வெளிநாட்டமைச்சருடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வெளிநாட்டமைச்சருடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் திரு கோபால் பாக்லே அவர்கள், 03 ஆகஸ்ட் 2021 அன்று, வெளிநாட்டமைச்சர் கௌரவ தினேஷ் குணவர்த்தனவைச் சந்தித்தார்.

இதன்போது, கொவிட் 19 ஐ எதிர்ப்பதில் இலங்கைக்கு இந்திய அரசாங்கமும் அதன் மக்களும் வழங்கிவரும் உதவிக்கு வெளிநாட்டமைச்சர் குணவர்த்தன நன்றி தெரிவித்ததுடன், பொருளாதார நடவடிக்கைகளுக்காக நாட்டைத் திறப்பது குறித்தும் ஆலோசித்தார். இந்தியர்கள் மீது விதிக்கப்பட்ட நுழைவுத்தடைகள் நீக்கப்பட்டதை வரவேற்ற உயர்ஸ்தானிகர்,  முழுதாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களை இலங்கைக்குள் நுழைய அனுமதித்தமையானது இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு மட்டுமன்றி பெரும் பொருளாதார நன்மைகளையும் ஈட்டித் தரும் என்று தெரிவித்தார்.

இக்கலந்தாலோசனையின்போது, இரு நாடுகளுக்கிடையிலும் பல நூற்றாண்டு காலமாக பகிர்ந்துகொள்ளப்படும் கலாச்சார விழுமியங்களைக் கொண்டாடும் நோக்குடன், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை கூட்டு நினைவேந்தலாக நாடாத்தும் ஆலோசனை முன்மொழியப்பட்டது. கலாச்சார மற்றும் பௌத்த யாத்திரைகளை உள்ளடக்கிய சமய நிகழ்வுகளுடனான இக்கலாச்சார மைல்கல்லை நினைவுகூருதல், முக்கியமாக, பௌத்த புனிதச் சின்னங்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவருதல் இருதரப்பு நல்லுறவுகளை மேலும் வளர்க்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு இலங்கை அரசாங்கம் வழங்கும் முன்னுரிமையைக் கோடிட்டுக் காட்டிய அமைச்சர்,  இலங்கையின் நிலைபேறான எரிசக்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்திய தனியார் துறைகளுக்கு அழைப்பு விடுத்தார். இலங்கையின் முயற்சியை அங்கீகரித்த உயர்ஸ்தானிகர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில், குறிப்பாக சூரிய சக்திக்கான முதலீட்டில் இந்திய முதலீட்டாளர்கள் ஆர்வங்கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது; புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் கூட்டு ஆணைக்குழு, விமான இணைப்பு, பரஸ்பர வர்த்தக மற்றும் முதலீட்டு முயற்சிகளை மேற்கொள்ளுதல், இலங்கை திரைப்படங்களை டிஜிட்டல் மயப்படுத்தலுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப, பொருளாதாரக் கூட்டுறவிற்கான முயற்சியில் (BIMSTEC) பிராந்திய கூட்டுறவு போன்ற பரஸ்பர நலன்களைக் கொண்ட பல்வேறு துறைகள் குறித்தும் நீண்ட ஆலோசனைகள் நடாத்தப்பட்டன.

வெளிநாட்டமைச்சு

கொழும்பு

05 ஆகஸ்ட் 2021

Please follow and like us:

Close