வெளிநாட்டமைச்சில் இராஜதந்திர சமூகத்தினருடன் வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ் சந்திப்பு

வெளிநாட்டமைச்சில் இராஜதந்திர சமூகத்தினருடன் வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ் சந்திப்பு

வெளிநாட்டமைச்சர் ஜி எல் பீரிஸ், 13 அக்டோபர் 2021 அன்று, வெளிநாட்டமைச்சின் கலையரங்கத்தில்  இராஜதந்திர சமூகத்தினரைச் சந்தித்து உரையாற்றினார். அங்கீகரிக்கப்பட்ட கொவிட் வழிகாட்டலுக்கமைவாக நடாத்தப்பட்ட இக்கூட்டத்தில் கொழும்பிலுள்ள இராஜதந்திர சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தை ஆரம்பித்துப் பேசிய அமைச்சர், தாம் சில வாரங்களுக்கு முன்னர் வெளிநாட்டமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ஒருங்கிணைந்த இராஜந்தந்திர குழுவினரிடம் பேசும் வாய்ப்பினைப் பெற்றது குறித்து நன்றி தெரிவித்தார். தாம் விரும்பியது போல, முன்னதாகவே இக்கூட்டம் இடம்பெற முடியாமைக்கு கொவிட் நோய்ப்பரவல் சூழ்நிலை காரணமென அமைச்சர் குறிப்பிட்டார். இக்கூட்டத்திற்கான நோக்கம் இராஜதந்திரிகளின் நலன்கள் தொடர்பிலான சமீபத்தைய மேம்பாடுகள் குறித்து மரியாதை ரீதியில் சுருக்கமாக உரைப்பதாகும்.

மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி போடும் முயற்சியைத் தொடர்ந்து, நாட்டில் கொவிட் சூழ்நிலை மேம்பட்டுள்ளதாக தாம் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக அமைச்சர் தெரிவித்தார். மோசமான சவால்களுக்கு மத்தியிலும் 70 சதவீதமான சனத்தொகையினருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் நாட்டைப் படிப்படியாகத் திறப்பதற்கு முடிந்துள்ளது. தடுப்பூசி சான்றிதழ்களை பரஸ்பரம் ஏற்றுக்கொள்ள வசதியளிப்பதுடன், சுற்றுலாத்துறை மற்றும் பொருளாதார செயற்பாட்டை மீட்டெடுப்பதில் சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பையும் அமைச்சர் கோரினார். கொவிட் நோய்ப்பரவலின்போது இலங்கைக்கான உதவிகள் மற்றும் ஆதரவினை வழங்கியமைக்காக, சகல ஐ.நா முகவரமைப்புகள் உட்பட, கொழும்பிலுள்ள அனைத்து வெளிநாட்டு தூதரக பணியகங்கள், நன்கொடையாளர், கொழும்பிலுள்ள நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் உள்ளிட்ட தனது வெளிநாட்டு ஈடுபாடுகள் மற்றும் தாம் பங்கேற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் மேதகு ஜனாதிபதியில் உரை தொடர்பில் இராஜந்தந்திர சமூகத்தினரிடம் அமைச்சர் தொகுத்துரைத்தார்.  ஐ.நா பொதுச்சபையில், நோய்ப்பரவல், காலநிலை மாற்றம், எரிசக்தி, நிலையான அபிவிருத்திக் குறிக்கோள்கள், உணவுப் பாதுகாப்பு, பயங்கரவாத ஒழிப்பு ஆகியவை தொடர்பில் உலகின் சிறிய, பெரிய நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் அணுகவேண்டிய உலகளாவிய முயற்சிகளில் இலங்கையும் ஒன்றுசேர்ந்துள்ளது. இனிவரும் பாரிய சர்வதேச நடவடிக்கையான, கிளாஸ்கோவில் இடம்பெறவுள்ள காலநிலை மாற்ற மாநாட்டில் - ‘COP 24’ - மேதகு ஜனாதிபதியுடன் வெளிநாட்டமைச்சரும் கலந்துகொள்ளவுள்ளார். அங்கு, காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நாடான இலங்கை, இது தொடர்பில் தனது கடப்பாடுகளை மேலும் வலியுறுத்தும்.

மேலும், ஐ.நா மனித உரிமை கழகத்தின் 48 ஆவது அமர்வின்போது, அக்கழகத்துடனான தொடர்ந்துவரும் ஒத்துழைப்பு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள்  மூலமாக மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றம் தொடர்பான தனது சுருக்கமான அறிக்கை தொடர்பாகவும் அமைச்சர் நினைவுகூர்ந்தார். இதுதொடர்பிலான சவால்களை ஏற்றுக்கொள்வதற்கும் உள்நாட்டு சிவில் சமூகத்தினருடனும் ஐ.நா உள்ளிட்ட எமது சர்வதேச பங்காளிகளுடனும் நேர்மையான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கும் இலங்கை தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனபோதிலும், உள்நாட்டு செயன்முறைகள் நடைபெற்றுவரும்போது, வெளிப்புற பொறிமுறை ஒன்றை ஸ்தாபிப்பதை இலங்கை நிராகரிக்கிறது. அரசியலமைப்பு மீள உருவாக்கம் மற்றும் மாகாண சபை தேர்தல்களின் செயற்பாடுகளின் முன்னேற்றங்கள் தொடர்பான தகவல்களையும் அமைச்சர் பகிர்ந்துகொண்டார்.

மேலும், கூட்டு ஆணைக்குழுவின் பின்னணியில், ஜி.எஸ்.பி பிளஸ் நடைமுறைப்படுத்தலை மீளாய்வு செய்யவதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய விஜயம் பற்றியும் அமைச்சர் குறிப்பிட்டார்.  கலந்துரையாடல்கள் மிகவும் மரியாதையான முறையில் இடம்பெற்றதையும் நிலுவையிலுள்ள பிரச்சனைகளை அதிகாரிகள் குறித்துக்கொண்டதையுமிட்டு அமைச்சர் தனது திருப்தியை வெளிப்படுத்தினார். ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை தொடர்வதானது எமது ஆடைத்துறைக்கு மட்டுமன்றி, இருதரப்பு வர்த்தகத்தின் பிற துறைகளுக்கும் எத்தனை பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் நினைவுபடுத்தினார்.

கொவிட் இற்குப் பிந்திய பொருளாதாரத்தில் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைகள் தொடர்வது மிகவும் முக்கியமானதாகும். நிலையான அபிவிருத்திக் குறிக்கோள்களை அடைவதில் இலங்கையின் முயற்சிகளுக்கு மட்டுமன்றி எமது நாட்டு மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதும் எமது சகல சர்வதேச பங்காளர்களின் ஒத்துழைப்பு தேவை என அமைச்சர் குறிப்பிட்டார். கொவிட் 19 எமது திட்டங்களை குறிப்பிடத்தக்க வகையில் தாக்கியுள்ளதுடன் நாம் அதிலிருந்து மீளவேண்டும்.

அமைச்சரின் ஈடுபாட்டிற்கும், தமது நலன்கள் தொடர்பான விடயங்களில் வெளிப்படுத்தும் வாய்ப்பினை வழங்கியமைக்கும் இராஜதந்திர சமூகத்தின் உறுப்பினர்கள் அமைச்சரிடம் நன்றி தெரிவித்தனர். இராஜதந்திர சமூகத்தினருடன் தான் அடிக்கடி சந்திப்பினை தொடர்வதற்கு எண்ணியுள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்.

 வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 அக்டோபர் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close