லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றிற்காக உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன மற்றும் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் ஊழியர்கள் 2021 அக்டோபர் 15ஆந் திகதி அழைக்கப்பட்டனர்.
ஆண்டுதோறும் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்கும் லண்டனில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், உலகளாவிய உயிரியல் மற்றும் புவியியல் பல்லுயிரியலைக் குறிக்கும் 80 மில்லியன் மாதிரிகளைக் கொண்ட ஒரு முன்னணி விஞ்ஞான ஆராய்ச்சி மையமாகும். இந்த அருங்காட்சியகம் 1881 ஏப்ரல் 18ஆந் திகதி முதலாவதாக திறந்து வைக்கப்பட்டது. இது 1963 வரை பிரித்தானிய அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியாக இருந்ததுடன், 1992 இல் 'இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்' என உத்தியோகபூர்வமாக மறுபெயரிடப்பட்டது.
விஞ்ஞானக் கொள்கை மற்றும் தொடர்பாடல் தலைவர் ஜோன் ஜெக்சன், பாசி, பூஞ்சை மற்றும் தாவரப் பிரிவின் முதன்மைக் கண்காணிப்பாளர் கலாநிதி. மார்க் கரீன், லைசன்ஸ் அண்ட் ஸ்லிம் மோல்ட்ஸின் சிரேஷ்ட கண்காணிப்பாளர் கலாநிதி. கோதமி வீரகோன், முதுகெலும்புகள் பிரிவின் பிரிவின் தலைவரான ஆராய்ச்சியாளர் கலாநிதி. டேவிட் கோவர் மற்றும் கடன்கள் மற்றும் கண்காட்சிகள் ஒருங்கிணைப்பு உதவியாளர் ஜாஸ்மின் பெரேரா ஆகியோர் பிரதிநிதிகளை வரவேற்றனர்.
இலங்கையின் விதிவிலக்கான விலங்கியல் பல்லுயிர் மற்றும் தேசிய வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் இலங்கை நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு திட்டங்கள் குறித்த விளக்கக்காட்சி அமர்வு அருங்காட்சியகத்தின் அதிகாரிகளால் நடத்தப்பட்டதுடன், பின்னர் அருங்காட்சியகத்தைச் சுற்றி ஒரு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள சார்ல்ஸ் டார்வினால் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை உள்ளடக்கிய உலகின் பழமையான கிரிப்டோகாமிக் ஹெர்பேரியத்தை தூதுக்குழுவினர் பார்வையிட்டனர். இந்த அருங்காட்சியகத்தில் 300 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இலங்கையிலிருந்து சேகரிக்கப்பட்ட தாவர மாதிரிகளும் உள்ளன.
இந்த விஜயத்தை ஏற்பாடு செய்தமைக்காக கலாநிதி. கோதமி வீரகோனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் இலங்கை உயர்ஸ்தானிகராலயம், முன்னணி தாவரவியலாளர், செடிகள் சார்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் என பல்லுயிரியலைப் பாதுகாப்பதிலான அவரது பங்களிப்பை அங்கீகரிக்கின்றது. தேசிய புவியியல் சகூகத்தின் மதிப்புமிக்க 'வருடாந்த வழங்குனர்' விருதைப் பெற்ற தெற்காசியாவின் முதலாவது பெண் விஞ்ஞானி இவராவார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
லண்டன்
2021 அக்டோபர் 22