வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே அவர்களுடன் இணைந்து கௌரவ வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன 2021 மார்ச் 13ஆந் திகதி, சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு திருகோணமலையில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை சம்பிரதாய பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார். பொதுமக்களுக்கு வழங்கும் சேவைகளின் செயற்றிறனை மேம்படுத்துவதன் மூலமாக, 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' என்ற அரசாங்கத்தின் தேசிய கொள்கைக் கட்டமைப்பிற்கு இது உத்வேகம் அளிக்கின்றது.
இந்த கொன்சியூலர் அலுவலகத்தைத் திறந்து வைப்பதானது, கிழக்கு மாகாணம் மற்றும் அதன் அண்மித்த பகுதிகளில் உள்ள பொது மக்கள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்குச் செல்லாமல் கொன்சியூலர் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு வழிவகுக்கும்.
பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தை நிறுவுவதன் மூலம், வெளிநாடுகளில் பயன்படுத்துவதற்கான பிறப்பு, திருமணம், இறப்புச் சான்றிதழ்கள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றை சான்றுறுதிப்படுத்துதல், வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு உதவிகளை வழங்குதல், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களின் நிவாரணம் மற்றும் இழப்பீட்டுக் கோரிக்கைகளை எளிதாக்குதல் மற்றும் வெளிநாட்டிலிருந்து இறந்த மனித உடல்களை திருப்பிக் கொண்டு வருதல் போன்ற பல கொன்சியூலர் சேவைகளை பொது மக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
வெளிநாட்டு அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் அலுவலகம்
முகவரி: முதலமைச்சர் செயலகம், உள் துறைமுக வீதி, திருகோணமலை
செயற்படும் நேரம்: திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 8:30 மணி முதல் பிற்பகல் 4:15 வரை
மின்னஞ்சல்: trincomalee.consular@mfa.gov.lk
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 மார்ச் 11