வொஷிங்டன் டி.சி. யில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் 12 மில்லியன் அமெரிக்க  டொலர் பெறுமதியான மருத்துவ உதவி ஒருங்கிணைப்பு

வொஷிங்டன் டி.சி. யில் உள்ள இலங்கைத் தூதரகத்தினால் 12 மில்லியன் அமெரிக்க  டொலர் பெறுமதியான மருத்துவ உதவி ஒருங்கிணைப்பு

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகம், புகழ்பெற்ற அமெரிக்க மனிதாபிமான நன்கொடை அமைப்புக்களுடன் இணைந்து பணியாற்றி, 2022 ஜூலை முதல் அக்டோபர் வரை இலங்கைக்கு இலவச மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை வழங்குவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. மூன்று நன்கொடைப் பொதிகள் ஏற்கனவே சுகாதார அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், நான்காவது பொது ஒக்டோபர் 02ஆந் திகதி தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 4 பொதிகளினதும் மொத்தப் பெறுமதி 12,645,150 அமெரிக்க டொலர்கள் ஆகும். இன்றைய மாற்று  விகிதத்தில், இது அண்ணளவாக 4.6 பில்லியன் இலங்கை ரூபா (சரியாக 4,588,925,697 இலங்கை ரூபா) ஆகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க நன்கொடை நிறுவனங்களை அணுகிய அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க, அதிக தேவையுடைய நூறாயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு சரியான நேரத்தில் மற்றும் சாத்தியமான வகையில் உயிர்காக்கும் உதவியை நல்கிய தாராள மனப்பான்மைக்காக, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல், ஹோப் வேர்ல்ட்வைட் மற்றும் அமெரிக்கெயார்ஸ் ஆகிய மூன்று நன்கொடையாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத்  தெரிவித்தார். பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவினருக்கு உதவிகளை வழங்குவதற்காக மனிதாபிமான அமைப்புக்கள் மற்றும் முகவரமைப்புக்களுடன் இணைந்து தொடர்ந்தும் பணியாற் றுவதற்கு தூதுவர் எதிர்பார்த்துள்ளார்.

ஜூலை 2022 இல் தொடங்கி, ஹார்ட் டு ஹார்ட் இன்டர்நெஷனல் 9.131 மில்லியன் டொலர் பெறுமதியான இரண்டு நன்கொடைப் பொதிகளை அனுப்பியுள்ளது. அமெரிக்கெயார்ஸில் இருந்து வந்த நன்கொடைப் பொதி செப்டம்பர் மாதம் கொழும்பை வந்தடைந்ததுடன், இதன் பெறுமதி 773,000 டொலர்களுக்கும் அதிகமாகும்.  2.74 மில்லியன் டொலர் பெறுமதியான ஹோப் வேர்ல்ட்வைட்டின் கடைசிப் பொதி அக்டோபர் முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையவுள்ளது. இந்த நன்கொடைப் பொதிகளைப் பொறுப்பேற்கும் சுகாதார அமைச்சு, மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான உள்நாட்டுப் பெறுநர்கள் மற்றும் இடங்களைக் குறிப்பிடும் வகையிலான விரிவான விநியோக அறிக்கைகளை நன்கொடையாளர்களுக்கு வழங்கவுள்ளது. (முற்றும்)

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகம்,

வொஷிங்டன் டி.சி

2022 அக்டோபர் 03

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close