கைக்கான ஆதரவு ஆகியவற்றிற்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார். ஒரு தனிப்பட்ட நாட்டின் கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்தும் தீர்வுகளை உருவாக்குவதற்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு இடமும் நேரமும் வழங்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் பெப்ரவரி 2022 இல் நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கைக்கான தூதுவர்களுக்கு அழைப்பு விடுத்து இந்த சந்திப்பை நிறைவு செய்த அவர், ஐ.நா. அரங்கில் வலுவான இருதரப்பு உறவுகளையும் ஒத்துழைப்பையும்  இலங்கை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

கலந்து கொண்ட 17 நாடுகளின் தூதரகத் தலைவர்களும் பின்வருவோராவர்:

        1. சியரா லியோன் குடியரசின் அரசாங்கம் - உயர்ஸ்தானிகர் ஏர்னஸ்ட் எம்பைம்பா
        2. ஜோர்தான் ஹஷிமைட் இராச்சியத்தின் அரசாங்கம் - தூதுவர் முஹமத் எல்-கெய்ட்
        3. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின் அரசாங்கம் - தூதுவர் சோ ஹூய் சோல்
        4.  ருவாண்டா குடியரசின் அரசாங்கம் - உயர்ஸ்தானிகர் முகங்கிரா ஜக்குலின்
        5. பொட்ஸ்வானா குடியரசின் அரசாங்கம் - உயர்ஸ்தானிகர் கில்பர்ட் ஷிமானே மங்கோல்
        6. மோல்டா குடியரசின் அரசாங்கம் - உயர்ஸ்தானிகர் ரூபன் கௌசி
        7.  ஹங்கேரியின் அரசாங்கம் - தூதுவர் ஆண்ட்ராஸ் லாஸ்லோ கிரலி
        8. மொரிட்டானியா இஸ்லாமியக் குடியரசின் அரசாங்கம் - தூதுவர் முஹம்மத் அஹ்மத் ராரா
        9. துனிசியா குடியரசின் அரசாங்கம் - தூதுவர் ஹயத் தல்பி பிலேல்
        10.  ஆர்ஜென்டினா குடியரசின் அரசாங்கம் - தூதுவர் ஹ்யூகோ ஜேவியர் கோபி
        11. கயானா கூட்டுறவுக் குடியரசின் அரசாங்கம் - உயர்ஸ்தானிகர் சர்ரண்டாஸ் பெர்சாட்
        12. எகிப்து அரபுக் குடியரசின் அரசாங்கம் - தூதுவர் மகேத் மொஸ்லே
        13. டொமினிக்கன் குடியரசின் அரசாங்கம் - தூதுவர் டேவிட் இம்மானுவேல் புய்க்
        14. நைஜீரியா கூட்டாட்சிக் குடியரசின் அரசாங்கம் - உயர்ஸ்தானிகர் அஹமத் சுலே
        15. இந்தோனேஷியா குடியரசின் அரசாங்கம் - தூதுவர் டெவி குஸ்டினா டோபிங்
        16.  ஸ்பெயின் இராச்சியத்தின் அரசாங்கம் - தூதுவர் ஜோஸ் மரியா டொமிங்குஸ்
        17. ஸ்லோவேனியா குடியரசின் அரசாங்கம் - தூதுவர் மாதேஜா கோஷ்

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 டிசம்பர் 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close