வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸினால் முன்மொழியப்பட்ட தென் கொரியாவுக்கான விஷேட முதலீட்டு  வலயம்

 வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸினால் முன்மொழியப்பட்ட தென் கொரியாவுக்கான விஷேட முதலீட்டு  வலயம்

 

கொரியக் குடியரசின் சியோலில் இலங்கை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் கொரியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் திரு. சுங் யூய்-யோங் ஆகியோருக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, வர்த்தகம்  மற்றும் முதலீடு, அரசியல் ஒத்துழைப்பு, பாதுகாப்பு முன்முயற்சிகள், சுற்றுலா மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து கவனம்  செலுத்தப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையிலான 44 ஆண்டுகால உறவின் போது உருவாகியிருந்த பன்முக உறவுகளுக்கும், அதன் தற்போதைய  வலுவான தன்மைக்கும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் கௌரவமளித்தார்.

2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பில் நடைபெற்ற கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தக ஆணைக்குழுவின் முதலாவது  கூட்டம் தொடர்பில் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார். பல முக்கிய விடயங்களை முன்னெடுப்பதற்காக அடுத்த சந்திப்பிற்கான ஆரம்பத் திகதியை ஏற்பாடு செய்வதற்கு முன்னுரிமையளிப்பதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சமநிலை தென் கொரியாவுக்கு சாதகமாக அமைவதுடன், இலங்கையில் இருந்து கொரியக்  குடியரசுக்கான ஏற்றுமதிகள் அண்ணளவாக 71 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் அதே வேளை, கொரியக் குடியரசில் இருந்து இலங்கைக்கான இறக்குமதிகள் சுமார் 192 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. சுவையூட்டப்பட்ட தேநீர் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களுக்கான குறிப்பிட்ட சுங்க வரிகள் உட்பட, சில குறிப்பிடத்தக்க வர்த்தகத் தடைகளை சமாளிப்பதற்கான நடைமுறை வழிகளை ஆராய்வதற்கு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

கொரியக் குடியரசின் எக்ஸிம் வங்கியிடமிருந்தான மேம்படுத்தப்பட்ட டொலர் உதவி மற்றும் கொய்காவிடமிருந்தான அதிகரித்த அபிவிருத்தி உதவி ஆகியவற்றுக்கான அமைச்சர் பீரிஸின் கோரிக்கைக்கு அமைச்சர் சுங் யூய்-யோங் சாதகமாக பதிலளித்தார்.  இலங்கையில் தென் கொரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறிப்பாக நீர் முகாமைத்துவம், கழிவுகளை அகற்றுதல் மற்றும்  இடைநிலைக் கல்வி ஆகிய துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகவும் பயனுள்ள தாக்கங்களை அமைச்சர்கள் மீளாய்வு செய்தனர். இலங்கையில் குறிப்பாக கணினித் தொழில்நுட்பம், இலத்திரனியல் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற துறைகளில் அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கு தென் கொரியாவின் தனியார் துறையை ஈடுபடுத்துவதாக கொரியக் குடியரசின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த காலப்பகுதியில் கொரியக் குடியரசின் தொழில் முயற்சியாளர்களுக்காக இலங்கையில் விஷேட முதலீட்டு வலயம் இருந்தமையை அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார். கொரியா வர்த்தக சங்கம் அப்போது இலங்கையில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தது.  இம்முயற்சியை புத்துயிர் பெறச் செய்வது குறித்து பரிசீலிப்பதானது சரியான நேரத்திலானதாக அமையும் என அமைச்சர்கள் ஒப்புக்கொண்டதுடன், அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான உறுதியையும் தெரிவித்தனர்.

கொரியக் குடியரசில் இருந்து இரண்டு கடற்படைக் கப்பல்களைப் பெறுவதற்கான தனது நாட்டின் ஆர்வத்தை இலங்கையின்  வெளிநாட்டு அமைச்சர் மீண்டும் வலியுறுத்தினார்.

சுற்றுலாவைப் பொறுத்தமட்டில், கொரியக் குடியரசில் இருந்து கொவிட்-19 பரவுவதற்கு முன்னர் சுமார் 12,500 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கொழும்பிற்கும் சியோலுக்கும் இடையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸினால் நேரடி  விமான சேவை மேற்கொள்ளப்படுவதால், கொரியக் குடியரசில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதற்கும், இலங்கையில் விருந்தோம்பல் துறையில் அதிகமான தென் கொரிய முதலீட்டைத் தூண்டுவதற்கும் கொரியக் குடியரசின் அமைச்சர் ஒப்புக்கொண்டார்.

இலங்கையில் கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான கொரியக் குடியரசின் தாராளமான உதவிக்கு அமைச்சர் பீரிஸ் பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேலதிக உதவிக்கான உறுதிமொழிகளுடன், அண்ணளவாக 300,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான  உபகரணங்கள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. கொரியக் குடியரசில் பணிபுரியும் 22,000 இலங்கையர்களுக்கு தடுப்பூசிகளை ஏற்றுவதை விரைவுபடுத்துவதில் இலங்கை அமைச்சர் கொரியக் குடியரசின் ஒத்துழைப்பைக் கோரினார்.

ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச அரங்குகளிலான ஒத்துழைப்பு குறித்து இரண்டு வெளிநாட்டு  அமைச்சர்களும் விரிவான கலந்துரையாடல்களை நடாத்தினர்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2022 ஜனவரி 07

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close